312 எல்லாம் உணர்ந்தோம் என்ற இறுமாப்பு தீது - கல்விச் செருக்கு 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் / விளம் காய்)
தருக்க நூலறி வோர்வியா கரணநூல்
..தகவறி யார்தேர்ந்தோர்
இருக்கி லக்கிய முதலறி யார்பலர்
..இன்கவி செயக்கல்லார்
சுருக்க மாகவோர் நூலினிற் சிறிதலால்
..துகளற எந்நூலும்
பெருக்க மாவுணர்ந் தோரிலைத் தருக்குறல்
..பேதைமை நீர்நெஞ்சே. 2
- கல்விச் செருக்கு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”அன்புள்ள நெஞ்சே! அளவை நூல் உணர்ந்தவர் இலக்கண நூலின் தன்மை யறிய மாட்டார். இலக்கண நூலறிந்தவர் அவ்விலக்கண அமைதி யுள்ள இலக்கியத்தின் முதன்மை யறிய மாட்டார். பலர் இனிய செய்யுள் செய்யும் ஆற்றல் இல்லாதவர்.
சுருக்கமாக ஒரு நூலில் சிறிதளவு கற்றதல்லாமல், சந்தேகம் தீர எந்த நூலும் முற்றும் கற்ற வல்லவரில்லை. இப்படியிருக்கக் கல்வியால் தற்பெருமை கொள்வது அறியாமையேயாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தருக்கம்-அளவை (logic), வியாகரணம்-இலக்கணம்