நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று
.
(இந்த கொரோனா யுகத்தில் தூய்மமையின் அவசியத்தை நாம் அறிகிறோம். கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை ஒரு பொழுது போக்காக, ஹாபியாக நம் நாட்டவர் பலரும் வைத்திருக்கின்றனர். அதைப்பற்றி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கதை 2014 ல் எழுதப்பட்டது. நம்நாட்டில் நிலவிய நிலையை சுட்டிக்காட்ட எழுந்த ஆதங்கத்தினால் எழுதப்பட்டதே ஒழிய, எந்த தனிப்பட்ட மனிதரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. )
காட்சி 1
மந்திரியாரே, மாதம் மும்மாரி பொழிகிறதா?
நேற்று வரை இரு மாரி பொழிந்து விட்டது. இன்னும் ஒரு மாரி பெய்து விட்டால் இம்மாதக் கணக்கிற்கு மும்மாரி ஆகிவிடும்.
மக்கள் எல்லாம் நலமா?
தங்கள் ஆட்சியில் மக்கள் அனைவரும் நலமே.
இன்று நாம் மக்களைச் சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்க்கும் நாளல்லவா?
ஆம். அரசே.
சரி. மக்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் குறைகளைக் கூறட்டும்.
***********
முதலில் ஒரு பெண்மணி வருகிறார்
உங்கள் குறை என்ன?
பிரசவத்திற்காக என் பெண்ணை அரசாங்க ஆஸ்பத்திரியிலே சேத்தேன். அங்கே எதுக்கெடுத்தாலும் பணம் கேக்கறாங்க. பணம் தரல்லேன்னா கன்னாபின்னான்னு பேசறாங்க. குழந்தையையும் அம்மாவையும் கவனிக்க மாட்டேங்கறாங்க.
என்ன மந்திரியாரே இது?
இதற்குக் காரணம் அந்த ஆஸ்பத்திரியிலுள்ள பழம் பெருச்சாளிகள்தான் ..
அப்புறம் ராசா, என் மகளை அங்கே இருக்கிற பெருச்சாளி ஒண்ணு கடிச்சிடுச்சு. கேட்டா பாம்பு கடிக்காம பெருச்சாளி தானே கடிச்சது. Ii
சந்தோஷப்படுன்னு சொல்றாங்க. இப்ப அந்த ரெண்டு உயிருக்குமே ஆபத்தாயிருக்கு. நீங்கதான் இதுக்கு வழி பண்ணி என் பெண்ணையும், குழந்தையையும் காப்பாத்தணும்.
மந்திரியாரே. உடனே நீர் அந்த ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்கவும்.சரி. அடுத்தவர் வரட்டும்.
(அடுத்தவர் வருகிறார்)
அரசே. ஜாதிச்சான்றிதழ் வாங்குவதற்காக நான் ஒரு மாதமாக அலைகிறேன். 1000 ருபாய் பணம் கேட்கிறார்கள். போன மாசம் எம் பொண்ஜாதிக்கு உடம்பு சரியா இல்லாம போனதாலே கையிலே இருந்த பணமெல்லாம் செலவாயிட்டுது. அதனாலே அவங்க கேட்ட தொகையைக் கொடுக்க முடியல்லே
என்ன? லஞ்சம் கேட்கிறார்களா?
ஆம். அரசே. கொஞ்சம் கேட்டா பரவாயில்லை. ரொம்ப அதிகமா கேக்கறாங்க.
சரி. உடனே நடவடிக்கை எடுப்போம். அடுத்தவர்…
(அடுத்தவர் வருகிறார்)
உங்கள் குறையென்ன?
மகாராஜா, உங்கள் ஆட்சியில் எல்லாம் நல்ல படியாக
நடக்கும்போது, இந்த ஆட்டோரிக்ஷாக்காரர்கள் மாத்திரம் பொதுமக்களை கொள்ளை அடிக்கிறார்கள். 3 கிமீ போக 100 ருபாய் கேட்கிறார்கள். கூப்பிடும் இடத்திற்கு வர மறுக்கிறார்கள். மீட்டர் போடுவதேயில்லை. கேட்டால் மரியாதைக் குறைவாகப் பேசுகிறார்கள். யார்கிட்டே வேணாலும் போய் சொல்லிக்க. எங்களை யாரும் ஒண்ணும் பண்ணிக்க முடியாதுன்னு மார் தட்டுகிறார்கள்.
சரி. ஆட்டோக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்.
அடுத்தவர்…
(அடுத்தவர் வருகிறார்)
நிலம் வாங்கி நாலு வருஷம் ஆயிடுச்சு. இன்னும் பட்டா கெடக்கல்லீங்க மன்னா.
அதற்கு எவ்வளவு கேட்கிறார்கள்?
முதல் வருடம் மூணாயிரம் கேட்டார்கள். நான் முடியாது என்றேன். ரெண்டாவது வருடம் 10000 கேட்டார்கள். முடியாது என்றேன். சென்ற வருடம் 15000 கேட்டார்கள்.
அரசே, வருடா வருடம் நிலத்தின் விலை ஏறுவதனால் அதற்கேற்றாற்போல் அவர்களும் லஞ்சத் தொகையை ஏற்றிக் கொண்டே போகிறார்கள்.
அதைப்பற்றி முறையிடத்தான் இப்போது உங்களிடம் வந்திருக்கேன்.
ஏன் நீங்கள் முன்பே முறையிடவில்லை?
நான் பழைய அரசரிடம் பலமுறை முறையிட்டேன். பலனில்லை. இதையெல்லாம் அவரிடம் சொன்ன போது கொடுத்துவிட்டுப் போகவேண்டியதுதானே. என்னிடம் ஏன் இதைச் சொல்கிறீர்கள் என்று கேட்டார்.அவருக்கும் இந்த மாதிரி விஷயத்திலெல்லாம் பங்கு உண்டு என்று நினைக்கிறேன்
உஷ். அதையல்லாம் இங்கே பேசக்கூடாது.
சரி. தக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறேன். அடுத்தவர்...
(அடுத்தவர் வருகிறார்)
அரசே. நான் மருத்துவக் கல்லூரி மாணவன். 20 லட்சம் ரூபாய் கேபிடேஷன் ஃபீ கொடுத்து கல்லூரியில் சேர்ந்தேன்.நான் என் படிப்பு சம்மந்தமாக அடிக்கடி அரசாங்க மருத்துவ மனைக்குப் போக வேண்டி இருக்கிறது.
அதற்கென்ன?
மருத்துவ மனை முழுவதும் பிணவறையிலிருந்து வரும் வாடை வீசுகிறது. அதனால் அங்குள்ள நோயாளிகளும், பணி புரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், மற்றவர்களும் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். போதாததற்கு வார்டில் வீதி நாய்கள் குடி புகுந்து கொண்டு நோயாளிகளையும் மற்றவர்களையும் பீதிக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு உள்ளவர்களையும் கடித்து விடுகின்றன. அங்குள்ள கழிவறைகள் வழிவறைகளாக மாறி வழிந்து ஓடி, கால் வைக்கக் கூட முடியாத அளவிற்கு மிக மிக அசிங்கமாக இருக்கின்றன. மொத்ததில் மருத்துவ மனையில் மருந்துக்கூட சுகாதாரம் என்பது இல்லை.
கேட்பதற்கே மிகவும் சங்கடமாக இருக்கிறதே. மந்திரியாரே, இந்த வேலைக்கு முன்னுரிமை கொடுத்து மருத்துவ மனையை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும்
அப்படியே ஆகட்டும் மன்னா. சரி.
(அடுத்தவர்…)
உங்கள் குறை என்ன?
மன்னா, என் பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டுக் குப்பையை எல்லாம் வாரி எங்க வீட்டுக் காம்பவுண்டுக்குள் போட்டு விடுகிறார். ஏனய்யா, இப்படிப் பண்றீங்க? ரோட்டிலே போடவேண்டியதுதானே என்று கேட்டால் ரோடு குப்பை ஆயிடும். அதனால நாங்க குப்பையை அங்கே போட மாட்டோம். எத்தனையோ வருஷமா இந்த வீடு காலிமனையா இருந்தது. அப்பல்லாம் நாங்க எங்க குப்பையை அங்கேதான் கொட்டுவோம். யாரும் எங்களைக் கேட்டதில்லை. நீங்க என்னமோ இப்ப புதுசா இங்கே வீடு கட்டிக் கிட்டு வந்து பெரிசா அலட்டிக்கிறீங்களேன்னு சொல்றார்.
தக்க நடவடிக்கை எடுப்போம்.
(இவ்வாறு பல பேர் வந்து இது போன்ற தங்கள் குறைகளை மன்னனிடம் தெரிவிக்கின்றனர். மன்னரும் உடனுக்குடன் ஆவன செய்வதாக அறிவிக்கிறார்.)
*********************
காட்சி 2
(பொது மக்கள்)
நமது மன்னர் நமக்கு பல நல்ல வசதிகளையும் சௌகரியங்களையும் செஞ்சித் தந்திருக்கார்.
வீட்டு வரியைக் குறைச்சிட்டார். தண்ணீர் வரியை நீக்கிட்டார்.
குழந்தைகளுக்கான படிப்பை இலவசமாக்கிட்டார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியையெல்லாம்
குறைச்சிட்டார்.
பள்ளிக்கூடங்கள், காலேஜூகள் எல்லாம் அனியாயமா கொள்ளை அடிக்கிறதைத் தடுத்துட்டார்.
நம்ம ஆட்டோக்காரங்களை மீட்டர் பிரகாரம் வண்டியை ஓட்டும்படி பண்ணிட்டார்னா பாத்துக்கங்களேன். இதைவிட வேறே என்ன வேணும்?
ஆபீஸுலே லஞ்சம் வாங்கறதெல்லாம் ரொம்ப குறைஞ்சி போச்சு.
லஞ்சம் கேக்கறதுக்கே பயப்படறாங்க.
ஒரு பிளேட் இருபது ரூபாயா இருந்த இட்டிலி இப்ப பத்து ரூபாதான்.
இதேமாதிரி எல்லா விலையும் குறைஞ்சிருக்கு.
ஜாதி சர்டிபிகேட், வருமான சர்டிபிகேட் இப்படி எந்த சர்டிபிகேட்டா இருந்தாலும் கேக்கறதுக்கு முன்னேயே கொடுத்துடறாங்க.
இவர் வந்தப்புறம் நாட்டிலே திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் எல்லாம் ரொம்பவும் குறைஞ்சிருக்கு.
ஏழைகளுக்கு எல்லாம் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார். விவசாயிகள், தொழிலாளிகள் எல்லாம் சந்தோஷமா இருக்காங்க.
நாட்டிலே விடிஞ்செழுந்தா நடக்கிற போராட்டங்களும், கடை அடைப்பு, கடை உடைப்பு , பஸ் எரிப்பு, மாணவர்கள் போராட்டம், போலீஸாரோடே பேயாட்டம், கல் வீச்சு, தீ வைப்பு, தற்கொலை எல்லாமே இப்போ முற்றிலுமா நின்னு போச்சு.
பஞ்சம், பட்டினி எல்லாம் பழங்கதையாயி மறந்தே போச்சு.
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
சும்மா சொல்லக்கூடாது. நம்ம அரசர் நீடூழி வாழணும். அவர் ஆட்சிக்கு வந்த ஐந்தாவது வருடம் அடுத்த மாசம் வருது. அதை நாமெல்லாம் சிறப்பா கொண்டாடணும். இந்த அஞ்சு வருஷத்துலே நமக்கு எவ்வளவோ நன்மைகள் செஞ்சிருக்கார்.
ஆமாம். கட்டாயமா நாமெல்லாம் அவருடைய பதவி ஏற்ற ஐந்தாவது ஆண்டை சிறப்பாகக் கொண்டாடணும்.
( அரசர் நீடூழி வாழ்க என்ற கோஷத்துடன் கலைகின்றனர்)
*************************
காட்சி 3
நமது மக்கள் உங்களுடைய ஐந்தாவது ஆண்டு பதவி ஏற்பு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடினார்கள் அரசே.
ஆம். நானும் அதைப் பார்த்தேன். நான் இதையெல்லாம் கொண்டாட வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.
அரசே இன்னும் சற்று நேரத்தில் மேலை நாட்டுத்தூதர் ஒருவர் உங்களை சந்திக்க வருகிறார்.
(சற்று நேரத்தில் அத்தூதர் வருகிறார். அவரை அரசர் வரவேற்று உபசரித்து பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கிறார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. பின்னர் தூதர் வணங்கி விடை பெறுகிறார்.)
நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக எல்லா உதவியும் செய்வதாக இன்று வந்த வெளிநாட்டுத் தூதர் சொல்கிறார். நம் நாட்டின் முன்னேற்றத்தைப் பாராட்டும் அதே நேரத்தில் நாம் சுற்றுப்புற சூழல், பொது சுகாதாரம் போன்ற துறைகளில் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்கிறார். நான் போகும் வெளிநாடுகளிலொல்லாம் கூட இதையே தான் சொல்கிறார்கள். நம் நாட்டு சுகாதாரமின்மையைப் பற்றித் தான், இவர் மட்டுமல்ல, மேலை நாடுகளிலிருந்து வருபவர்கள் எல்லோரும், கவலையுடன் கேட்கிறார்கள்.
'உங்கள் நாட்டில் ரயில் பயணம் செய்யும்போது தப்பித்தவறி வெளியே பார்த்தாலும், வீதிகளில் நடக்கும்போதும் மிகவும் கண்ணறாவியான காட்சிகள்தான் கண்ணில் படுகின்றன. மேலும் ரயில்பாதை முழுவதும் சொல்வதற்கே கூசும் அளவிற்கு அசிங்கமாக இருக்கிறது. வீதிகளில் கிஸ் செய்வது தவறு என்கிறீர்கள். ஆனால் வீதிகளில் பிஸ் (சிறு நீர் கழிப்பது) செய்வது, மற்றும் மலஜலம் கழிப்பது இதையெல்லாம் அனுமதிக்கிறீர்கள். கண்ட கண்ட குப்பைகளையல்லாம் உங்கள் நாட்டு மக்கள் வீதியில் எரிகிறார்கள். இதை ஏன் சரி செய்ய மாட்டேன் என்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். என் மானம் என்ன, நம் நாட்டின் மானமே போகிறது. என்னால் பதில் ஏதும் கூற முடியாமல் தலை குனிந்து இருக்க வேண்டியதாயிற்று.
நம் நாட்டு மந்திரி ஒருவர் அங்கு ஏர் போர்ட்டில் இறங்கியவுடனே கண்ட இடத்திலும் எச்சில் துப்பிக் கொண்டிருந்தாராம். அந்நாட்டு நிருபர் ஒருவர் 'என்ன? உங்கள் நாட்டு மந்திரி சுகாதார உணர்வே இல்லாமல் இப்படிக்கண்ட இடத்திலும் எச்சில் துப்பிக் கொண்டிருக்கிறார்' என்று கேட்டவுடன் எனக்கு அவமானமாகப் போய்விட்டது. நான் தீர்மானித்துவிட்டேன்.
நம் நாடும் சிங்கப்பூர் போலவும் மற்ற பல வெளி நாட்டு ஊர்கள் போலவும் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கான முயற்சிகளை நாம் இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்று.
சுற்றுச்சூழலுக்கு நாம் முன்னுரிமை தர வேண்டும். இதற்காக நம் நாட்டு பேரறிஞர் பெரியசாமியை பல வெளி நாடுகளுக்கும் அனுப்பி நம் நாட்டின் சுற்றுச்சூழலை எப்படி சிறப்பாக பாதுகாப்பது என்பதைப் பற்றி தெரிந்துகொண்டு வந்து அதை எப்படி நாம் அமல் படுத்தலாம் என்று யோசிப்போம்.
****************
(ஆறு மாதங்கள் கழித்து பேரறிஞர் பெரியசாமி வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்
அவருடைய அறிவுரையின்படி சூற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னேற்றத்திற்கான முயற்சியில் அரசர் இறங்குகிறார்.)
நீர், காற்று இவற்றின் மாசைத்தடுக்க எல்லாத் தொழிற்சாலைகளும் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் அவைகளெல்லாம் மூடப்படும் என்று ஒரு ஆணை பிறப்பித்தார். விஷயம் தெரிந்த மக்கள் மகிழ்ச்சியுற்றனர். தொழிலதிபர்களும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இச்சட்டத்தை விரும்பவில்லை. பலரும் எதிர்த்தனர்.
நாடு பூராவும் மரம் நடு விழா கொண்டாடப்பட்டது. எல்லாத்தரப்பினரும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
மின் பற்றாக்குறையைப் போக்க சூரிய ஒளியைப் பயன் படுத்தி வீடுகளின் அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்த அரசு மக்களைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தது.
என்ன அறிஞரே. நாம் எடுக்கும் முயற்சி நல்ல பலனை விரைவில் அளிக்கும் என்று நம்புகிறேன்.
ஆம் அரசே.இதே போன்று நாம் சுற்றுச்சூழலைக் காக்க பல்வேறு சட்டங்களைக் கொண்டு வர வேண்டி இருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நமது மக்கள் அடிப்படை சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க சில முக்கியத் தேவைகள் உள்ளன. அவற்றை நாம் உடனடியாக செய்ய வேண்டும்.
சரி. அப்படியே செய்வோம்.
****************
காட்சி 4
(முன்று மாதம் கழித்து)
என்னங்க அரசர் நல்லாத்தானே இருந்தார் இத்தனை நாளா? அவருக்கு இப்ப திடீர்னு என்ன ஆச்சு?
எல்லாரும் வீட்டுக்கு வீடு கட்டாயம் கழிவறை ..
அப்படீன்னா?
அதாங்க கக்கூஸ் கட்டி அதைத் தான் பயன் படுத்தணுமாம். ரோட்டோரமோ, வயலோரமோ, ரயில் பாதை ஓரமோ யாரும் ஒதுங்கக் கூடாதாம். வசதி இல்லாதவங்க பொதுக் கழிப்பறைகளைப் பயன் படுத்தணுமாம்.
இதெல்லாம் படிச்சிக் கெட்டுப்போனவங்க பண்ற வேலை.
ஏங்க? கக்கூஸ் கட்டித்தான் நம்ம தாத்தாக்களும், கொள்ளுத் தாத்தாக்களும் , எள்ளுத் தாத்தாக்களும் வாழ்ந்தாங்களா? அதெல்லாம் இல்லாம அவங்க ஆரோக்கியமா வாழல்லை? இந்தப் பட்டணத்திலே இருக்கிறவங்க இந்த லெட்ரீனை அதாங்க கக்கூஸை வீட்டுக்குள்ளேயே கட்டிக்கிட்டு , என்ன வாழ்ந்தாங்க? நெனச்சாலே எவ்வளவு அருவருப்பா இருக்கு? இவங்க சுத்தத்தைப் பத்திப் பேசறாங்க. இவங்களுக்குத்தான் ஏகப்பட்ட இல்லாத பொல்லாத வியாதியெல்லாம் வருது. இது கூட தெரியாம நம்ம ராசா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்காரே. இவரை என்னான்னு சொல்றது?
அது மாத்திரம் இல்லீங்க. பொது இடங்களிலே மலஜலம் கழிச்சா முதல்முறை எச்சரிக்கையும் 500 ரூபா ஃபைனுமாம். ரெண்டாவது முறை இந்தத் தப்பை செஞ்சா 5000 ருபா அபராதம், ஆறு மாச ஜெயிலாம். மூணாவது முறைன்னா ஆயுள் தண்டனையாம்.
பொது இடங்களிலே சிறுநீர் கழிச்சாலும் சரி, குப்பை போட்டாலும் சரி கடுமையான அபராதத்தோட தப்புப் பண்றவங்களோட ரேஷன் கார்டுலயிருந்து அவங்க பேரை நீக்கிடுவாங்களாம்.
அதைவிட கொடுமை எச்சில் துப்பினாலும் கடுந்தண்டனை உண்டாம். 1000 ருபாயிலிருந்து 25000 ரூபா வரையிலும் ஃபைனாம்.
உலகிலேயே நம்ம அளவுக்கு அதிகமாகவும், வெகு தூரம் போற அளவுக்கு கண்ட இடத்தில் எச்சில் துப்புறவங்க கிடையாதாம். இதை நெனச்சி நாம அவமானப் படணுமாம். நம்ம நாராயணசாமி ஒலிம்பிக்குலே துப்புற போட்டி வெச்சா தங்க மெடல் வாங்கறதுக்காக் அவர் பிராக்டிஸ் பண்றதோடே இல்லாம, பல பேருக்கும் எச்சில் துப்புறதுலே பயிற்சிக்கூடம் அமைச்சு சொல்லிக் கொடுக்கறாராம்.
அப்படி எச்சில் துப்பினா இனிமேல் எச்சில் துப்பினவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் ஆயுள் உள்ள வரை அரசாங்கத்தோட எந்த சலுகையும் கிடைக்காதாம். சமையல்வாயு சிலிண்டரை தள்ளுபடி விலையிலே அவங்களுக்குத் தரமாட்டாங்களாம். இதே போல பொது இடங்களில் புகை பிடித்தல், குடித்துவிட்டு பொது அமைதியைக்கெடுத்தல் ஆகிய குற்றங்களுக்கும் கடும் தண்டனை உண்டு.
குழந்தைங்க அசிங்கம் செஞ்சா அவங்களுக்குமா தண்டனை?
ஊஹூம். அவங்களுக்குப் பதிலா குழந்தையோட அம்மா, அப்பாக்களுக்குத் தண்டனை உண்டு.
என்னங்க இது. ரொம்பவும் கொடுமையா இல்லே இருக்கு?
இப்ப நம்ம அடிமடியிலேயே கையை வைக்கிற மாதிரி இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தா நாம எப்படி ஏத்துக்க முடியும்?
நாம இதுக்கு மேலேயும் சும்மா இருந்தா நமக்கு மான ரோஷமே இல்லேன்னு ஆயிடும்.
என்ன ஆனாலும் சரி. நாம இதை எதிர்த்துப் போராடியே தீரணும்
ரோடுலே குப்பையைப் போட்டா, எச்ச துப்பினா, அபராதம், ஜெயில். என்னங்க இது? எச்ச துப்பாம இருக்க முடியுமா? ரோடுன்னா நாலு பேர் குப்பையைப் போடத்தான் போடுவாங்க. அது ஒரு தப்பா?
மலஜலம் ரோட்டுல கழிச்சா தண்டனையா? நல்லா இருக்கே நியாயம்.
குடிச்சுட்டு ரகளை பண்ணறவங்களை தண்டிக்கிறது நியாயம். புகை பிடிக்கிறதுனாலே இவங்களுக்கு என்னங்க வந்தது? நாம காசு கொடுத்து வாங்கி விடற புகையை நாம நம்ம மூக்குக்குள்ளேயா விட்டுக்க முடியும்?
ரொம்ப அனியாயமா இல்லே இருக்கு.
இதெல்லாம் நம்ம அடிப்படை உரிமை. இதை நாம எப்படிங்க ஏத்துக்கறது?
ராசா இத்தனைநாள் செஞ்ச நமக்கு செஞ்ச நல்லதை எல்லாம் ஒரு நிமிஷத்துலே கெடுத்துக்கிட்டாரு.
நாம எல்லாரும் இத்தனை நாளா ஒண்ணு சேராம சும்மா இருந்துட்டோம் . இனிமேலும் சும்மா இருந்தா எப்படி?
நாம போராடியே தீரணும்.
பொதுமக்களே. பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள். போராடுவோம் போராடுவோம். நம் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டப் போராடுவோம்.
பொது மக்கள் சிலரின் அதிருப்தியைக் கண்டு அரசாங்க ஆணையால் ஏற்கெனவே கடுப்படைந்திருந்த தொழிலதிபர்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களைத் தூண்டி விட போராட்டம் பலத்து வெடிக்கிறது.
( எங்கு பார்த்தாலும் அரசர் ஒழிக, அரசர் வழிக என்ற ஓசை விண்ணைப் பிளந்தது)
***************
காட்சி 5
என்ன? நாட்டிலே பெரிய போராட்டம் வெடித்திருக்கிறதாமே. நான் என்ன மக்களுக்கு நல்லது செய்வதற்குத்தானே முயலுகிறேன். அதற்கு எதிர்ப்பா?
அரசருக்கு நம் அடிப்படை உரிமைகளில் தலையிட உரிமை கிடையாது. அதை எதிர்த்துப் போராடுவோம் என்று கூச்சலிடுகிறார்கள் அரசே.
நம் மாஜி சுகாதார மந்திரி மார்த்தாண்டன் கூட அவர்கள் பக்கம் சேர்ந்து விட்டார்.
சுற்றுப் பயணம் சென்றபோது ஏர் போர்ட்டில் எச்சில் துப்பி நம் நாட்டின் மானத்தை வாங்கினாரே. அவரா?
ஆம். அரசே.
அவர் தலைமையில் சேனாதிபதி, நமது படை வீரர்கள், மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நம் அரண்மனையை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள் அரசே.
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று அல்லும் பகலும் பாடுபட்ட என்னை எதிர்த்தா இந்தப் போராட்டம்? அவர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
(அதற்குள் மந்திரி மார்த்தாண்ட னும், சேனாதிபதியும், சிப்பாய்களும், பொதுமக்களும் அரண்மனையில் நுழைய )
நான் உங்களை, உங்களை என்ன, உன்னைக் கைது செய்கிறேன் விஜயா.
ஆம். அவரைக் கைது செய்யுங்கள்.
இன்று முதல் மக்கள் ஆட்சி என் தலைமையில்.
வாழ்க மக்கள் ஆட்சி. வீழ்க மன்னன் ஆட்சி.
கொடுங்கோல் மன்னன் ஒழிக.
புதிய மன்னன் மார்த்தாண்டன் வாழ்க.
மார்த்தாண்டன் அரசபீடத்தில் அமர்கிறார்.
(அரசனை சிறைக்காவலர்கள் இழுத்துச் செல்கின்றனர்.)
அரண்மனையின் சுவர்களிலெல்லாம் எல்லோரும் சொல்லொணா மகிழ்ச்சியுடன், வாய் நிறைய போட்டுக் கொண்டிருந்த வெற்றிலைப் பாக்கு மற்றும் புகையிலையைக் குதப்பி, நாராயணசாமி தலைமையில் அந்த எச்சிலை துப்பிப் புது ஆட்சியை வரவேற்கிறார்கள். நாராயணசாமிக்கு துப்புக் கலைஞர் என்ற கௌரவப்பட்டம் கிடைத்ததாகக் கேள்வி.
முற்றும்
(சீ! இது என்ன அய்யா கதை என்று காரித் துப்புகிறீர்களா?)
இப்படி ஆகிவிடக்கூடாதே என்பதுதான் என்கவலை.
இன்று எச்சில் துப்புவதைத்தடை செய்ய அரசாங்கம் சட்டம்கொண்டு வர இருக்கிறது.
அரசாங்கம் சுற்றுச்சூழலை சீர்செய்யும் முயற்சியில் நாம் ஒன்று சேர்ந்து பாடு படுவோம்.