அலட்சியம்

அலட்சியம்.... !!!
மெலிந்த மேனி....தளர்ந்த நடை.. தோலின் சுருக்கங்களோ அந்த மேனியை தவழ்ந்திருந்தது. கேள்வி குறியாய் காட்சியளிக்கும் அவரின் உடல்,அவரின் வயதையும் வாழ்க்கையையும் நமக்கு நன்றாகவே படம்பிடித்து காண்பித்துக் கொண்டிருந்தது.குழி விழுந்த கண்ணங்கள்..மானத்தை காப்பற்றிக்கொள்ள கிழிசல் நிறைந்த, அழுக்குகள் கோலமிட்டிருந்த வேஷ்டி..அதையும் சுருக்கி கோவனமாக கட்டிக்கொண்ட காட்சி என் மனதை ஆழமாக பாதித்திருந்தது.இக் காலத்திலும் இப்படியொரு காட்சியை காண்பேன் என்று எண்ணி பார்க்கவே மனம் ஒர் கணம் ஆடித்தான் போனது.
சாலையை கடக்க பல தடவை போராடியும் ஓடும் ஊர்திகளின் வேகத்திற்கு அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை..மேக கூட்டங்களும் சாலையில் ஓடும் ஊர்திகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டிருந்தன.இன்னும் சிறிது நேரத்தில் மேகங்கள் ஒன்றாய் சேர்ந்து இந்த பூமியை நனைக்க போட்டி போட்டுக் கொண்டு ஒன்றோடு ஒன்றாய் மோதிக்கொள்கின்ற காட்சி என்னையே மிரட்டுவது போல் இருந்தத்து.காற்றும் அதன் பங்கிற்கு ‘விஸ்சி..புஸ்சி’..என்று குரல் கொடுக்கின்றது.ஆயின் அப்பெரியவர் இதற்கெல்லாம் அஞ்சாதவராய் சாலையை கடக்கவே குறியாய் இருந்தது என்னை வியப்படையை செய்தது.
“டேய்..முத்துப்பாண்டி,மொட்ட மாடியில என்னடா செய்ற..இங்கு எனக்கு ஒத்தாச பன்றத விட்டுப்புட்டு.” அம்மாவின் குரல் என்னை கிழவன் மேல் இருந்த பார்வையை அவள் பக்கம் திரும்ப செய்தது...
“முத்துப்பாண்டி..அடேய்.. “அம்மாவின் அதட்டும் குரல் என்னை மீண்டும் அவளிடம் கொண்டுச்சென்றது..மொட்டை மாடியிலிருந்து கீழ் நோக்கி “என்னம்மா இப்ப அவசரம்..சதா கத்திக்கிட்டே இருக்க..”
“ஏம்மா,என்னை கூப்பிட்டிங்க..”.
தாவுத் பாயி கடைக்கு போகனும்.... பரவாயில்லைடா.. மழை வந்துருச்சு.. விட்டதும் போகலாம்..” தடுத்தாள். நொடிநில்லாமல் மீண்டும் மொட்டை மாடிக்கு ஓடினேன்.பெரியவரின் நிலையைக் காண..
அங்கு சாலையை கடக்க தடுமாறிய பெரியவரை காணவில்லை..என் கண்கள் அவரை தேடி நாலா பக்கமும் அலைந்தது..ம்ம்ம் தென்படவில்லை.வெளியில் சென்ற என் தகப்பானார் இன்னும் வீடு வந்து சேரவில்லை.என் தாயாரோ அவரை வசைப்பாடி கொண்டிருந்தாள். மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது..என் கைப்பேசி அலறும் சத்தம் கேட்டு பெரியவர் நினைப்பிலிருந்து விடுபட்டு அதனை எடுத்து காதோரம் வைத்தேன்..
“சார்..நீங்க முத்துபாண்டியனா”.
“ஆமாங்க”
“உங்கள் தகப்பனார் பெயர் வீரமுத்தா.” எதிர்முனையிலிருந்து அப்படி ஒரு கேள்வி வந்ததும் ஒரு கணம் என் குரல் தடுமாற்றம் கண்டது..
“ சார்..இங்க நாச்சியார் மருத்துவமனையிலிருந்து நர்ஸ் பேசுறேன்..உங்க அப்பா..” எனக்கு தலை சுற்றியது.பேசி முடிக்கும் முன்பே உரையாடலை துண்டித்துவிட்டு கீழ்மாடிக்கு ஓடினேன். “ ஏண்டா ஒனக்கு ஒரு தரம் சொன்ன தெரியாது? இப்படி மேல்மாடியிலிருந்து ஒடியாற..இப்ப என்ன குடியா மூழ்கிப்போச்சு.... இந்த நேரம் பார்த்து உங்க அப்பன் வேற இன்னும் வீடு வந்து சேரல..வரட்டும் மனுசன்..இன்னிக்கு உண்டு இல்லன்னு பன்றன்..”
என் தாயிடம் என்னவென்று சொல்வேன்.மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்ததை சொன்னால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.
நாச்சியார் மருத்துவமனை ஒரே பரபரப்பாக காட்சியளித்தது. தாதியர்கள் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். வெளிநோயாளிகளோ வலியால் முணகிக்கொண்டிருந்தனர். சில மருத்துவர்களோ தாதியர்களிடம் குறிப்புகள் கூறிக்கொண்டிருந்தனர்.
“ சார்..கொஞ்சம் அங்க உட்காருங்க சார்..” எனக்கு உட்கார மனமில்லை.உட்காரவும் முடியவில்லை..அங்கும் இங்கும் கையை பிசைந்த வண்ணம் நடந்துகொண்டிருந்தேன்.நாழிகை ஆகஆக..இருப்பு கொள்ளாமல் மீண்டும் “மிஸ்..எங்க அப்பாவ... இந்த மருத்துவமனையில..”சொல்லி முடிப்பதற்குள் ..
“ மாலதி..” என்னிடம் பதில் சொன்ன அந்த ‘ரிசப்னிஸ்ட்டை’ பார்த்தேன் பெயர் மாலதி என புரிந்துகொண்டேன்..
“என்னடி?” ..இது மாலதி.
“ அரை மணி நேரத்திற்கு முன்னாடி ஒரு எக்சிடன் கேசு வந்துச்சுல்ல”
“ எது இந்த ராமநாதபுர தெருவில நடந்த எக்சிடனா..?”
“ஆமாம்..புட்டுக்குச்சு..” கேட்ட மாத்திரத்தில் எனக்கு தூக்கிவாரிப் போட்டது.அது எங்கள் வீடு இருக்கும் தெருவாச்சே ..’ஐயோ,அப்பா ..என கதற .......
“முத்துபாண்டி....” குரல் வந்த திசையைப் பார்த்தேன்.என் தந்தையேதான்..அப்படியென்றால் அந்த தாதி சொன்ன கேஸ்சு..?
“நான் இங்கதாண்டா இருக்கிறேன்”
என் தந்தை அங்கே....அவரின் காற்சட்டை முழுவதும் ரத்தமாக...
“ அப்பா..உங்களுக்கு ஒன்னுமில்லையே..? என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை...
“அப்பா.. .. . என்னப்பா நடந்துச்சு? நீங்க அடிப்பட்டதா..”என் பேச்சை மறித்த தந்தை
“எனக்கு ஒன்னும் இல்ல....நான் வீட்டுக்கு வரும்போது நம்ம் தெருவுல ஒரு வயசானவரை வேகமாக போன காரு மோதிருச்சு..உதவ யாரும் முன் வரல.மழை வேற...... எப்படியோ அவர ஒரு காருல இந்த மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துட்டேன்..வர அவசரத்தில என் கைப்பேசி எங்கேயோ தவற விட்டுட்டேன்.அதனாலத்தான் அந்த பொண்ணுகிட்ட ஒன்னோட கைப்பேசிக்கு போன் பண்ணி நான் வர கொஞ்சம் நாளிகையாகணும் சொல்ல சொன்னேன்,..நீ என்னடான்னா...
எனக்கு போன உயிர் திரும்ப வந்ததது என் தந்தை என்னை அமரர் அறைக்கு கூட்டிச்சென்றார்.அங்கு நான் பார்த்தது... சாலையை கடக்க சிரமப்பட்ட அதே முதியவர்.. என்னை அறியாமல் என் கண்கள் நீரை செலவிட்டன..என்னுள் ஓர் குற்றவுணர்வு ஈட்டிபோல் குத்தியது..

தமிழ்தாசன்.எம்.பி.எஸ்.கே
கோலசிலாங்கூர்

எழுதியவர் : தமிழ்தாசன்.கோல சிலாங்கூர (11-May-20, 6:56 pm)
சேர்த்தது : thamilthasan MPSK
Tanglish : alatchiyam
பார்வை : 176

மேலே