குதிரைக்காரன் மகன்

மதுரையிலே காளமேகம் மீனாட்சியம்மையைத் தரிசனம் செய்துகொண்டிருந்தார். அருகிலிருந்த ஒருவர் விநாயக ப்க்தர், விநாயகரைப் பற்றிப் பாடுமாறு காளமேகத்தைக் கேட்டனர். கவிஞர், விநாயகரைக் குதிரைக்காரன் மகன்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டு இப்படிப் பாடுகிறார்.

நேரிசை வெண்பா

நல்ல தொருபுதுமை நாட்டிற்கண் டேனதனைச்
சொல்லவா சொல்லவா சொல்லவா - தொல்லை
மதுரைவிக்கி னேச்சுரனை மாதுமையாள் பெற்றாள்
குதிரைவிற்க வந்தவனைக் கொண்டு. 102

- கவி காளமேகம்

பொருளுரை:

மிகவும் விந்தையான ஓர் அதிசயத்தை இந்த நாட்டிலே கண்டேன்; அதனை உங்கட்கும் எடுத்துச் சொல்லவா? பழமையான மதுரையம் பதியிலே எழுந்தருளியிருக்கும் விக்கினேசுவரப் பெருமானை உமை அம்மையானவள் (மாணிக்கவாசகரின் பொருட்டாகக்) குதிரை வியாபாரியாக வந்த ஒருவனைக் (சிவபெருமானைக்) கூடியே பெற்றெடுத்தனள்.

'குதிரைக்காரன் மகன் இந்த விநாயகன்' என்று கூறி அந்த விநாயக பக்தரைத் திகைக்கச் செய்கிறார் கவிஞர். பிறகு, எப்படி என்று விளக்குகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-20, 7:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே