குமரேச சதகம் – ஒருசார்பு சொல்லேல் - பாடல் 62

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஓரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்
துரைப்போர் மலைக்குரங்காம்
உயர்வெள் ளெருக்குடன் முளைத்துவிடு மவர்இல்லம்
உறையும் ஊர் பாழ்நத்தம்ஆம்

தாரணியில் இவர்கள்கிளை நெல்லியிலை போல்உகும்
சமானமா எழுபிறப்பும்
சந்ததியிலா துழல்வர் அவர்முகத் தினின்மூத்த
தையலே குடியிருப்பாள்

பாரமிவர் என்றுபுவி மங்கையும் நடுங்குவாள்
பழித்ததுர் மரணமாவார்
பகர்முடிவி லேரவுர வாதிநர கத்தனு
பவிப்பர்எப் போதுமென்பார்

வாரமுடன் அருணகிரி நாதருக் கனுபூதி
வைத்தெழுதி அருள் குருபரா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 62

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

அன்புடன் அருணகிரியாருக்கு அநுபூதி யெழுதும் நிலையை அருளிய குருபரனே!, மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

ஒருதலை வழக்காக வந்தவர்களுடைய முகத்தைப் பார்த்துத் தீர்ப்புக் கூறுவோர் மலைக்குரங்காவர்; அவர் வீட்டிலே உடனே உயரமான வெள் எருக்கஞ் செடிகள் தோன்றி விடும்; அவர்கள் குடியிருக்கும் ஊரும் பாழான நத்தமாகிவிடும்.

உலகிலே இவர்களுடைய உறவினர் நெல்லியின் இலைபோலப் பிரிந்து விடுவார்கள்; அவர்களெடுக்கும் ஏழுபிறப்பிலும் ஒன்றுபோல் கால்வழியில்லாமல் வருந்துவர்; அவர்களுடைய முகத்திலே மூதேவியே வாழ்வாள்;

நிலமகளும் இவர்களைத் தாங்கமுடியாமல் அஞ்சுவாள்; பிறர் பழிக்கும்படி கெடுதியான சாவு பெறுவர்; இவ்வாறு இழித்துக் கூறும் முடிவுக்குப்பின் எக்காலத்தும் இரவுரவம் முதலான நரகங்களிலே கிடப்பர் என்று பெரியோர் கூறுவர்.

கருத்து:

ஓரமாக வழக்குரைத்தலைவிடக் கொடிய தீமை வேறொன்றும் இல்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-20, 7:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே