தீயனைய கோபத்தை மாய அவித்தவரே மாண்புறுவர் - கோபம், தருமதீபிகை 634

நேரிசை வெண்பா

தீயனைய கோபத்தைத் தேர்ந்த அறிவினால்
மாய அவித்தவரே மாண்புறுவர் - ஆயாமல்
அத்தீ வளர்த்தோர் அறநலங்கள் யாவும்போய்ச்
செத்தவரே யாவர் தெளி. 634

- கோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கோபம் கொடிய தீ; தெளிந்த அறிவினால் அதனை விரைந்து அவித்தவர் என்றும் சிறந்து விளங்குவர், அதனை அவியாமல் வளர்த்தவர் அற நலங்களை இழந்து அழிந்தே போவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நல்ல பண்பட்ட அறிவு கோபத்தை அடக்கி ஆளும். பாம்புக்குப் பல்லும் தேளுக்குக் கொடுக்கும் போல் துடுக்கும் மூர்க்கமும் கோபத்திற்குத் துணைகளாய் அமைந்துள்ளன. மூர்க்கம், மூடம் முதலிய பீடைகளைக் களைந்து விடின், கோபம் இருந்தாலும் பல் இழந்த பாம்பு போல் அது பதுங்கிக் கிடக்கும். நல்ல இயல்புகளைப் பழகிச் சாந்த சீலங்களோடு தழுவி வளர்ந்துவரின் அல்லலான அவலங்கள் தாமாகவே அழிந்து போகின்றன.

கோபம், பொறாமை முதலிய இழிவுகள் எல்லாம் வீரியம் குன்றியுள்ள இடத்திலிருந்துதான் சீறி எழுந்து வெளி வருகின்றன. சிறுமைப் புலைகளிலிருந்து விளைவன தீமைகளாய் நின்றன.

சிறந்த திரு, உயர்ந்த அறிவு, தேர்ந்த பண்பாடு, ஆர்ந்த சீலம் முதலிய மேன்மைகள் நிறைந்துள்ள இடத்தில் சினம் முதலிய கீழ்மைகள் சேர்ந்து நில்லா. புன்மைகள் மலிந்துள்ள இடத்திலிருந்துதான் புலைத் தீமைகள் பொங்கி வருகின்றன.

Anger is certainly a kind of baseness. – Bacon

‘கோபம் உண்மையாகவே ஒர் இழிவின் சின்னம்’ என்னும் இது இங்கே தெளிவாய் அறியவுரியது.

ஈனம், நீசம், இழிவு முதலிய பழிமொழிகளால் கோபம் குறிக்கப்படுவதால் அதனைச் சேர்ந்தவர் நிலைகளையும் புலைகளையும் ஓர்ந்து உணர்ந்து கொள்ளுகிறோம்,

நேரிசை வெண்பா

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
1பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. 70 நாலடியார்

கீழ்மக்கள் சினந்து சீறி வைதாலும் மேன்மக்கள் மாறிச் சீறார், அமைதியாய்ப் பொறுத்தே போவர் என இது உணர்த்தியுள்ளது. ஆன்ற அமைதி சான்றோர் இயல்பாம்.

கயவர், நாய், கீழ்மக்கள் என்றது சினந்து இகழ்பவரது இழி நிலைகளை நினைந்து வந்தது. சினம் மனிதனைச் சின்னவனாக்கிச் சிறுமையில் தள்ளுகிறது, பொறுமை பெரியவனாக்கிப் பெரும் புகழ் தருகிறது. தீய சினம் நோய் விளைத்து வருதலால் நாய், பேய், தீ என அது இழிக்கப்பட்டது.

‘நாயானது சினந்து நமைக்கடித்தால் நம்முடைய
வாயால் அதைக் கடிக்க வாறுண்டோ?”

வாய்த் துடுக்குடைய ஒருவன் ஒரு பெரியவரைத் தெருவில் இகழ்ந்து பேசினான். அவர் யாதும் மாறு பேசாமல் அமைதியாய் அடங்கிப் போனார். அவருடைய உறவினன் அவரை நோக்கி 'இந்தச் சின்னப்பயல் உங்களை இப்படிச் சிறுமையாய்ப். பேச நீங்கள் பொறுத்து வந்தது எனக்கு வருத்தமாயுள்ளது’ என்றான். அப்பொழுது அவர் இந்த இரண்டு அடிகளை எடுத்துரைத்தார். 'உன்னை ஒரு நாய் கடித்தால் அதனை நீ திருப்பிக் கடிப்பாயா?” என்று அடுத்துக் கேட்டார். பெரியவருடைய மன அமைதியை வியந்து அவன் உவந்து போனான்.

'நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியாமை என்றறிதல் வேண்டும்.' - சிலப்பதிகாரம்

பொறுமையாளரது அரிய பண்பாட்டை இது அறிவுறுத்தியுள்ளது. மரியாதையும் அடக்கமும் மகிமை சுரந்து வருகின்றன.

மாசாய நாவுடையார் வாய் திறந்தால் அவர்களுடன்
பேசாமல் இருந்துவிடும் அஃதன்றோ பெருந்தகைமை. - அஞ்ஞவதைப்பரணி

நல்ல பெருந்தன்மைக்கு அடையாளத்தை இது காட்டியுளது.

இவ்வாறு அமைதியைப் பேணி வருபவர் யாண்டும் பெருமை மிகப்பெற்று இருமையும் பெறவுரிய உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்ளுகின்றனர்.

மாய அவித்தவரே மாண்புறுவர். சினத்தை அடக்கினவரிடம் தவமும் தருமமும் பெருகி வருதலால் அவர் திவ்விய மாட்சிகளை எய்திச் செவ்விய காட்சிகளைப் பெறுகின்றார். தீயது மாயவே நல்லவை யாவும் திரண்டு வருகின்றன. அது மாயாது நின்றால் ஓயாத துன்பங்களாம்.

‘அத் தீ வளர்த்தோர் செத்தவரே யாவர்’. கோபம் ஆகிய தீயை வளர்த்துவரின், உயிரோடு இருந்தாலும் அவர் செத்தவர் நிலையையே எய்திச் சீரழிந்து ஒழிகின்றார். சினத்தால் அறிவு பாழாகி அவலம் பெருகி வருதலால் அவர் இருப்பு இறப்பினும் இன்னாததாய் இழிக்கப்பட்டது.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310 வெகுளாமை

சினத்தில் மிகுந்தவர் செத்தவரே யாவர்; அதனை ஒழித்தவர் என்றும் அழியாத நித்திய நிலையினரே என இது உணர்த்தி யுள்ளது. இறத்தல் - வரம்பு மீறி மிகுதல். கழிசினம் பழிதுயரங்களாய் அழிவே தரும்; அவ்வாறு அழிந்து போகாதீர்; தெளிந்து வாழுமின்! எனத் வள்ளுவர் இவ்வாறு கருணையோடு போதித்துள்ளார்.

சினத்துக்கு இடம் கொடாமல் மனத்தைப் பண்படுத்தி வாழ்ந்து வரின் மகிமைகள் பல சூழ்ந்து வருகின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-20, 12:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே