301 அறிவில்லாத வேலையாளைச் சினப்பது அறமன்று - சினம் 7

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

தழையுஞ் செல்வத்துட் பிறந்துநல் லோரவை சார்ந்து
பிழையில் நூலெலா முணர்ந்துநீ வைகலும் பிழைத்தாய்
இழையுந் தீனராய்ப் பிறந்துகற் றிடவகை யில்லா
உழையர் செய்பிழைக் காமுனிந் தனையிதென் னுளமே. 7

- சினம்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சமே! வளர்தலுள்ள செல்வமுள்ள குடும்பத்தில் பிறந்து, நற்குணமுள்ளவர் குழுமத்தில் சேர்ந்து, குற்றமற்ற நூல்களெல்லாம் கற்று உணர்ந்து நாடோறும் நீ வாழ்கின்றாய்.

வலிமையற்ற வறியராய்ப் பிறந்து, கல்வி கற்க வசதியில்லாது உன்னிடம் வேலை செய்யும் வேலையாள் செய்யும் தவறுகளுக்கா கோபம் கொள்கிறாய்! இது என்ன சொல்” என்றும், அறிவில்லாத வேலையாளைச் சினப்பது அறமன்று என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.

தழைதல் - வளர்தல். வைகலும் - நாள்தோறும்.
உழையர் - வேலையாள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-20, 8:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே