அழுக்காறு உடையார் கேடு வழுக்காமல் எய்தி மடிவார் - பொறாமை, தருமதீபிகை 624
நேரிசை வெண்பா
உற்றதீக் கொள்ளி உறைத்த வுடனதுவே
முற்ற எரிந்து முதலழியும் – பற்றும்
அழுக்கா(று) உடையாரும் அப்பரிசே கேடு
வழுக்காமல் எய்திமடி வார். 624
- பொறாமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தீக்குச்சியை உறைத்த பொழுது அதுவே முதலில் எரிந்து அழியும்; அதுபோல் பொறாமையாளரும் தம் இழி நினைவால் தவறாமல் அழிந்தே தொலைவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். உள்ளே பொறாமை உள்ளவன் தானாகவே அழிந்து ஒழிவான் என்பதை ஒர் அனுபவ உவமையால் இது உணர்த்தியுள்ளது. தீயைக் கொண்டிருப்பது தீக்கொள்ளி: தீக்குச்சி என்னும் வழக்கு இக் காலத்தில் வழங்கி வருகிறது.
எண்ணம் தீமை ஆயபொழுது அந்த மனிதன் தீயவன் ஆகின்றான்; ஆகவே அழிவும் துயரும் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. அந்த அல்லல் நிலையிலிருந்து மீள முடியாமல் அவலமாய் அவன் அழிந்தே போகின்றான். தம் போக்கை உணர்ந்து திருந்தாமல் புலையாய் இழிந்துழல்வது புலன்கெட்ட மாக்களின் நிலையாய்த் தொடர்ந்து நெடிது நீண்டு வருகிறது.
உள்ளம் கெட்டவன் உயிர்க் கேடனாய் உழலுகின்றான். பிறர்மேல் பொறாமை மண்டித் தன் நெஞ்சம் கனலும் போது அந்த மனிதன் தீயுள் விழ்ந்தவனாய் மாய நேர்கின்றான். தன்னுடைய அழிவு நிலையை அறியாமல் கழிமடையனாய் அவன் பழி துயரங்களில் இழிவது பெரிய பரிதாபமாயுள்ளது.
தீக்குச்சியை உறைத்தவுடனே முதலில் அதுவே பற்றி எரிந்து போகிறது. அயலாருடைய வீட்டைக் கொளுத்த வேண்டும் என்று கருதி உறைத்த தீக்குச்சி முன்னதாக அதுவே முடிந்து அழிந்து படுகின்றது;
அதுபோல் பிறர் கேடு எண்ணுகிற பொறாமையாளனும் முன்னுற அழிந்தே போகின்றான். தன் அழிவுக்குத் தானே காரணன் ஆதலால் அழுக்காறாளன் எவ்வளவு அபாய நிலையிலுள்ளான் என்பதை எளிதே அறிந்து கொள்ளலாம்.
அழுக்கா(று) உடையார்க்(கு) அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது. 165 அழுக்காறாமை
பொறாமையுடையவர்க்கு வேறுபகைவர் வேண்டியதில்லை; அதுவே அவர்க்கு எவரும் செய்ய முடியாத கேட்டை விரைந்து செய்து விடும் என வள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொறாமை அழிகேடுடையது; அதனை ஒழிய விடுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.