சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறதா

செய்தித்தாள்களில் வரும் செய்திகளை பார்த்தால் மிகவும் கொடூரமான காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது ஒவ்வொரு நாளும் என்ன நடக்க போகிறதோ என்று நெஞ்சம் பதைபதைக்க வைக்கிறது.
தன் மனைவியை தொடுவதற்கே அவளின் அனுமதி தேவை என்று சட்டம் இருக்கும் போது சிறு பிள்ளைகள் என்றும் பாராமல் அவர்களை பல மனித மிருகங்கள் ஒன்று சேர்ந்து சீரழித்து பின் கொலையும் செய்யும் அளவுக்கு இந்த சமூகம் மாறி இருப்பதை பார்த்தால் கோபமும் பயமும்தான் வருகிறது. ஒவ்வொரு நாளும் மனித மிருகங்களின் கைக்குள் சிக்காதபடி எப்படி நம்மையும் நம் பிள்ளைகளையும் பாதுகாப்பது எப்படி என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள் பெற்றோர்கள் .

நாளுக்கு நாள் இந்த மனித மிருகங்களின் அராஜகங்கள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது. இதை தடுக்காத நம் சட்டங்களும், அதை ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளும் இருக்கும் வரை நமக்கு நாம்தான் காவலாளி. இன்று பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை இந்த மனித மிருகங்களினால் படும் துயரம் கொஞ்சம் நெஞ்சம் அல்ல… இதில் பல உயிர்களை கொடூரமாக சித்திரவதை செய்யப்படுகிறது. முன்பெல்லாம் மிருகங்களுக்கு பயப்பட்ட மனிதர்கள் இன்று சக மனிதனை கண்டே பயப்பட வேண்டியதாய் இருக்கிறது.

என்னென்ன சட்டங்கள் இருந்தாலும் அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளும், அதிகாரவர்க்கத்தின் பணபலமும் இதுபோன்ற செயல்களை இன்னும் அதிகமாக்குகிறது. இன்று இது ஒரு சாதாரண பத்திரிகை செய்தி என்றே பார்க்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். இல்லையென்றால் மனித மிருகங்களின் கூடாரமாக மாறிப்போகும் இந்த நாடு. அறிவியல் வளர்ச்சி அதிகமாக அதிகமாக அன்பு என்பது தணிந்து போகிறது. பள்ளிக்கூடங்களில் இருந்தே ஒழுக்க நெறிமுறைகளை கற்றுக்கொடுக்க தவறியதின் விளைவாக கூட இருக்கலாம். ஒருகாலத்தில் மதிப்பெண்களை விட ஒழுக்கநெறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது .ஆனால் இன்று அப்படியல்ல எல்.கே.ஜி படிக்கும் குழந்தைக்கே கோச்சிங் கிளாஸ் தேவைபடுகிறது என்று சொல்லும் அளவுக்கு பள்ளிக்கூடங்களின் தரம் தாழ்ந்து கிடக்கிறது. இதை எடுத்து சொன்னால் சொல்லும் நாம்தான் முட்டாளாக்கப்படுகிறோம்.

கோச்சிங் கிளாஸ் போகச் சொல்லுவது பிள்ளைகளின் நலனுக்காக அல்ல இது கல்விநிறுவனங்களின் வியாபார நோக்கத்தையே காட்டுகிறது. குழந்தைகள் விளையாடும் பருவத்தில் கோச்சிங் கிளாஸ் என்றால் அந்தபிள்ளைகள் அன்றே மூளைச்சலவை செய்யப்படுகிறது. பின் இவர்களிடம் எப்படி அன்பை எதிர்பார்க்க முடியும்? இது அதிகாரவர்க்கத்தின் சூழ்ச்சி என்பதை என்றுதான் இந்த சமூகம் புரிந்துக்கொள்ளுமோ? கல்விமுறை என்பது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற கற்றுத்தர வேண்டுமே தவிர வெறுப்புணர்வை தூண்டுவதற்கான இடமல்ல. இதை புரிந்து கொள்ளாதவரை மனித மிருகங்கள் வளர்ந்து கொண்டே போவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியாவில் அரசியலும்,சட்டமும் சினிமாவும்,செய்திதாள்களும் மக்களை ஏமாற்றவே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாதவரை குற்றங்களும் அவலங்களும் நடந்துக்கொண்டே இருக்கும். இவை மக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டவை என்பதை புரிந்து கொண்டு சக மனிதனை மனிதனாக நேசிப்போம் .நல்ல வாழ்க்கை வாழ்வோம் மற்றவர்களை வாழ விடுவோம், நாமும் வாழ்வோம். நன்றி.
கருங்கல் சேகர்ஜினி.

எழுதியவர் : கருங்கல் சேகர் ஜினி (8-May-20, 2:25 am)
பார்வை : 35

மேலே