337 ஒப்பில்லாக் கடவுள் ஒருவனே பிழையில்லாதவன் - பிழை பொறுத்தல் 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
பிழையிலான்க டவுளன்றி மக்களில்தப் பில்லாதார்
..பிறரு முண்டோ
மழையினுமே அசனியுண்டு மதிக்குமொரு மறுவுண்டு
..மலர்க்கு முள்ளாம்
கழையினுமே சக்கையுண்டு கனியினுந்தோல் கொட்டையுண்டு
..கதிக்குங் காம
விழைவினான் மறம்புரிதல் நரர்க்கியல்பா தலினவரை
..வெறுக்கொண் ணாதே. 2
- பிழை பொறுத்தல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
குற்றமற்ற கடவுளையன்றி மக்களில் குற்றம் இல்லாதவர் வேறு எவரும் உண்டா?
மழைக்கு இடியாகிய குற்றமுண்டு. நிலவிற்கும் ஒரு குறை உண்டு. மலருக்கு முட்கள் உண்டு. கரும்புக்குச் சக்கை உண்டு. பழங்களுக்குத் தோலும் கொட்டையும் உண்டு.
மிகுந்த இன்பத்தை விரும்புபவன் தீமை செய்வது மனிதர்க்கு இயல்பு. ஆதலால் அவரைத் தீயோர் என்று வெறுத்து தண்டிக்காதே” என்று இப்பாடலா சிரியர் கூறுகிறார்.
அசனி - இடி. கழை - கரும்பு. கதிக்கும் - மிகும். காமம் - இன்பம். மறம் - தீமை. நரர் - மக்கள்.