304 பொறாமைக்காரன் பொய்யான இன்ப துன்பம் கொள்வான் – பொறாமை 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தாரணியி லெவரேனுந் துயருறிற்றன் தலையி’ன்’முடி
..தரித்த தொப்பாஞ்
சீரணியுஞ் செல்வமவர் படைத்திடிற்றன் தாய்மனைசேய்
..செத்த தொப்பாங்
காரணமே யொன்றுமின்றிச் சுகதுக்கந் தன்வலியாற்
..கணத்துக் குள்ளே
பூரணமா வாக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றியெவர்
..புவியின் கண்ணே. 2
- பொறாமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பிறர்வாழ மனம் பொறுக்காத தீயோர்க்கு உலகில் யாராவது துன்பம் அடைந்தால் தன் தலையில் கிரீடம் சூடியது போலவாம். பெருமை பெறும் செல்வம் பிறர் கிடைக்கப் பெற்றால் தங்கள் தாய், மனைவி பிள்ளைகள் செத்ததற்கு ஒப்பாகுமாம்.
இப்படியாக காரணம் ஏதுமின்றி இன்ப துன்பங்களை தங்கள் மனத்திற்குள் நொடிப் பொழுதில் நிறைத்திடும் தன்மை பொறாமை உள்ளவர்க்கன்றி வேறு எவர்க்கு இவ்வுலகில் முடியும்?” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தாரணி - உலகம். முடி - கிரீடம்