353 துன்பம் செய்வானையே துன்பம் முதலில் கொல்லும் - பிறர்க்குத் தீங்கு செய்யாமை 1
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
விடதரம் பற்றிவே றொருவன் மேலிடும்
அடலுளோன் தன்னைமுன் னதுக டித்தல்போல்
இடர்பிறர்க் கிழைத்திடு மியவன் றன்னைமுன்
மிடலொடு மவ்விடர் மேவிச் சாடுமே. 1
- பிறர்க்குத் தீங்கு செய்யாமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பாம்பைப் பிடித்து வேறொருவன் மேல் விடும் வலிமை உள்ளவனை அப்பாம்பு கடிப்பது போல, துன்பம் பிறருக்குச் செய்யும் கீழ்மையான குணமுடையவனை முன்னாலேயே உள்ள துன்பத்தோடு அத்துன்பம், மிக்க வலிமையோடு விரைந்து பாதிக்கும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
விடதரம் - பாம்பு. சாடும் - பாதிக்கும், கொல்லும்; .
அடல் - வலிமை. மிடல் - வலிமை.
இயவன் - கீழ்மையான குணமுடையவன்.