அறிவியல் வளர்ச்சியும் இயற்கையை அழித்தலும்
கடந்த 15 ஆண்டுகளில் அறிவியல் பல மடங்கு முன்னேற்றம் கண்டு உள்ளது. ஆனால் இயற்கை சார்ந்த வளங்களையும், தொழில்களையும் அழித்து வருகிறது ஆளும் அரசுகள்.
மக்களை அடிமையாகவே வைக்க விரும்புகிறதோ என்ற அச்சம் வருகிறது. ஆனால் அவர்களே சொல்கிறார்கள் மக்கள் விரும்பாத திட்டங்களை நாங்கள் நிறைவேற்ற மாட்டோம் என்று. ஆனால் நடப்பது என்ன? உதாரணத்திற்கு கூடங்குளம் போராட்டம் , ஹைட்ரோ கார்பன் , இனையம் துறைமுகம், ஸ்டெர்லைட் ஆகட்டும் அந்தந்த ஊர் மக்கள் இந்த திட்டங்களை வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த திட்டத்தை யார் ஆதரிக்கிறார்கள் என்றால் இந்த திட்டம் கொண்டு வரும் இடத்தில் வசிக்காதவர்கள் மற்றும் அவர்கள் நிலைமையை புரிந்து கொள்ளாதவர்கள்.
ஆகவேதான் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த இடத்தில் வசிப்பவர்கள் இந்த திட்டம் வேண்டாம் என்று சொல்லி பல போராட்டங்களை நடத்திய போதும் , அவர்களை சட்டத்தின் பெயரால், முடக்குகிறது இந்த மக்கள் விரோத அரசுகள். மனித இனத்திற்கே ஆபத்தான திட்டங்களை மேலை நாடுகளில் தடை செய்யும் போது இங்கு இந்த திட்டங்களை மீண்டும் மீண்டும் கொண்டு வருகிறார்கள்.
சில பண முதலைகளின் லாப நோக்கங்களும் அரசியல்வாதியின் பண ஆசையும்தான் இந்த நிலைக்கு கொண்டு செல்கிறது.
மேலை நாடுகளில் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த திட்டத்தினால் அந்த இடத்து மக்களுக்கு பாதிப்பு வருமானால் முதலில் அவர்களுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்தி கொடுத்து விட்டுத்தான் திட்டங்களை செயல்படுத்துவார்கள். ஆனால் நம்முடைய நாட்டில் மட்டும்தான் மக்களை வீதியில் தள்ளிவிட்டு இந்த வேலையை தொடங்குகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பல படித்த மேதாவிகளும் இதற்கு ஆதரவாக இருப்பதுதான் மிக கேவலமான ஒன்று. இதற்கு ஆதரவாக செயல்படும் காவல்த் துறையையும், நீதித்துறையையும் செயல்படுவதை பார்க்கும் போது இவைகள் இருப்பது மக்களுக்காகவா அல்லது மக்கள் விரோத அரசுகளுக்காகவா? என்ற ஐயப்பாடு மக்களிடத்தில் வருகிறது.
சரி இதையெல்லாம் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய ஊடகங்களோ திட்டம் போட்டு மறைக்கிறது. ஆனால் நம் மக்களும் அறிவியல் முன்னேற்றம் என்று சொல்லி பல பாரம்பரிய நடைமுறைகளை அழிப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. கிராம புறங்களில் இன்று தெரு முனை விளையாட்டு அறவே கிடையாது. பிள்ளைகளை பக்கத்து வீட்டிற்கு கூட விளையாட விடுவதில்லை. இதனால் அண்டை வீடுகளில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. இதனால் தான் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும், குழந்தைகளை கடத்துவதும், இன்னும் பல குற்றங்களும் அதிகரித்து உள்ளது. இப்போதைய பள்ளிகளும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் போது மாணவர்களிடம் சமூக சிந்தனைகளை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இது எல்லாம் மக்களை அடிமையாக வைக்க வேண்டும் என்பதே இந்த மக்கள் விரோத அரசுகளின் நிலைப்பாடு. அறிவியல் வளர்ச்சி என்பது தேவை தான் ஆனால் இயற்கையை அழித்து விட்டு முன்னேற்றம் என்று சொல்வது நல்ல அரசாக இருக்காது இது அபாயகரமானதும் கூட..
இன்று பெருவாரியான வேலை ஸ்தலங்களில் ரோபோக்களை பயன்படுத்த ஆரம்பித்தது உள்ளார்கள். இது பலதரப்பட்ட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது என்பதை உணராமல் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. மக்கள் நல்லபடியாக வாழ வேண்டுமானால் பணம் மிகவும் அத்தியாவசியமாக இருந்து வருகிறது. இதை மனதில் வைத்து கொண்டு தான் பல நல்ல உள்ளங்கள் லாபநோக்கத்தை பார்க்காமல் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள அவர்களுக்கு வேலைகளை உருவாக்கினார்கள். ஆனால் இன்று சென்னையில் உணவு விடுதியில் கூட ரோபோக்கள் உணவு பரிமாற பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது மனிதம் எங்கே போகிறது? என்ற கேள்விதான் எழுகிறது. சக மனிதனின் வாழ்வாதாரத்தை உயர்த்த உங்களால் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களின் வேலையை பறிக்காதீர்கள் .
மனிதனை விட உயிரற்ற ஜடத்திற்கு தான் மதிப்பு என்றால் உங்களையும் நான் ஒரு ஜடப்பொருளாகவே பார்க்கிறேன். அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில் மக்களின் அடிவயிற்றில் அடிக்காதீர்கள். நீங்கள் ரோபோக்களை பயன்படுத்துங்கள் தவறு இல்லை ஆனால் அது எங்கு என்றால் மனித உயிருக்கு தீங்கு மற்றும் பேராபத்து ஏற்படும் இடங்களில் பயன்படுத்துங்கள். மற்ற இடங்களில் தவிருங்கள் . இல்லை என்றால் வசதி படைத்த மனித மிருகங்கள் வாழும் தேசமாக மாறிவிடும். இதை அரசாங்கங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதனை மனிதனாக நேசிப்போம். இயற்கை வளங்களை காப்போம். நன்றி.
கருங்கல் சேகர்ஜினி.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
