வீச மறந்த தென்றல்
ஆறாய் ஓடிய குருதிகள் கண்டு
ஆறாத் தாயின் உள்ளம் கண்டு
ஆறாறாய் சிதறிய உடலங்கள் கண்டும்
காற்றும் ஒரு கணம் வீச மறந்தது
காணாத் தவிக்கும் உறவுகள் கண்டு
காண முடியா அவலங்கள் கண்டு
காண போகும் துயரங்களை எண்ணியும்
காற்றும் ஒரு கணம் வீச மறந்தது
பாரும் பார்வை அற்றதை எண்ணி எமை
பாரும் என்ற பாவையின் அழுகை கண்டும்
பாரமாய் எம்மை எண்ணிய தேசம் கண்டும்
காற்றும் ஒரு கணம் வீச மறந்தது
ஓயாது ஓடும் கால்களை கண்டு
ஓயாத கண்ணீர் வெள்ளம் கண்டும்
ஓயாதோ அவலங்கள் என்று எண்ணியே
காற்றும் ஒரு கணம் வீச மறந்தது