இப்படியும் மனிதர்கள்
இப்படியும் மனிதர்கள்
மாலை 4 மணி இருக்கும் வெளியே மழைத் தூரல் போட்டுக்கொண்டிருந்தது. நான் எங்க வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக எங்க ஊரின் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். பேருந்தின் உள்ளே ஒரே சலசலப்பு, என்னமோ எதோ என்று எண்ணியபடி ஒரு இருக்கையில் அமர்ந்துக்கொண்டேன். பேருந்தினுள் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குடிபோதையில் தள்ளாடிக்கொண்டு இருந்தார். நாகரீகமற்ற வார்த்தைகளால் ஓட்டுனரை, நடத்துனரை திட்டியபடி இருந்தார். ஏய்!... என்னய்யா..நிறுத்தய்யா வண்டிய..நிறுத்தய்யனா.......உரத்த குரலில் அவர் வார்த்தைகள் வெளிவர பேருந்தினுள் இருந்தோர் சங்கடத்துடனே பயணித்தனர். அந்த மாமனிதரின் இடுப்பில் கட்டிய துணியின் ஒரு பகுதி மட்டுமே இடுப்பில் இருக்க மீதியெல்லாம் பேருந்தின் தரையைத் துடைத்தது. எல்லோருக்குமே தர்மசங்கடமாக இருந்ததது. மது வாடை தாங்கமுடியாமல் பேருந்தில் இருந்தோர் மூக்கைப் பொத்திக்கொண்டனர். அடுத்த பேருந்து நிறுத்தம் வரும்வரை ஓட்டுனர் எதுவும் பேசவில்லை, அமைதியாக வண்டியை ஓட்டினார். ஆனால் அந்த மனிதர் நடத்துனரின் சட்டையைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தச் சொல்லி பலமாகக் கத்தினார். வண்டியில் இருந்த ஒரு அம்மா இந்த ஆர்ப்பாட்ட மனிதரிடம் கொஞ்சம் அதட்டலாகவே சத்தம் போடாதய்யா என்றதும் அந்த அம்மாவையும் விட்டுவைக்கவில்லை. அந்த அம்மாவை ஆவேசமாக கத்தித் திட்டினார். இத்தனைக்கும் இடையில் அடுத்த பேருந்து நிறுத்தமும் வந்தது. அந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே காவல் நிலையமும் இருந்தது, பேருந்திலிருந்து இறங்கக்கூட திராணி இல்லாத அந்த மனிதரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு ஓட்டுனர் அமைதியாக வந்து பேருந்தை ஓட்டினார். இவ்வளவு சேட்டைகள் செய்த போதும் அந்த மனிதர் மேல் கோபப்படாமல் அமைதியாக தன் கடமையை சரிவர செய்த ஓட்டுனரை நினைத்தால் எனக்கு ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது. ஓட்டுனரின் மனப்பக்குவத்திற்கு நன்றியை மனதிற்குள் சொல்லிக்கொண்டே நானும் நடந்தேன். ஓட்டுனரின் பொறுமைக் கடலினும் பெரிது, இப்படியும் மனிதர்கள்.
முற்றும்.....