ஏன் நஞ்சு தின்றார்
ஒருவர், சிவபெருமான் நஞ்சினை உட்கொண்ட சிறப்பினை வியந்து கூறிக் கொண்டிருந்தார்..மயிலாடுதுறை என்னும் தலத்திலே நிகழ்ந்த நிகழ்ச்சி இது. அதனைக் கேட்டுக் கொண்டிருந்த காளமேகம். இப்படி ஒரு பாடலைச் சொல்லி அவரைத் திகைக்க வைக்கின்றார்.
நேரிசை வெண்பா
வள்ள லெனும்பெரிய மாயூர நாதருக்கு
வெள்ளிமலை பொன்மலையு மேயிருக்கத் - தெள்ளுமையாள்
அஞ்சலஞ்ச லென்றுதினம் அண்டையிலே தானிருக்க
நஞ்சுதனை யேனருந்தி னார்? 119
- கவி காளமேகம்
பொருளுரை:
வள்ளன்மை உடையவர் என்று புகழ்பெற்றவரான மாயூரநாதருக்கு, வெள்ளி மலையாகிய கைலாயமும் பொன்மலையாகிய மகா மேருவுமே சொந்தாயிருக்கும் பொழுதும், தெளிந்த அறிவுடையவளான உமையம்மையானவள், நாள்தோறும், அஞ்ச வேண்டாம் அஞ்ச வேண்டாம் என்று சொல்லியவளாக அவரின் அருகிலேயே இருக்கும்பொழுதும், விரக்தியுற்றுப் பெருமான் ஏனய்யா நஞ்சினை உட்கொண்டார்?
(மாயூரம் - மயிலாடுதுறை இப்பொழுது மாயவரமாகிச் சிதைந்து வழங்கும் பழைய ஊர்)