குமரேச சதகம் - பெரியோர் சொற்படி நடந்தவர் – பாடல் 45

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தந்தைதாய் வாக்யபரி பாலனம் செய்தவன்
தசரத குமாரராமன்
தமையனருள் வாக்கியபரி பாலனம் செய்தோர்கள்
தருமனுக் கிளை யநால்வர்

சிந்தையில் உணர்ந்துகுரு வாக்யபரி பாலனம்
செய்தவன் அரிச்சந்திரன்
தேகியென் றோர்க்கில்லை எனாவாக்ய பாலனம்
செய்தவன் தான கன்னன்

நிந்தைதவிர் வாக்யபரி பாலனம் செய்தவன்
நீள்பலம் மிகுந்தஅனுமான்
நிறைவுடன் பத்தாவின் வாக்யபரி பாலனம்
நிலத்தினில் நளாயினிசெய்தாள்

மந்தைவழி கோயில்குள மும்குலவு தும்பிமுகன்
மகிழ்தர உகந்ததுணைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 45

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மந்தையிலும், வழியிலும், கோயிலிலும், குளக்கரையிலும் திருக்கோயில் கொண்ட யானைமுகக் கடவுள் மகிழும்படி விரும்பிய தம்பியே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

பெற்றோர் சொல்லைக் காத்து நடந்தவன் தசரதன் மகனான இராமன்; தமையன் கூறிய சொல்லைக் காத்தவர் தருமபுத்திரனுக்குத் தம்பியரான நால்வர்கள்;

உள்ளத்திலே ஆராய்ந்தறிந்து ஆசிரியன் சொற்படி நடந்தவன் அரிச்சந்திரன்; ஏழையென்று வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத சொல்லைக் காப்பாற்றியவன் கொடையாளியாகிய கன்னன்;

பழியற்ற (இராமனுடைய) சொல்லைக் காப்பாற்றியவன் மிக்க வலிமைபெற்ற அனுமான்; கற்புநெறி ஒழுக்கத்துடன் கணவன் சொல்லை உலகத்தில் நளாயினி காப்பாற்றினாள்.

விளக்கவுரை:

இராமன் தன் தந்தையான தசரதன் சொல்லைக் காப்பாற்றக் காட்டிற்குப் பதினாலு ஆண்டுவரை
சென்றிருந்தான்.

பொறுங்கள் என்று தருமன் கூறியபொழுதெல்லாம் வீமன் அருச்சுனன் நகுலன் சகாதேவன் என்னும் நால்வரும் அணைகடவாத வெள்ளம் போலிருந்தனர்.

அரிச்சந்திரன் தன் ஆசிரியனான வசிட்டன் சொல்லைக் காப்பதற்குப் பொய்யாநெறி
பூண்டான்.

இறக்கும் நிலையிலும் தன் அறத்தின் பயனையுங் கொடுத்தான் கன்னன்.

இராமனுடைய சொல்லைக் காப்பாற்றியவன் மிக்க வலிமைபெற்ற அனுமான்;

கற்புநெறி ஒழுக்கத்துடன் கணவன் சொல்லை உலகத்தில் காப்பாற்றிய நளாயினி.

கருத்து:

பெரியோர் சொல்லைத் தட்டாதவர் பெருமையடைவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-20, 8:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

சிறந்த கட்டுரைகள்

மேலே