303 பொறாமை உள்ளோர் பெருங்கேடு எய்துவர் – பொறாமை 1

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

மாங்கனி வாயிற் கவ்வி
= மரத்திடை யிருக்கு மந்தி
பாங்கர்நீர் நிழலை வேறோர்
= பழமுணுங் குரங்கென் றெண்ணித்
தாங்கரு மவாவிற் றாவிச்
= சலத்திடை யிறந்த தொப்ப
நீங்கரும் பொறாமை யுள்ளோர்
= நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே. 1

- பொறாமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மாம்பழத்தை வாயில் கவ்விக்கொண்டு மரத்திலிருந்த ஒரு குரங்கு பக்கத்து நீரில் தோன்றிய தன் நிழலை பழம் உண்ணும் வேறொரு குரங்கு என்று நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டு நீரில் பாய்ந்து இறந்தது.

இதைப் போல, நீக்க முடியாது பொறாமைப்படுகிறவர்கள் இவ்வுலகத்தில் கேடடைவார்கள், நெஞ்சமே” என்று பொறாமையைத் தவிர்க்க வேண்டுகிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-May-20, 8:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே