தங்கச் சங்கிலி

தங்கசங்கிலி…!!!
“தம்பி,அந்த வாழமரத்த அப்படியே அந்த தூண்ல கட்டு,அவனுக்கு ஒத்தாசயா நீ இருப்பா..அங்கே யாரு...? அந்த கயிற எடுத்து கொடுங்க.. மேல..பார்த்துப்பா சாய்ந்திரப்போவுது... பாத்து..பாத்து..பூ ஒடைஞ்சிரப் போவுது.!.தம்பி..அங்க என்ன மசமசன்னு நின்னுகிட்டு இருக்க..போப்பா..அந்த மா இலையில சந்தனத்தையும் குங்குமத்தையும் குழச்சு பொட்டு வை..அப்படியே அத தோரணத்துக்கு நடுவுல கட்டு..” கிராமத்து பெரியவராக கருதப்படும் முருகையா தான் இப்படி எல்லாரையும் வேலை வாங்கி கொண்டிருந்தார்.அவர் பேச்சுக்கு மறு பேச்சு யாரும் பேசமாட்டார்கள்.அவர் மேல் ஊர் மக்களுக்கு அவ்வளவு மரியாதை.
அந்த கிராமம்,பட்டணத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது.பட்டணத்திற்கு மாதம் ஒரு முறை வீட்டிற்கு செலவு ஜாமான் வாங்குவதற்காக குடும்ப தலைவர்கள் ஒரு காரை வாடகைக்கு எடுத்து செல்வார்கள்.அதுவும் ‘லேஸ்’ பட்ட காரியம் இல்லை அவர்களுக்கு.அந்த கார் ‘ஓனர்’ பெரிய கிராக்கி பண்ணுவார்.கெஞ்ச வைப்பார்.வாடகையோ நேரத்திற்கு தகுந்தாற்போல் ஏறும்.அதுவும் மாத இறுதி நாளாக இருந்தால் வாடகை எகிறும்.
“முனியாண்டி”மீண்டும் அந்த பெரியவரின் குரல் அதிர்ந்தது.”ஒனக்கு ஒருமுறை சொன்னா புரியாது..இவ்வளவு வேல இங்க இருக்குது..நீ என்னடானா?..போய் பூசாரிக்கிட்ட பூசைக்கு தேவைப்படுகிற பொருள எழுதிட்டு வா..நேரமாச்சு.அப்புறம் டவுனுக்கு போன மாதிரிதான்..”கொஞ்சம் அன்பாக கடிந்து கொண்டார்.ஊர் மக்களை தன்னாட்சிக்குள் வைத்திருப்பதில் அவருக்கு ஒரு பெருமை. ஆலயத்தை கூட்டி பெருக்கி கொண்டிருந்த மூக்காயி கிழவி.., “முனியாண்டியோட பையன் பத்து வருசம் கழிச்சு பெத்த அப்பனையும் ஆத்தாளையும் பார்க்க வர சந்தோசம்தான்..என்னடா முனியாண்டி அப்படித்தானே?வாயில் வெற்றிலையை அதக்கி கொண்டு,கேள்வி குறியோடு அவன் முகத்தை பார்க்கமலேயே தன் வேலையில் குறியாய் இருந்தாள் மூக்காய்.முனியாண்டி அதற்கு ஆமோதித்தவனாய்.. “ஆமா கிழவி, ரொம்ப நாளா அவன நாங்க பார்க்கல..பட்டணத்துக்கு படிக்க போனவந்தான்.. அவன் அம்மாவும் அவன நினைச்சு ரொம்ப ஏங்கி போயிட்டா..”பெருமூச்சு விட்டான்.முனியாண்டி தன்னுடைய மகனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டது அந்த கிராமத்து மக்களுக்கு நன்கு தெரியும்.கூலிக்கு எந்த வேலை யார் சொன்னாலும் தட்டாமல் செய்பவன்.காய்ச்சல் தலைவலியென்று ஒரு நாள்கூட வீட்டில் ஓய்வு எடுக்காதவன்.தன்னுடைய ஒருத்தன் சம்பாத்தியம்தான் அவனுடைய மனைவியையும் ஒரே மகனான காத்தவராயனையும் காப்பாத்திக் கொண்டிருக்கிறது.மகனின் படிப்பு செலவிற்கு மனைவியின் மருந்து செலவிற்குமே போதுமானதாக இருக்கும்.அவர் மனைவி அங்காயிக்கு ஆஸ்துமா நோய்.அதனாலேயே வேல செய்ய முடியாது.
*********************************************************************************************
“அடியே அங்காயி,என்னடி பன்ற ? ஒடம்பு வேற முடியாம அடுப்பங்கரையில என்ன செய்ற..?கூன் விழுந்த கருப்பாய் பாட்டிதான் அது.உடம்பில் மாராப்பு இல்லாமல் பழைய நெறம் மாறிப் போன சேலையை அணிந்துகொண்டு காலையிலேயே ஊர் கதை பேச கிளம்பி விடுவாள்.அவளின் பொழுதுபோக்கு அது மட்டுமே.காதில் தொங்கும் கம்மலை அடிக்கொருதரம் தடவிக் கொள்வாள்.வாயில் வெற்றிலை பாக்கை அதக்கிக் கொண்டு எச்சில் சுருங்கிப்போன உதட்டோரம் ஒழுக ஒழுக பேசும் அவள்,சில சமயங்களில் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உதட்டில் வைத்து ஒழுகும் எச்சிலை காரி உமிழ்வாள்.தெருவில் நடப்பவர் மீது பட்டுவிடும் என்பதை பொருட்படுத்தமாட்டாள்.நடப்பவர் மீதுதான் எரிந்து விழுவாள்.அதற்கு பயந்து கொண்டே அவள் இருக்கும் பக்கம் யாரும் போக மாட்டார்கள்.
“ வா பாட்டி..காலயிலேயே புறப்பட்டிட்டியா?,”வந்த இருமலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப்போனாள்.
“ஏண்டி..இங்க நான் வரக்கூடாதா?
“ஐயோ ..அப்படி இல்ல பாட்டி..”சொல்லி முடிப்பதற்குள்.. “பட்டணத்திலிருந்து எப்படி வரான் உம் புள்ள..? நாலா பக்கமும் பார்த்துவிட்டு இரண்டு விரல்களை உதட்டில் வைக்கும் போது..“ பாட்டி..பாட்டியியி” அவசர அவசரமாக தடுத்தாள்.”இப்பதான் வாசலை சானமிட்டு மொழுகிவிட்டேன்..கொஞ்சம் அப்படி போய் துப்பிட்டு வா பாட்டி..உனக்கு கோடி புண்ணியமாகும்..” கருப்பாய் பாட்டியை தடுத்தாள். கருப்பாயின் முகம் சிறிது மாறிப்போனதை அவள் கவனிக்காமல் இல்லை.ஆயின் மீண்டும் வாசலை கழுவ அவளின் உடல் ஒத்துழைக்காது என்பதால் சொல்லித்தான் ஆக வேண்டும்.
“ஏண்டி அங்காயி..நான் என்ன இங்கேயா துப்பப் போறன்..துப்பு கெட்டவள..எதோ ஒன்னோட மகன் ரொம்ப நாள் கழிச்சி இங்க வரான்னு கேள்விபட்டேன்..அதான் வந்து விசாரிச்சிட்டு போகலாமேன்னு ..” இழுத்தாள் கருப்பாய்... வாய் கொடுத்தால் வம்பாகிவிடும் என்பதை புரிந்து கொண்ட அங்காயி.’அப்படி இல்ல பாட்டி..இப்பதான் சானமிட்டு ..”அவள் முடிப்பதற்குள்..சற்று தள்ளி வாயில் ஊறிய எச்சிலை உமிழ்ந்தாள் கருப்பாய் பாட்டி.மாராப்பிலே வாயில் ஒழுகிய எச்சிலை துடைத்துக் கொண்டு மீண்டும் பேச்சு கொடுத்தாள்.
“என்னடி,நான் கேட்டதுக்கு பதில காணோம்..எப்ப வரான்..வரவன் ஏதும் பொண்ணோட வரப் போறான்..” “இவள் நம்மை வம்பு இழுக்காமல் விடமாட்டாள் போலிருக்கு..இன்னிக்கு இவளுக்கு நான்தான் கிடைச்சேனா?” என்று மனதிற்குள்ளேயே பைத்தியக்காரி போல் பேசிக்கொண்டாள் அங்காயி.அவ்வப்போது இருமலும் அவளை எட்டிப் பார்க்கத்தான் செய்தது..
“என்னடி வாயிக்குள்ளே மொனவுற..சொல்ல வந்தத தைரியமாய் சொல்லு..” கருப்பாய் விடுவதாய் இல்லை..:எப்ப வரான் ஒன்னோட புள்ள..அதான் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்து போட்டியே..” அங்காயி, காதில் விழாதது போல தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்தாள்.அடுப்பில் விறகுகளை செருகி எரிவதற்காக ஊதாங்குழலை வாயில் வைத்து ஊதினாள்..அவளுக்கு எளப்பு இருப்பதையும் மறந்து..அடுப்பில் நெருப்புக்கு பதிலாக புகைதான் வந்தது..கண் எரிச்சல் கண்டது..முந்தானையால் துடைத்துக்கொண்டு..அரிசியை தண்ணீரில் அலசி அடுப்பில் வைத்தாள்..மற்றொரு விறகு அடுப்பில், வளர்த்த ஒரு சேவல் குழம்பாய் கொதித்துக்கொண்டிருந்தது.வாசம் தெருவெல்லாம் பரவியதோ இல்லையோ கருப்பாயி மூக்கில் பட்டது..
“நல்லா கமகமன்னு இருக்கு..வெடக் கோழியா..சரி..சரி எனக்கு கொடுக்க மறந்து விடாத..ஒன்னோட கோழி குழம்பு ருசி இந்த ஊருக்கே தெரியுமே..” நற்சான்றிதழ் கொடுத்தாள் கருப்பாயி கிழவி.. என்னதான் இருந்தாலும் புள்ள மேல இவ்வளவு பாசம் வைக்காதடி..வாய்க்கிற மருமவ அவன இழுத்துட்டு போயிட்டா…”
“பாட்டி..வாய கொஞ்சம் கழுவு பாட்டி..காலையிலே…வாயில நல்லதா வராதா..?”கொஞ்சம் ஆத்திரத்துடன் கடிந்து கொண்டாள்…
*****************************************************************
“தலைவரே.. கொஞ்ச நேரம் இங்க வாங்க..” கோயில் பூசாரியின் குரல் கேட்டு கிராமத்து தலைவர் பூசாரியின் பக்கம் திரும்பினார். “என்ன பூசாரி..என்னாச்சு..?”தன்னுடைய வேஷ்டியை மடித்து இடுப்பில் சொருகிக்கொண்டே பூசாரி அழைத்த இடத்திற்கு விரைந்தார்.போகும்போதே..”ஐயா,..தம்பிகளா,வேல..முடிஞ்சுட்டா காட்டில போய் காய்ந்த விறகு கட்டைகளை பொறுக்கிட்டு வாங்க..நாளைக்கு அன்னதான சமையலுக்கு விறகு தேவைப்படும்..போகும்போது கோடாரி,கத்திய, மறக்காம எடுத்துக்குட்டு போங்க….கவனமா இருங்க..”அங்கு ஆலய திருவிழா வேலையில் மும்முரமாக இருந்த கிராமத்து இளசுகளிடம்தான் கட்டளையிட்டார் தலைவர். அதில் ஒருவன்… “ நீங்க சொன்னா சரிங்க ஐயா..இப்பவே போயிட்டு வரோம்..”துடிப்புடன் கூறினான்.அவருக்கு அந்த பதில் ஒரு தற்பெருமையை அளித்தது.அவரின் முகத்தில் அது தெரிந்ததில் வியப்பில்லை.
“என்ன பூசாரி..! ஏன் கூப்பிட்டீங்க.?”தன்னுடைய வழுக்கை தலையை சொரிந்துகொண்டே மூக்கில் வடிந்த வேர்வையை அணிந்திருந்த வேஷ்டியில் துடைத்துகொண்டு பூசாரியின் அருகில் சென்றார்..
“ஐயா..!” பூசாரி எதையோ சொல்ல வந்து முடியாமல் திணறினார்.இடுப்பில் கட்டிய துண்டு நழுவியது கூட தெரியாமல் தன் கைகளை கட்டியவாறு பவ்வியமாக தலைவர் முன் நின்றுகொண்டிருந்தார்.
“பூசாரி..முதல்ல துண்ட இடுப்பில நிக்கிற மாதிரி கட்டுங்க..”தலைவரின் குரல் சற்று அதட்டலாக கேட்டது பூசாரிக்கு. தடுமாற்றத்துடன் பூசாரி துண்டை சரி செய்து கொண்டார்..
*****************************************************************
பெற்றோரையும் தான் சிறு வயதில் ஓடியாடி விளையாண்ட கிராமத்தையும் பல சின்ன சின்ன திருட்டுட்தனத்தை கூட்டு சேர்ந்து செய்த பால்ய நண்பர்களையும் சந்திக்கப் போவதை நினைத்து அதிகளவே சந்தோசப்பட்டான் காத்தவராயன்.ஊருக்கு செல்லும் பேருந்து நிலையத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னமே வந்துவிட்டான்.தலைநகரில் ஒரு பெரிய நிறுவனத்தில் கணக்காய்வளராக பணியில் இருக்கிறான்.இத்தனை வருடங்களாக கடிதம் மட்டுமே தனக்கும் தன் பெற்றோர்களுக்கும் உறவு பாலமாக இருந்தது.அவன் ……அவரவர் துயரங்களுக்கு அவர்களேதான் காரணம் என நம்புகிறவன்.கடின உழைப்பு மேன்மை தரும் என உறுதிகொண்டு அதற்கேற்றார் போல் உழைத்தவன்.பட்டணத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் தன்னை ஈன்றெடுத்த பெற்றோரையும் மறக்காதவன்.ஊருக்கு செல்லும்போது தனக்காக பல தியாகங்கள் செய்த பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் பணிபுரியும் பட்டணத்தில் பல கடைகளில் ஏறி இறங்கி சில பொருள்களை வாங்கினான்.கண்டிப்பாக தன்னுடைய பெற்றோர்கள் சந்தோசம் அடைவார்கள்.அதுவும் இந்த திருவிழா அவர்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை..வாங்கிய பொருள்களை தூக்குப் பையில் பத்திரமாக வைத்துகொண்டான்.அடிக்கொருதரம் அவை இருக்கிறதா என்பதையும் பரிசோதித்துக் கொண்டான்.பேருந்துகளின் இரைச்சல் மற்றும் அவை கக்கும் கரும் புகையும் அவனுக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை.
############ ########## ############# ######
வீட்டில் கோழி குழம்பை இறக்குவதற்கும் முனியாண்டி வருவதற்கும் சரியாக இருந்தது.நெற்றியில் சிந்திய வியர்வையை துடைத்துகொண்டே அங்காயி கணவனை வரவேற்றாள்.”என்னங்க..பையன் வர நேரமாச்சு..இப்பதான் கோயிலேருந்து வரீங்கலா..சரி.. கை கால அளம்பிட்டு வந்து உட்காருங்க..” தரையில் உட்காருவதற்கு ஏதுவாக பாயை விரித்து சோற்று தட்டை எடுக்க சென்றவளை “அங்காயி..கொஞ்சம் நில்லு..” அவள் கரங்களைப் பற்றி இழுத்தான். “ என்னங்க இது..எப்போதும் இல்லாத பாசம்..கையை விடுங்க..சோத்த எடுக்கணும்..” சொல்லிக் கொண்டே கையை அவன் பிடியிலிருந்து உதறிட எத்தனித்து தோற்றுப்போனாள்.. “இங்க கொஞ்ச நேரம் உட்காரு..சாப்பாட்ட அப்புறம் பாத்துக்கலாம்..இப்ப எனக்கு பசிக்கல..”கரை படிந்த பற்கள் தெரிய சிரித்தான்.அங்காயி வெட்கத்தால் தலை குனிந்தாள்…
“அங்காயி நீ ரொம்ப நாளா ஆசைப்பட்ட ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்..”
அங்காயின் முகம் ஆச்சரிய குறியானது.இதயம் படபடவென அடித்துக் கொண்டது.விழிகள் அகலமாயின..தன்னுடைய கணவன் அப்படி நமக்கு தெரியாம எப்ப என்னத்த வாங்கியிருப்பாரு..? அவளால் யூகிக்க முடியவில்லை..அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது.அரிசியோ பொங்கி பானையிலிருந்து வழிந்து கொண்டு நெருப்பில் பட்டு ‘புஸ்..புஸ்..’என்று சத்தத்தை எழுப்பியது.விறகு நனைந்து புகையையும் கிளப்பிவிட்டிருந்தது..அதை கண்ணுற்ற அங்காயி அவசரமாக அடுப்பங்கரைக்கு ஓடினாள்.தான் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போய்விட்டதே என வருத்தப்பட்டான் முனியாண்டி.அங்காயி ஆவி பறக்க தட்டு நிறைய சோற்றையும் மற்றொரு தட்டில் கோழி குழம்பையும் எடுத்து வந்து கணவனின் முன் வைத்து கரண்டியில் நான்கைந்து எலும்பு துண்டை எடுத்து சோற்றில் ஊத்தினாள்.முனியாண்டி லேசாக புன்முறுவல் செய்து அவள் கையை பிடித்து தான் கொண்டு வந்ததை கொடுத்தான்…
############ ############ ###############
காத்தவராயன் வந்த பேருந்து பட்டணத்தில் நின்றது.
“ஐயா..” காத்தவராயந்தான் அழைத்தான். “ அட நம்ப முனியாண்டியின் மகன்போல இருக்கே..தம்பி நீ………….” என இழுத்தார் கிராம தலைவர். அதை ஆமோதிப்பதுபோல கோயில் பூசாரியும் தலையை அசைத்தார்.தோளில் சுமந்து கொண்டு வந்த பையை கீழே வைத்துவிட்டு குனிந்து இருவரிடமும் ஆசிப்பெற்றான்.காவல் நிலையத்திற்கு வந்த காரணத்தையும் வினவினான்.அத்தோடு தான் பெற்றோருக்கு வாங்கி வந்த பரிசையும் காண்பித்து மகிழ்ந்தான்.இருவரும் அவனை பாராட்டினர்.பின் தாங்கள் வந்த வாடகை காரிலேயே அவனையும் உடன் அழைத்து சென்றனர்.போகும் வழியில் திருவிழா ஏற்பாட்டை பற்றி விசாரிக்க மறக்கவில்லை காத்தவராயன்.திருவிழா நன்கு நடப்பதற்கு காத்தவராயனிடம் ஒன்றை வேண்டி கேட்டார் தலைவர். அவனும் அதற்கு ஒப்புக்கொண்டான்.
############# ################ ###############
“என்னங்க..ஏதுங்க இது..எப்படி....?ஆச்சரியமாக கேட்டாள் அங்காயி.தன் கண்ணையே தன்னால் நம்பமுடியவில்லை.ஆனந்த கண்ணீர் விழியோரம் வழிந்து சோற்று தட்டை நனைத்தது...நா தளு தளுத்தது. பேச்சு முட்ட தொடங்கியது..சோற்று கையுடன் தன் மனைவியின் கண்ணத்தை தடவி தன் மார்பில் சாய்த்து தோளை இடது கையால் தடவி கொடுத்தான்.
“உனக்கு பிடிச்சிருக்கா புள்ள..? உனக்குன்னு நான் எதையும் கொடுத்தது இல்ல..அதான் புள்ள..டவுனுக்கு போய் வாங்கி வந்தேன்..” சொல்லி தன் தோளில் சாய்ந்திருந்தவளை மெல்ல தள்ளிப்பிடித்தான்.வழியும் ஆனந்த கண்ணீரை தோளில் தவழ்ந்த துண்டில் துடைத்து விட்டான்.
“ஐயா..உங்கள தலைவரு உடனே கோயிலுக்கு வர சொன்னாரு..திருவிழா வேலையெல்லாம் அப்படியே இருக்குதாம்..” செய்தியை சொன்னவன் அங்கிருந்து மறைந்தான்.கையை கூட கழுவாமல் எழுந்தவனை.. “இப்பதானுங்க சாப்பிட உட்காந்திங்க..அதுக்குள்ள என்ன அவசரம்..சாப்பிட்டு போங்க..” என்றவளை “பரவாயில்ல புள்ள..சாப்பாடு என்ன ஓடியா போவுது..தலைவருக்கு என்ன அவசரமோ தெரியல..போயிட்டு வந்துடுறேன்..” என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமலேயே துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு ஓடினான்..அதே சமயம் தன்னுடைய மகன் வீட்டிற்கு வருவதை எண்ணி உள்ளூர சந்தோசப்பட்டான்.
ஆலய வளாகத்தில் ஒரே சலசலப்பு..போலீஸ்காரர்கள் கிராமத் தலைவரிடமும் கோயில் பூசாரியிடமும் ஏதோ விசாரித்து கொண்டிருந்தனர்.முனியாண்டி வந்துவிட்டதை கவனித்த தலைவர்.. “சரிங்க இன்ஸ்பெக்டர்.. உங்களை சிரமம் படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். இந்த பூசாரிதான் வச்ச இடம் தெரியாமல் நம்மல அலைக்கழிய வச்சுட்டாரு..”இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்டு முனியாண்டியை பார்த்து சைகையில் தனியாக வரச் சொன்னார்.என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு ஊகித்துகொண்டான் முனியாண்டி.
############## ################### #################
“அம்மா..அம்மா…தோளில் சுமந்த பையை தரையில் தூக்கிப்போட்டு தன் தாயாரை கட்டிபிடித்தான்.அங்காயால் நம்ப முடியவில்லை..இன்ப அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..பத்து வருடம் பிரிந்திருந்த மகன் வந்திருப்பது.அந்த ஆனந்தத்தில் அவனுடைய அப்பா, தன்னுடைய கணவன் திருமணமாகி முப்பது வருடத்தில் இப்பொழுதுதான் தங்க சங்கிலியை பரிசாக கொடுத்திருக்கிறார் என தன் மகனிடம் காண்பித்து சந்தோசப்பட்டாள்..காத்தவராயனோ தான் அம்மாவிற்காக வாங்கிவந்த தங்க சங்கிலி இப்பொழுது அம்மன் கழுத்தில் தொங்குகிறது என்று சந்தோசப்பட்டான்….அதே வேளை முனியாண்டி தன்னை காட்டி கொடுக்காத தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறினான்.
......முற்றும்......
தமிழ்தாசன்.எம்.பி.எஸ்.கே
கோலசிலாங்கூர்.

எழுதியவர் : தமிழ்தாசன்.கோல சிலாங்கூர (12-May-20, 9:10 am)
சேர்த்தது : thamilthasan MPSK
Tanglish : tangach chankili
பார்வை : 134

மேலே