5 அவளுடன் பேசும்போது

----------------------------------

போனை அவள் எடுத்ததும் ஒரே ஒரு கேள்விதான் என்னால் கேட்க முடிந்தது.
"உலகத்தில் மிக அழகானது என்ன? உனக்கு அது தெரியுமா?"

இப்போவே சொல்லணுமா?

இல்ல. யோசனை பண்ணு. நான் நேர்ல வரேன். கொஞ்ச நேரத்தில் வருவேன்.

வாங்க ஸ்பரி...

கதவை திறந்து வைத்து வாசலில் நின்றிருந்தாள். அந்த மாலையில் வாசல் முழுக்க தெளித்து வைத்திருந்தாள்.

அடுத்த வீட்டு காம்பவுண்டில் பூக்கள் மலர்ந்து இருந்தன. சாயங்காலத்தை வானமூட்டம் மறைத்து கொண்டிருந்தது.

இந்தா...

என்னது இது?

பிடிகிரி பிஸ்கட்ஸ். குட்டிகளுக்கு வாங்கினேன். உனக்கும் கொஞ்சம் ஸ்வீட்ஸ் வாங்கினேன்.

இப்படியே உக்காருவோமா ஸ்பரி...

ம்ம்ம்.

நீங்கள் கேட்டிங்களே? அழகானது...

ம்ம்...

அது என்னது ஸ்பரி...

அதான் கேட்டேனே... உன் மனதில் என்ன தோணுது?

யோசிச்சேன். நிறைய இருக்கு.
ஆனா ஒன்னை விட ஒன்னு ஏதோ ஒரு நேரத்தில் காரணத்தில் அழகா இருக்கு.

ரொம்ப அழகா இருக்குன்னு ஒண்ணை நினைச்சா அது அப்பறம் மனதில் இருந்து மறைஞ்சு போய்டுது.

ரொம்ப யோசிச்சா வெறுமை வருது ஸ்பரி. ஒருவேளை காலங்களும் அதன் பரிமாணங்கள் மட்டும்தான் அழகோ?

காலங்களுக்கு உருவம் இல்லையே!

உணர்வுகள்? அல்லது உணர்ச்சிகள்?

அது ஒன்றுக்குள் ஒன்று கொந்தளிக்கும். சில சமயம் பிறரோடு சேர்ந்து நம்மளை பிச்சு போட்டு போய்டும்.

ஒரு கவிஞர் சொல்வாரே, புத்தகங்களே.. குழந்தைகள் பாவம் அவர்களை கிழித்து விடாதீர்கள்னு. என்ன கற்பனை அழகு...

ஒருவேளை கடலுக்கு அந்தப்பக்கம் அழகா இருக்குமோ?

அது வெறும் வெட்டவெளி ஸ்பரி. மனதுக்கு உரிய கற்பனைகள் இல்லாதது.
உடைக்க முடியாது. அங்க நம்பிக்கைகள் இல்ல. ஞாபகங்கள் இல்ல. கனவு இல்ல.

அவள் கண்கள் துளிர்த்தது...

நமக்கு மட்டுமே உரியதுனு ஒன்றை நினைக்கும்போது அந்த நினைவுகளோடு மட்டும் வாழ்ந்து வாழ்ந்து தோற்கும்போது முடிவில் அழுகை மட்டுமே வருது ஸ்பரி... அப்படினா ஒருவேளை கண்ணீர் அழகா ஸ்பரி?

இருக்கும். அப்படித்தான் தோணுது.

நான் கிளம்பட்டுமா?

நாளைக்கு வரும்போது நான் படிக்க ஒரு புஸ்தகம் கொண்டு வாங்க...

என்ன புத்தகம் வேணும்.?

நான் படிக்கணும்னு நீங்க எந்த புத்தகத்தை படிக்கும் போது உங்க மனசில் நினைச்சுப்பீங்க? அந்த புக்...

அது நிறைய இருக்கே.

அதுல ஒண்ணு போதும்.

நான் எழுந்து சில தூறல்களுக்கு நடுவில் நடந்து போனேன். சிலரின் கண்ணீர் அழகானதுதான் என்று தோன்றியது.


🦈🦈🦈🦈🦈

எழுதியவர் : ஸ்பரிசன் (26-Jun-20, 9:40 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே