நண்பர்களோடு நான்

**************************************************



சொந்த ஊருக்கு பயணம்
வெகு நாட்கள் கழித்து..

இதோ..
ஊர் நெருங்கி விட்டது

காய்கறி சந்தையின்
கூட்ட​ நெரிசலில்
பேருந்து ஆமையாய்
நகர்கிறது..

பரபரப்புகளுக்கும்
இரைச்சலுக்கும்
நடுவே..
நான் பயின்ற​ கல்லூரியின்
பக்கம் என் கண்கள் பயணித்தன.

ஏதோ ஒரு
இனம் புரியாத உணர்வில்
இதயம் கனக்கின்றது.

கடந்து போன
அந்த இனிய​ நாட்கள்
மீளாதென்ற​ ஏக்கமா?
அந்த இனிய​ நாட்களை
அசை போட​
இதயம் ஆயத்தமாகிவிட்டது
என்கின்ற​​ ஆனந்தமா?
புரியவில்லை..

சிதறிப்போன நண்பர்கள்
மீண்டும் ஒன்றாக​..
அதே இளமையுடன்
அதே துள்ளலுடன்..
கூடவே நானும்..

கல்லூரி ஆற்றுப்பாலம்..
முன்பை விட​ அகலமாய்
புதுப்பொலிவுடன்.
சீனப் பெருஞ்சுவரின்
சாதனையையும் தகர்க்கும்
எங்கள் பாதச்சுவடுகளின் அலைவுகள்
அந்த ஆற்றுப்பாலத்தில்.

விடுமுறை நாளானாலும்
புளியஞ்சாதத்தோடு
கல்லூரிக்கு வரும்
நண்பர்கள் - ஒரே அரட்டை
விளையாட்டு.

சூரியன் வீடு திரும்பினாலும்
நிலவொளியிலும்
தொடரும் அந்த​
அரட்டை

பேருந்து இப்பொழுது மெல்ல​
வேகம் எடுக்க​..

பரபரப்புகளுக்கும்
இரைச்சலுக்கும்
நடுவே..
ஏக்கத்துடன்
திரும்பி பார்த்தேன்
கல்லூரியை..

அங்கே..

நண்பர்களோடு நான்.
அதே இளமையுடன்
அதே துள்ளலுடன்..



★*******************★****************************

****★********************★***********★**********

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை (28-Jun-20, 11:29 pm)
Tanglish : nanbargalodu naan
பார்வை : 671

மேலே