மது---மரணத்தின் துவக்கம்----

அமாவாசை இரவு 7:20pm மணி அளவில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாழடைந்த கட்டிடத்தின் உள்ளே இருந்து பெண் குழந்தையின் அலறல் சத்தம் மெல்ல கேட்கிறது. அந்தப் பாழடைந்த கட்டிடத்தை நெருங்க நெருங்க அலறல் சத்தம் சற்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அருகில் சென்று பார்த்தால் பட்டாப்பட்டிக்கு மேல் மடித்துக் கட்டிய லுங்கிச் சட்டையுடன் கையில் பாதிக் குடித்த மதுப் போத்தலுடன் ஒரு நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு எதிரில் நெருப்புக்குப் பக்கத்தில் துடிக்கின்ற புழுவைப்போல் அந்தப் பெண் குழந்தை பயத்துடனும் நடுக்கத்துடனும் அழுது கொண்டிருந்தாள். இவன் நெருங்கிச் செல்ல செல்ல அக்குழந்தை செய்வதறியாமல் பயத்தில் அலறுகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு அந்தக் குழந்தையின் பெரும் அலறல் சத்தத்தோடு உயிர் மூச்சும் நின்றுவிடுகிறது.

----------------மது-----------------
மரணத்தின் துவக்கம்...

நள்ளிரவு 12:15am மணியளவில் ஆரனூர் காவல் நிலையத்திற்குள் வேகமாய் வந்து நின்ற வாகனத்திலிருந்து இறங்கி, எல்லாம் என்னய்யா செய்றீங்க என்று கோபத்துடன் கேட்டுக் கொண்டே மிடுக்கானத் தோற்றத்துடன் உள்ளே வந்து அமர்ந்தார் காவல் துறை மேலாளர் நரசிம்மன்.

யாருய்யா இந்தப் பட்டாப்பட்டி?... என்று கேட்டதும்
ஐயா... இவன் ஒரு சின்ன குழந்தையைக் குடி போதையில கற்பழித்துக் கொண்ணுட்டான் என்றார் தலைமை காவலர் மூர்த்தி.

என்னய்யா இது... அங்கே போனால் அந்தக் காவல் துறை ஆணையார், அதைச் செய்யாதே இதைச் செய்யாதே..ணு ஒரே தொல்லை. இங்கே வந்தால் இவனுங்களோடப் பெருந்தொல்லை.

ஏய்.. நீதான் இந்தக் கொலையைச் செஞ்சியா?... என்று கேட்கும் போது அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. திரும்பக் கேட்கும் போதும் எந்தப் பதிலும் வரவில்லை. கோபமடைந்த அந்த மேலாளர் அடிக்க கையை ஓங்கிய போது மெல்லமாய் தழுதழுத்த குரலில் ஒரு பதில் சொன்னார்.

"மது... மரணத்தின் துவக்கம்.."
இதுதான் அந்தப் பதில்.

ஐயா.. இந்தாளு எதைக் கேட்டாலும் இந்தப் பதில் தான் சொல்றான். இதைத் தவிர வேறேதும் பேச மாட்டங்கிறான். ஆளைப் பார்த்தால் அப்பாவியாய் இருக்கிறான். ஆனால் செய்யுறதெல்லாம் மிக மோசமான வேலையாக இருக்கிறது ஐயா.

கொலை எத்தனை மணிக்கு நடந்தது எங்கே நடந்தது?...
8:30pm லிருந்து 9:00pmக்குள் நடந்திருக்க வேண்டும். அதுவும் விவேகானந்தர் தெருவை ஒட்டியுள்ள ஒரு பாழடைந்த கட்டத்தில் ஐயா.

முதலில் யார் பார்த்தது?... நான் தான் ஐயா என்றார் இடைநிலை காவலர் ஆல்பர்ட். காவல் துறை வாகனத்தில் ஊரைச் சுற்றிப் பார்வையிடும் போது தூரத்தில் அந்தப் பாழடைந்த கட்டிடத்திற்குள் யாரோ?... நுழைவது போல் தெரிவதாக மூர்த்தி ஐயா சொன்னார். அருகில் வாகனத்தை நிறுத்தி விட்டு நான் இறங்கிச் சென்று பார்த்தப் போது அந்தப் பொண்ணோட பிணத்துக்குப் பக்கத்துல பேயறஞ்ச மாதிரி இந்த ஆளு உட்காந்திருந்தார் ஐயா.

எத்தனை மணிக்கு இவன இங்க அழைச்சிடு வந்திங்க?...
9:30pm க்கெல்லாம் இங்கே அழைச்சிட்டு வந்திட்டோம் ஐயா என்றார் தலைமை காவலர்.

ஊடகத்துக்குத் தகவல் கொடுத்தீங்களா?...
இன்னும் இல்லை ஐயா.

கொடுக்காதே... அவனுங்க ஊதி ஊதியே பெருசாக்கிடுவாங்க.

அந்தப் பொண்ணோட விவரம் ஏதும் கிடைச்சதா?...
இன்னும் விசாரிக்கல ஐயா.

உடம்புதான்யா உனக்குப் பெருசாயிருக்கு
மூளை ரொம்ப.. சிறுசாயிருக்கு. அந்தப் பொண்ணப் பத்தி விசாரிக்க நம்மாளுங்கள அனுப்பு.

அந்தப் பொண்ணோட உடம்ப என்று ஆரம்பித்த மேலாளர் முடிப்பதற்குள்... அந்தப் பொண்ணோட உடம்பை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளேன் ஐயா என்று முந்திக் கொண்டார் தலைமை காவலர்.

பரவாயில்லை... நீயும் அப்பப்ப நல்லாத்தான் வேலை செய்யுற என்றதும் நன்றி ஐயா என்றார் தலைமை காவலர். அந்தப் பொண்ணப் பத்தி விசாரிச்சு காலையில 6:00am மணிக்கெல்லாம் பதில் வந்திடணும் இதை மறந்திடாதே. சரிங்க ஐயா. யோவ் ஆல்பர்ட் இங்கே வாய்யா. நீயும் அந்தப் புதுசா வந்தப் பையனும் அந்தப் பொண்ணப் பத்தி விசாரிக்க விவேகானந்தர் தெருவுக்குப் போயிட்டு விடியுறதுக்குள்ள விவரத்தோடு வாங்க. யோவ் எல்லாம் வேக வேகமாய் நடக்கணும் இல்லனா என்னைப் புடிச்சி நொய் நொய்ம்பாரு மேலாளர். சரிங்க ஐயா என்றார் ஆல்பர்ட்.

சிலமணி நேரத்திற்குப்பின்... காவல் நிலையத்தின் தொலைபேசி ரீங்காரமிட்டது. மேலாளர் அதைக் கையில் எடுத்து வணக்கம் என்றார். அடுத்து ஆரனூர் காவல் நிலைய மேலாளர் தான் பேசுகிறேன் என்று எதிர்முனையில் பேசும் மருத்துவருக்குப் பதிலளித்தார். அப்படியே சிறிது நேரம் உரையாடி விட்டுத் தொலைபேசியைக் கீழே வைத்தார். மணி ஐந்தைத் தொட பத்து நிமிடங்கள் மீதம் இருந்தது.

மூர்த்தி.. மூர்த்தி.. என்று தலைமை காவலரை அழைத்தார். அந்தக் குரலைக் கேட்டதும் தலைமை காவலர் மெல்ல ஓடி வந்து என்னங்க ஐயா.. என்று கேட்டார். இரண்டு பேரோட "டி.என்.ஏவும்" பொருந்துதான் மருத்துவ மனையிலிருந்து இப்பதான் சொன்னாங்க. காலையில அந்த ஆளை நீதி மன்றத்துக்குக் கூட்டிட்டுப் போகணும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்க என்றார் மேலாளர். சரிங்க ஐயா என்றார். என்ன மூர்த்தி அந்த இரண்டு பேரும் விசாரிக்கப் போய்ட்டாங்களா?... ஆம் போய்ட்டாங்க ஐயா.

அந்த ஆளு என்னப் பண்றான். அப்படியே தான் இருக்குறான் ஐயா. இருவரும் அந்த ஆளை நோக்கி நெருங்கிச் சென்றனர். உன் பொண்ணு வயசுள்ள சின்ன குழந்தையை... எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு. எல்லாம் இந்தப் பாழாப் போன குடிதான் ஐயா என்றார் தலைமை காவலர். அப்போதும் அந்த நபர் எதுவும் பேசவில்லை. உனக்கெதிரான ஆதாரம் சிக்கிடுச்சு தூக்குத் தண்டனை வாங்கித் தராம உன்னை விடமாட்டேன் என்றார் மேலாளர். அந்த ஆளு மேலாளர ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கீழே குணிந்தார்.

கரிய இருள் மெல்ல விலகி தெளிந்த வானம் வரத் தொடங்கியது. விசாரிக்கப் போனவர்கள் அப்படியே போய்ட்டாங்களா என்ன என்றார் மேலாளர் நரசிம்மன்.
மேலாளரின் அலைபேசி மணி ஒலித்தது. மூர்த்தி யாருனு போய் பாருங்க என்று சொல்லி முகம் கழுவக் குளியலறைக்குச் சென்றார். உள்ளே போன மூர்த்தி ஆல்பர்ட்தான் பேசுகிறார் என்று குரல் கொடுத்தார். என்னவாம் எதும் விவரம் கிடைச்சதா?... இல்லையா?... என்றார் மேலாளர். புலனத்தில் அனுப்பி இருக்காங்க ஐயா. என் பேரோட முதல் எழுத்த தலைகீழாய் போட்டு என்னனு திறந்து பாருங்க என்றார் நரசிம்மன்.

மூர்த்தி அதைத் திறந்து படிப்பதற்கும் நரசிம்மன் முகம் துடைத்துக் கொண்டு வெளி வருவதற்கும் சரியாக இருந்தது.
ஐயா அந்தப் பொண்ணோட விவரங்கள்... ம்ம்.. படிங்க என்றார் நரசிம்மன்.

பெயர் : யாழினி
அம்மா : மலர்க்கொடி (உயிரோட இல்ல)
அப்பா : தர்மராஜ்

பொண்ணோட அப்பாவ கூட்டிட்டு வாராங்களா?...

அந்தப் பொண்ணோட அப்பாவே இந்தாளுதான் ஐயா.
என்ன இந்தாளா?... ஆமாம் ஐயா என்று புலனத்தில் வந்த புகைப்படத்தைக் காட்டினார்

அந்த நேரம்... கூடிய கருமேகங்கள் இடியுடன் சேர்த்து மழை பெய்வது போல் ஓ..வெனச் சத்தமிட்டுக் கதறி கதறி அழுதார் அந்த தர்மராஜ்.

தர்மராஜ்ணு பேர்வச்சிக்கிட்டு தர்மமில்லாம உன் பொண்ணையே... த்தூ.. என்று துப்பி அவரைக் கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார் மேலாளர் நரசிம்மன்.

அதற்குள் காவல் நிலையத்தின் தொலைபேசி ஒலித்தது... யோவ் அதை எடுத்துக்கேளுய்யா என்று கோபத்துடன் அடியும் உதையும் கொடுக்கத் தொடங்கினார் நரசிம்மன். கதறி அழுதபடியே கீழே கிடந்தார் அந்த தர்மராஜ்.

ஐயா... மருத்துவமனையிலிருந்து..
என்னவாம்?...
அந்தப் பொண்ணோட உடம்புக்குள்ள வேறொரு டி.என்.ஏ கலந்திருக்காம்.

அதே நேரத்தில் இன்னொரு தகவல் வந்தது...
அந்தப் பாழடைந்த கட்டிடத்தின் சற்றுத் தொலைவில் உள்ள முட்புதரில் நெற்றியிலும் தலையிலும் பலத்த அடிப்பட்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் கிடக்குது ஐயா என்று புது இடைநிலை காவலர் கார்த்திக் சொன்னார்.

அந்தத் தகவல்களைக் கேட்ட காவல் துறை மேலாளர் நரசிம்மனின் பார்வை வியப்போடும் பரிதாபத்தோடும் தர்மராஜைப் பார்த்தது...
அதே நொடியில் கதறியழுவதை நிறுத்திய தர்மராஜின் பார்வையோ?... கருணையை எதிர்பார்த்து நரசிம்மனைப் பார்த்தது...

மூர்த்தி... சொல்லுங்க ஐயா...

அந்தச் சின்ன குழந்தை தீராத வயிற்று வலியால் இறந்திடிச்சுணு முடிச்சிடு. அங்கே செத்துக் கிடக்கிறவன் குடிச்சிட்டு கீழே விழுந்து தலையில அடிப்பட்டு தான் சொத்தான்ணு வழக்க முடிச்சிடு. அப்பறம் இவரை வீட்டுக்கு அனுப்பிடு. சரிங்க ஐயா... அப்படியே செஞ்சிடுறேன்.

இதைக் கேட்டதும் தர்மராஜின் கண்கள் நரசிம்மனைத் தெய்வமாய் பார்த்து தொழுதது.

சில நாட்களுக்குப் பின்...

தர்மராஜ் தன் மகளின் கல்லறைக்கு மேல் அவள் கையில் வைத்திருந்த கடைசி பொம்மையை வைத்து விட்டு ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் பேசிய சொற்கள் இவை.

அன்னைக்கு நான் குடிக்காம இருந்திருந்தா
இன்னைக்கு நீ உயிரோடு இருந்திருப்ப...


----------------மது---------------
மரணத்தின் துவக்கம்...


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (1-May-20, 6:32 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 221

மேலே