32 கடவுளைத் தொழுவோர் காண்பர் பேரின்பமே - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 16
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் காய்ச்சீர் அருகி வரலாம்)
மாசறு கடவுள் பாத
..மலரினைத் தினமும் போற்றிப்
பாசமில் சுகம்பெ றாமற்
..பவஞ்சத்தூ டுழலல் பைம்பொன்
ஆசனந் தன்னி லேறி
..அரசுசெய் தகைமை நீத்துக்
காசனக் கழுவி லேறும்
..கயமையே கடுக்கு மாதோ. 16
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”குற்றமில்லாத ஆண்டவனின் மலர் போன்ற திருவடியை நாளும் தொழுது துன்பமில்லாத இன்பத்தைப் பெறாமல் உலகில் துன்பப்படுவது, பசுமையான பொன்னாலான இருக்கையில் இருந்து ஆட்சி செய்யும் தகுதியை விடுத்து கொலை செய்யப் பயன்படும் கழுவில் ஏறும் கீழான நிலைக்கு ஒப்பாகும்” என்று கடவுளைத் தொழுவோர் பேரின்பம் காண்பர் என்கிறார் இப்பாடலாசிரியர்
.
காசனம் - கொலை. கடுக்கும் - ஒக்கும்.
பவஞ்சம் - உலகு. உழலல் – துன்பபபடல்,
கயமை – கீழான நிலை