311 கல்வியால் செருக்குறக் காரணம் இல்லை - கல்விச் செருக்கு 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் விளம் விளம் / விளம் காய்)
என்ன நீவருந் திக்கவி பாடினும்
..எடுத்தகற் பனைமுன்னோர்
சொன்ன தேயலால் நூதன மொன்றிலைத்
..தொன்மைநூல் பலவாகும்
முன்னந் நூலெலாந் தந்தவ னீயிலை
..முற்றுணர்ந் தனையல்லை
உன்னின் மிக்கவர் பலருளார் கல்வியால்
..உள்ளமே செருக்கென்னே. 1
- கல்விச் செருக்கு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”நெஞ்சமே! நீ என்னதான் வருந்திக் கவி பாடினும் அக்கவியில் காணப்படும் கற்பனை நயங்களெல் லாம் முன்னோர் பாடினவையே அன்றிப் புதிது ஒன்றுமில்லை. முன்னுள்ள நூல்களும் பலவாகும்.
அந்த நூல்களையெல்லாம் தந்ததும் நீயில்லை. நீ எல்லாம் கற்று உணர்ந்ததுமில்லை. உன்னைவிடக் கூடக் கற்றவரும் பலர் உள்ளனர். அதனால் கல்வியால் செருக்கு ஏன்?” என்று கேட்கிறார் இப்பாடல் ஆசிரியர்.
தொன்மை - பழமை. செருக்கு - தற்பெருமை.