ஏக்கம்

உலகத்திலே ஹோம்சிக்னஸ் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். இது நம்மோட சின்ன வயசுலேயே ஸ்டார்ட் ஆயிடுது.

அம்மாவை அஞ்சு நிமிஷம் காணும்னாலே குழந்தைங்க அழ ஆரம்பிச்சுடறங்க. அதுகளுக்கு அப்ப ஏற்படறது அம்மா ஏக்கம். இந்த ஏக்கம் ஸ்கூலுக்குப்போற கொஞ்ச வருஷம் வரையிலும் தொடருது. இது யாரும் கத்துக்கொடுத்து வரதில்லை. சிருஷ்டியின் இயற்கை நியதியிலே இது ஒண்ணு. இதுலே யாருக்கும் விதி விலக்கு கிடையாது உங்களையும் என்னையும்சேத்து.

ஸ்கூல்லே சேர்க்கும்போது குழந்தைங்க அந்த வீட்டு சூழ்நிலையிலே இருந்து புது சூழ்நிலைக்குப்போகும்போது அப்ப ஏற்படறதே அம்மா ஏக்கம் மாத்திரம் இல்லே. வீட்டு ஏக்கமும்கூட. கொஞ்ச நாளிலே அம்மா ஏக்கம் குறைஞ்சு, வீட்டு ஏக்கமும் கொறைஞ்சு, ஸ்கூல் சூழ்நிலை பிடிச்சிப்போனாலும், நீங்க மாணவனா இருக்கிற வரையில் அந்த சாயந்திரம் அடிக்கிற லாஸ்ட் பெல் கொடுக்கிற சந்தோஷம் வேறே எதுவும் அந்த வயசுலே கொடுக்கிறது இல்லே. உடனே அடிச்சிப் பிடிச்சு, பையைத்தூக்கி தோளிலே போட்டுக்கொண்டு வீட்டுக்குப்போற சந்தோஷம் இருக்கே அதுக்கு ஈடான சந்தோஷம் அந்த வயசுலே வேறு என்ன இருக்கு? இதுவும் ஒருமாதிரியான வீட்டு ஏக்கம்தான். இதுக்கும் யாரும் விதி விலக்கு இல்லை.

பிறகு பள்ளிப்படிப்பு முடிச்சிட்டு வேறே ஒரு ஊரிலே காலேஜ் படிப்புப் படிக்கப்போகும்போது அப்ப தான் நமக்கு உண்மையான வீட்டு ஏக்கம் ஏற்படுது. நான் இதை ஒவ்வொரு முறையும் விடுமுறை முடிஞ்சவுடனே காலேஜுக்குப்போகும்போது உணர்ந்து இருக்கேன். மனசு அந்த ஏக்கத்துலே இருந்து விடுபட ஒரு பத்து நாளாவது ஆகும். எனக்கு பதினைஞ்சு நாள் ஆச்சு ஒவ்வொரு தரமும்.

அதேபோல வேலையிலே சேந்த அப்புறமும் லீவிலே நம்ம வீட்டுக்கு வந்துட்டு, அது முடிஞ்சி நாம வேலைக்குத் திரும்பற மாதிரி கொடுமை வேறே எதுவும் கிடையாது,
ஏண்டா லீவு முடியுதேன்னு தோணும். தோணி என்ன பண்ண?
மனசுலே வீட்டு ஏக்கத்தை சுமந்துகிட்டு போகவேண்டியதுதான் இந்த ஏக்கமும் மறைய பத்துப் பதினைஞ்சு நாள் ஆகும்.

கலயாணமானவுடன் மனைவியைப் பிரிஞ்சி வேறே ஊரிலே இருக்கிற ஆபீசுக்குப்போறது இருக்கே, அதை விட கொடுமை வேறு என்ன இருக்கப் போகுது?

கல்யாணம் ஆன உடனே அவங்க அம்மாவை, இன்னும் பல நெருங்கிய சொந்தங்களை எல்லாம் பிரிஞ்சு புதுசா ஒரு ஆணுடன், அவன் எந்த மாதிரி என்னன்னு தெரியாம, அவங்க அப்பா, அம்மாக்கள் எப்படிப்பட்டவங்கன்னு தெரியாம ஒரு புது சூழலுக்குத்தன்னை தயார் செய்துகிட்டு உயிருக்குயிரான அம்மா, அப்பாவையும், பிறந்து வளர்ந்த வீட்டையும் விட்டு வரும்போது ஒரு பெண்ணுக்கு ஏற்படக்கூடிய சோகம், ஏக்கம் எப்பேர்ப்பட்டதுன்னு கல்யாணமான அத்தனை பெண்களுக்கும் தெரியும். எல்லா ஏக்கத்திலேயும் தலையாய ஏக்கம் இதுதான்.

நாடு விட்டு நாடு போய் பிழைப்பை நடத்துபவங்களப் பத்தி நாமென்ன நினைக்கிறோம்? நல்ல சம்பளம். வசதியான வாழ்க்கை. அதிர்ஷ்டம் செஞ்சவங்கன்னு. ஆனா அவங்க மனசுக்குள்ளே இருக்கிற சொந்த நாட்டைப் பத்திய ஏக்கம் இருக்கே அதை அனுபவிக்கிறவங்களாலேதான் புரிஞ்சிக்கமுடியும். அதுக்கு ஈடான இன்னொரு ஏக்கம் இந்த உலகத்திலேயே கிடையாது. அதையும் நான் அப்படிப்பட்ட ஒரு அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியப் பெண்ணை சந்திச்ச போது தெரிஞ்சிகிட்டேன்.
நான் என் ட்ராவலர்ஸ் செக்கை டாலராக மாற்ற வேண்டி இருந்தது. என் லஞ்ச் இன்டரவல்லே அதற்காக அங்கு ஒரு பாங்கிற்குச் சென்றேன். அந்த கௌண்டரில் ஓருவர் அமர்ந்திருந்தார். பார்த்தவுடன் அவர் ஒரு இந்தியப் பெண்மணி என்று தெரிந்து கொண்டேன். அவர் என் ட்ராவலர்ஸ் செக்கையும் பாஸ் போர்ட்டையும் வாங்கி அதைப்பார்த்து உங்க பேரைப்பார்த்தால் ‘நீங்க தமிழ் நாட்டைச்சேர்ந்தவர் போல் இருக்கிறதே’ என்றார் ஆங்கிலத்தில்.

நானும் ‘எஸ்’ என்றேன்.

தமிழ்பேசுவீர்களா? என்றார்.

ஆம் என்றேன்.

உடனே அவர் தமிழில் பேச ஆரம்பித்தார். நான் இருப்பது எந்த இடத்தில் என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

நான் மெட்ராஸ் ( அப்போது அது மெட்ராஸாகத்தான் இருந்தது) என்று சொன்னவுடன் அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டு தான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான் என்றும், படித்தது எதிராஜ் காலேஜ் என்றும், தான் அமெரிக்காவிற்கு வந்த காரணத்தையும், இப்போது பாங்கில் வேலை பார்ப்பதையும், நான் எதுவும் கேட்காமலே விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்தார். தான் மெட்ராசை எவ்வளவை லவ் பண்ணுகிறார் என்று சொல்லிவிட்டு, மெட்ராஸ் பற்றிய பல பொது மற்றும் அரசியல் விவரங்களைப் பற்றியும் விசாரித்தார். மெட்ராஸ் ஸ்டேட்டில் எல்லோரும் சௌக்கியமா என்றும் கேட்டார். தான் ஸ்டேட்ஸுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும், மெட்ராஸை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாகவும் சொல்லும்போது அவர் பேச்சிலிருந்தும் கண்களில் ஈரம் கசிந்ததிலிருந்தும் அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தது.

அதற்குள் என் பின்னால் ஒரு பெரிய க்யூவே சேர்ந்து விட்டது. இதற்கு மேலும்பேசினால் யாராவது எதாவது சொல்லப்போகிறார்கள் என்று கருதி
‘மேடம், க்யூ நீளமாகிக்கொண்டு இருக்கிறது. இதற்கு மேலும் நாம் பேசினால் என் பின்னால் காத்திருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். எனவே விடை பெறுகிறேன்’ என்றேன்.

‘நீங்கள் இங்கு எத்தனை நாட்கள் இருப்பீர்கள்?’ என்று அவர் கேட்டார்.

‘நான் இன்னும் இருபது நாட்கள் இருப்பேன்’ என்றேன்.

‘அப்படியானால் உங்க லஞ்ச் இடைவேளையில் தினமும் ஒரு ஐந்து நிமிடம் நீங்கள் வந்து என்னோடு பேசிவிட்டுப்போக முடியுமா? என்று கேட்டார்.

‘நானும் பார்க்கிறேன்’ என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டேன்.

நான் சந்தித்த பல இந்தியர்களையும் அவர்களின் தாய்நாட்டுப் பாசம் எப்படி ஆட்டுவிக்கிறது என்று எண்ணும்போது எனக்குப் பரிதாபமாக இருந்தது. ஒருவர் இந்தியாவிற்குப்புறப்படுகிறார் என்றால் அவர்கள் எந்த அளவிற்குக் குதூகலம் அடைகிறார்கள், இந்தியாவிற்குச் செல்பவர்களை அங்குள்ள இந்தியர்கள் எவ்வளவு ஏக்கத்துடன் பார்க்கிறார்கள் என்று எண்ணும்போது அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சோகத்தை சுமக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.

இன்னும் இந்த மாதிரி மனுஷங்களுக்குப் பலவிதமான ஏக்கங்கள் ஏற்படறதுண்டு.
ஆனா நான் இப்ப சொல்லப்போறதை எந்த வகையிலே சேர்க்கிறதுன்னே தெரியல்லை.
1989 ம் ஆண்டு செப்டம்பர்மாதம். என் பெண்ணின் திருமணத்திற்காக நான் அமெரிக்கா சென்று இருந்தேன். திருமணம் கலிஃபோர்னியா லிவர்மோரிலுள்ள சிவ, விஷ்ணு ஆலயத்தில். அன்று அந்தக்கோயிலின் ஒரு பகுதி மாத்திரம் கட்டப்பட்டு முடிந்திருந்தது.
அந்த இடத்திலுள்ள கனகதுர்கா கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் என் சொந்தங்களைவிட என் மகள், மற்றும் மாப்பிள்ளையின் தோழர்கள் என்று வந்தவர்கள்தான் அதிகம். அப்படி வந்தவர்களில் ஒருவர் மாப்பிள்ளைத் தோழர் ஒருவரின் அப்பா.

நான் கல்யாணத்தை முன்னிட்டு நம் ஊர் உடையில், அதாவது வேஷ்டியில் இருந்தேன். அதே போல் அந்தப்பெரியவரும் வேஷ்டி உடுத்தி வந்திருந்தார். செப்டம்பர் மாதம் ஆதலால் இன்னும் வெயில் அடித்துக்கொண்டு இருந்தது. அதனாலே வேஷ்டி கட்டிக்கிட்டு இருந்ததுலே எந்த சிரமமும் இல்லை. முகூர்த்தம் முடிந்தவுடன் எனக்கு சற்று ஓய்வு கிடைத்தது. நான் ஒரு ஓரமாக ஒதுங்கி ஒரு சீட்டில் அமர்ந்து கொண்டேன். வெளி நாட்டில் நம்மை அட்ராக்ட் பண்ணுவது, ஒன்று மொழி. அடுத்தது நம் கலாசாரம். அங்க வந்த பெரும்பாலானோரும் தமிழர்கள், சிலர் ஆந்திரர்கள், மற்றும் வடநாட்டவர்கள்.

ஒரு வேஷ்டி இன்னொரு வேஷ்டியை அந்த மாதிரி இடங்களில் ஈர்த்ததில் அதிசயம் ஒன்று மில்லை. அவர் சற்று நேரத்திற்கெல்லாம் என்பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டார். எங்களுக்குள் சம்பாஷணை துவங்கியது.

‘நமஸ்காரம்’ என்றார்.

நானும் ‘நமஸ்காரம்’ என்றேன்.

தமிழிலே பேசலாமா?

ஓ! தாராளமா பேசலாமே.

தமிழிலே பேசினாத்தான் ஒரு அன்யோன்யம் இருக்கும்.

உண்மைதான்.

நீங்க இருக்கிறது எங்கே?

இப்ப கலிஃபோர்னியாவிலே என்று கல்யாணப்பரிசுலே மாப்பிள்ளை என்ன செய்யறார்னு கேட்டவுடனே தங்கவேலு போண்டா சாப்பிடறேன் என்பது போல சொல்லலாமா என்று தோன்றியது. ஆனால் மரியாதை நிமித்தமாக அவ்வாறு சொல்லாமல் ‘மைலாப்பூர்’ என்றேன்.

ஓ! மைலாப்பூரா? அங்கே எங்கே?

லஸ்சர்ச்ரோடில்

லஸ் சர்ச்ரோடில் எங்கே?

ஆள்வார்ப்பேட்டை சர்க்கிள்கிட்டே.

சர்க்கிள்கிட்டேன்னா!

ட்ரினிட்டி ஹாஸ்பிடல் தெரியுமா?
தலையை அசைத்தார் அதிலிருந்து அவர் அதைத்தெரியும் என்று சொல்கிறாரா, தெரியாது என்று சொல்கிறாரா, எனக்குப் புரியவில்லை.
அந்த ட்ரினிடி ஹாஸ்பிடலுக்கும், லைஃப் .ஸ்டைலுக்கும் நடுவில் ( இன்று காவிரி ஹாஸ்பிடல்) இருக்கிற பி.ஏ. அபார்ட்மென்ட் காம்பளக்ஸுலே.

ஓ! பி.ஏ. காம்ப்ளக்ஸா? அங்க கூட எனக்குத் தெரிஞ்சவர் ஒருவர் இருக்கார்?
பேரு? பாலகிருஷ்ணனோ என்னவோ, மறந்து போயிட்டேன். சொந்த ஃப்ளாட்டா?

ஆமாம்

எவ்வளவு ஆச்சு?

நான் வாங்கும்போது சதுர அடி ₹100/-

பரவாயில்லையே. சீப்பா இருக்கே. நான்கூட…

நீங்க எங்கே இருக்கேள்?

மந்தவெளியிலே

நானும் இந்த ஃப்ளாட்டுக்கு வரதுக்கு முன்னே மந்தவெளியிலேதான் இருந்தேன்.

மைலாப்பூர், மந்தவெளி எங்களிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

கபாலீசுவர்ர் கோயில் , அந்த அட்மாஸ்ஃபியரே தனி. அந்த மாதிரி எதுவும் வராது என்றார்

நான் வாரத்துக்கு ஒருநாள் தப்பாம கோவிலுக்குப்போயிடுவேன் என்றார்.

நானுந்தான்.

நான் எதை வாங்கறதுனாலும் லஸ் கார்னரலே இருக்கிற கடைகளிலே தான் வாங்குவேன்.

நானும் அனேகமா அப்படித்தான்

உடுப்பி சுக நிவாசுக்குப்போயிருக்கேளோ?

ஓ! நிறைய தரம் போயிருக்கேன். அங்கே அப்ப அதுக்குப்பக்கத்திலே இருந்த முருடீஸ்லே நான் நிறைய நாள் சாப்பிட்டிருக்கேன்.

ராயர் ஹோட்டல்….?

எனக்கு மைலாப்பூர், மந்தவெளியிலே இருக்கிற அத்தனை ஓட்டலும் அத்துபடி.

இப்படியே அங்கே இருக்கும்கடைகள், ஓட்டல்கள், கோவில்கள் பற்றி நிறைய பேசினார்
மெட்ராசுலே ( அப்ப அது மெட்ராஸ்தான். சென்னை ஆகல்லே) மழை பெஞ்சுதோ? என்று கேட்டார்

ஓ! பெஞ்சுதே

இந்திராகாந்தி எமர்ஜென்சியை எடுத்தது தப்பாப்போச்சு. எமர்ஜன்சியின் போது கவர்மென்ட் ஆபீஸ் எல்லாம் எவ்வளவு பங்க்சுவலா நடந்தது. எமர்ஜன்சியை எடுத்தப்புறம் நாடே குட்டிச்சுவர் ஆயிட்டுது. புலிவாலைப்பிடிச்சா அதை விடலாமோ? அந்த கதையா ஆயிட்டது. இப்ப நம்ம ஊர்லே என்ன நடந்துண்டு இருக்கு?

நம்ம ஊர் அரசியல் உள்ளிட்டு கடந்த ஒரு வருஷமா என்ன என்ன நடந்ததோ அதை எல்லாம் நான் விஸ்தாரமா சொல்லிட்டு இருந்தேன். அறுபத்து மூவர், , தெப்போற்சவம் எதையும் விடல்லே.

அவரும் எதுவும்பேசாமல் கேட்டுக்கொண்டு இருந்தார். ஏனோ அவரைப்பார்க்க எனக்குப்பரிதாபமாக இருந்தது. அவர் முகத்தில் ஒரு சோகம் குடி கொண்டு இருந்தது.

( பின்னாளில் அங்குள்ள பல நம்மூர் சீனியர் சிடிசன்களை நான் சந்திச்சிருக்கேன். அவங்க எல்லாமே எனக்குக்கொடுத்த ஒரே அட்வைஸ் “தயவு செஞ்சு இங்கே வராதீங்க இல்லை. வந்துடாதீங்க. அமெரிக்கா நம்ம மாதிரியான ஆட்களுக்கு லாயக்கே இல்லை. எங்க பிள்ளைங்க சொன்னாங்கன்னு நாங்க கிரீன் கார்டு வாங்கிட்டு வந்து இங்கே படற பாடு இருக்கே . அதனாலே தான் வெல்விஷரா சொல்றோம் க்ரீன் கார்டு , ப்ளூ கார்டுனு எதையாவது வாங்கிட்டு இங்கே வந்து மாட்டிக்காதீங்க ன்னு” இதுதான்.)

இவர் ஒருவேளை கிரீன் கார்டு வாங்கி இங்கே வந்தவரோ என்று அவர் முகத்தில் இருந்த சோகத்தைப்பார்த்து நினைத்தேன். அவர் நம்நாட்டைவிட்டு வந்து எத்தனை வருஷம் ஆச்சோ தெரியல்லை. அவர் இங்கே வந்து குறைந்தது இரண்டு வருஷமாவது ஆயிருக்கும் போல இருக்கே. இல்லாத போனா நான் சொன்ன நம்ம ஊர் ரெண்டு வருஷ சமாசாரத்தையும் அவ்வளவு பொறுமையா கேட்டுண்டிருப்பாரா?
இருந்தாலும் அவரையே கேட்டுடறது நல்லது இல்லையா?

இந்தியாவை விட்டு வந்ததிலே உங்களுக்கு சந்தோஷம் இல்லியா? அவரைக்கேட்டேன்.

நான் இந்தியாவை ரொம்பவும் மிஸ் பண்றேன். நம்ம ஊர் மாதிரி வராது அமெரிக்கா. இதென்ன ஊரு. திராபை ஊரு. இங்கை ஊரிலே எல்லாம் லைஃபே இல்லையே. ஜனங்க நடமாட்டம், ஒரு கலகலப்பு.ஹூம். அடிச்சிப் போட ட மாதிரி. இது என்ன ஊரு? காலார ஒரு இடத்துக கு நடந்து போனோம்னு இல்லை. இந்த ஊர்லே கால் இருந்து பிரயோசனமில்லே. எல்லாம் கார்தான். கார் இல்லாம இந்த ஊர்லே கால் நிமிஷம் கூட இருக்கமுடியாது.

சரி. நீங்க இங்கே வந்து எத்தனை வருஷமாச்சு?

இங்கேதான் எனக்கு ஒரு இடி காத்துக்கொண்டு இருந்தது.

வந்து ரெண்டு வாரமாச்சு என்றாரே பார்க்கலாம்.
நான் என்பையன்கூப்பிட்டானேன்னு விசிட்டரா ஒரு ஆறுமாசம் இங்கே வந்திருக்கேன். இப்பவே எனக்குபோரடிச்சுடுத்து. தாங்கவே முடியல்லே. ஆறுமாசம் எல்லாம் என்னாலே தங்க முடியாது என்றார்.

வந்த இரண்டு வாரத்திலேயே இத்தகைய ஏக்கம் என்றால் இதை எந்த வகையில் சேர்ப்பதுjQuery171028513390171084896_1590907663645

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (31-May-20, 12:16 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 25

மேலே