300 சினமுள்ளவர் நச்சு உயிர் சேர் துன்புறுவர் – சினம் 6
கலித்துறை
{மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காச்சீர் வரலாம்)
நாளு நாங்கொளுந் துயர்க்கெலாங் காரண நாடின்
மூளுஞ் சீற்றத்தின் விளைவதா(ம்) முனிவக முடையோர்
தேளும் பாம்பும்வெஞ் சினவிலங்(கு) இனங்களு நனிவாழ்ந்(து)
ஆளுங் கானில்வாழ் பவரெனத் தினமஞ ரடைவார். 6
- சினம்
- வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”என்றும் நாம் அடையும் துன்பங்களுக்கெல்லாம் காரணங்களை ஆராய்ந்தால், நமக்குள் ஏற்படும் கோபத்தின் விளைவேயாகும்.
கோபம் உள்ளத்தில் உடையோர் தேள், பாம்பு, கொடிய விலங்குகளும் மிகுதியாக வாழ்ந்து ஆட்சி செய்யும் காட்டில் வாழ்பவர் போன்று நாள்தோறும் துன்பம் அடைவார்” என்று இப்பாடலாசிரியர் எச்சரிக்கிறார்.
முனிவு - சினம். அகம் - உள்ளம். அஞர் - துன்பம்.