மெடிக்கல் லீவு
என்னுடைய 33 வருட சர்வீஸில் உடம்பு சரியில்லை என்று நான் லீவு போட்டதே கிடையாது. ( knock on wood) ரொம்பப்போனால் சளி, ஒரு அரை நாள்ஜூரம் வரும். அதையும் லீவு போடாமலே மேனேஜ் பண்ணி விடுவேன். கவர்மெண்ட் செர்விசில் இருந்ததால் எனக்கு 5 ஆண்டுகள் மெடிக்கல் லீவு உண்டு. என் நலம் விரும்பிகள் “ என்னடா, நீ உன் மெடிக்கல்லீவை இப்படி வேஸ்ட் பண்ணுகிறாயே” என்று என்னை உசுப்பி விட, ரிடயர் ஆவதற்குள் எப்படியும் ஒரு 15 நாளாவது மெடிக்கல் லீவு போட்டு அதை அனுபவித்து விட வேண்டும் என்று எண்ணினேன். அதே போல் ஹாஸ்டல் டாக்டரிடம் சொல்லி ஒரு மெடிக்கல் செர்டிபிகேட் வாங்கி 15 நாள் மெடிக்கல் லீவு அப்ளை செய்தேன்.
எதையோ சாதித்ததுபோல மகிழ்ச்சி. இன்னும் 15 நாளைக்கு ஆபீசுக்குப்போக வேண்டாம் என்ற எண்ணமே எனக்கு ஒரு மாதிரியான புத்துணர்ச்சியைத் தந்தது.
இரண்டு, மூன்று நாட்கள் இனிதே கழிந்தன. மெடிக்கல் லீவு போட்டிருந்த படியால் நான் வெளியூர் எங்கும் போக முடியவில்லை. வெளியிலும் இஷ்டம்போல் சுற்ற முடியவில்லை. அப்படி சுற்றும்போது என் டிபார்ட்மெண்ட் டைரக்டரோ வேறு யாரோ பார்த்து விட்டால் வம்பாகிவிடும். நான் அத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த என் நன்மதிப்புக்கும், நற்பெயருக்கும் ஊறு விளைவிக்கும். இதனால் பெரும்பாலான நேரமும் நான் வீட்டிலேயே கழிக்க நேர்ந்தது.
நான்கு, ஐந்து நாட்களுக்குப்பின் மிகவும் போரடிக்க ஆரம்பித்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. தினமும் சுறுசுறுப்பாக எழுந்திருந்து காலேஜுக்குப்போய் மாணவர்களுக்கு கிளாஸ் எடுத்து, நண்பர்களை சந்தித்துப் பேசும் சுகம் வீட்டில் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருப்பதில் இல்லை. அவ்வாறு இருப்பதாலேயே எனக்கு ஜூரம் வருவது போலிருந்தது.
நிஜமாகவே எனக்கு உடம்பு சரியில்லை என்று தோன்றியது. டாக்டரிடம் சென்று மருந்து வாங்கிக்கொண்டேன். ஒரு பொய்சர்டிபிகேட் கொடுத்து மெடிக்கல் லீவு வாங்கியது கடவுளுக்கே பொறுக்கவில்லை போதும். என்லீவை நியாயப்படுத்த எனக்கு ஆண்டவன கொடுத்த பரிசாக அதை நான் ஏற்றுக்கொண்டேன். ஏமாற்றுகிறோமே என்று குறுகுறுத்த என்மனம் இப்போது சமாதானம் அடைந்தது. லீவு முடிவதற்குள் உடம்பு சரியாகவே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் காலேஜுக்குச் சென்று என் வழக்கமான வேலைகளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் செய்ய ஆரம்பித்தேன்.
ஒரு 15 நாட்களுக்கே அந்தப்பாடு பட்டேன். ( அப்போது எனக்குத்தெரியாது, பிற்காலத்தில் கொரோனாவினால் மாதக்கணக்கில் வீட்டில் வேலைவெட்டி இல்லாமல் அடைந்து கிடக்கப்போகிறேன் என்று)