ஜெயமோகன்

10-ஜூன்-2020
நண்பன் ஜெயமோகன்...
அவனது பிறந்தநாளில்...
குதூகலம் என்னையும்
தொற்றிக் கொண்டது...
சிலவற்றைப் பகிர்ந்து
கொள்ளவும் தோன்றியது...

நெஞ்சிருக்கும் வரை
நினைவில் இருக்கும்...
எம் முத்தான நட்பிற்கு வயது
முப்பத்தேழு வருடங்கள்.. அது
என் வயதின் மூன்றில்
இரு பங்கிற்குச் சமம்...
ஆயிரமாயிரம் பொற்காசுகள்
இதற்கில்லை சமம்...

சென்னையின் பெரும்பகுதி
ஜெமோவுடன் பயணித்த
யமாஹாவில் சுற்றியதில்
தெரிந்து கொண்டேன்...
நட்பு மிக இனிமையானது...
எதனையும் சுற்றாமலேயே
தெரிந்து கொண்டேன்...

வாட்ஸ்அப்பால் தொடர்பில்
உள்ளவர்கள் பலர்...
வாட்ஸ்அப் காலத்திற்கு
முன்பும் எப்போதும் தொடர்பில்
இருந்தவர் சிலர்..
அதில் முதன்மையானவர்
நண்பர் ஜெமோ இவர்...

என் வீட்டுத் தபால்பெட்டி
ஜெமோவின் கடிதங்களால்
அர்த்தங்கள் பெற்றன...
என் இனிய மனப்பெட்டி
அவற்றைப் படித்து அழகாய்ச்
சேமித்து வைத்துக் கொண்டன...

நண்பன் ஜெமோவிடம்
பேசிக்கொண்டே சாப்பிடுகையில்
ஆறுசுவை தாண்டி
ஏழாவதாய் சுவை ஒன்று எட்டும்...
சினிமாப்படம் பார்த்தால்
சுமாரான படமும்
கலைநயமாய்த் தெரியும்...
எங்கள் டிசைன் அப்படி...
இதை இங்கு சொல்லியாக வேண்டும்
உள்ளதை உள்ளபடி...

ஜெமோ தான் உற்சாகம்
கொள்ள விட்டமின்
கொள்வது வழக்கம்...
தற்போதைய விட்டமின்
பெயர் "ஜோ"... அது
மிகவும் ஜோர்...

ஒன்று நினைவிற்கு வருகிறது...
கல்லூரிக் காலத்தில்
விடுமுறைக்கு வீட்டிற்குச்
செல்லும் போதெல்லாம்
என் கஜானா பெரும்பாலும்
காலியாகவே இருக்கும்..
துண்டு விழும் பற்றாக்குறை
பட்ஜெட்டை சரிசெய்ய
உலக வங்கியாய் ஜெமோவின்
உதவும் கரங்கள் நீளும்...

ஒருநாள் ஊருக்குச் செல்ல
பணம் இல்லை... ஜெமோவிடம்
கேட்டிருக்கவும் இல்லை...
கல்லூரியிலிருந்து நான்
விடுதி வருவதற்குள்
எனது நடமாடும் வங்கி
நாகர்கோவில் சென்றுவிட்டது...
ஏதடா இப்படி ஆகிவிட்டதென
எனக்குள் இருந்த பல
சுந்தரராஜன்களின்
ஆலோசனைக் கூட்டம்
அவசரமாய்க் கூடியது...
தீர்மானம் நிறைவேற்றும் முன்
கண்கள் கண்டன... என்
இடத்தில் ரூபாய் ஐம்பது..
வயது ஐம்பது தாண்டியும்
நினைவில் இருக்கிறது அது...

என்னிடம் கையிருப்பு
இல்லை எனத் தெரிந்த
ஜெமோ எனும் வங்கி
விண்ணப்பம் வைக்காமலேயே
பணத்தை நானிருக்கும்
இடத்தில் வைத்துவிட்டுச்
சென்றிருந்தது... நட்பு
அங்கு வென்றிருந்தது...

நண்பன் ஜெயமோகன்...
வாழ்க பல்லாண்டு..
நல்ல வசந்தங்களோடு...
நிறைந்த வளங்களோடு.. இனிய..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
👍😀👏🙏💐🚲🧁🎂

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-Jul-20, 12:30 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 76

மேலே