மகாதேவனும் மாதவனும்

விஷம் உண்ட திண்ணன்
வெண்ணை உண்ட கண்ணன்

ஊழித்தாண்டவக்கூத்து
காளிங்க நர்த்தனக்காட்சி

உடுக்கை கொட்டும் உன்மத்தன்
குழல்இசைகுழையும் கோமகன்

சடையில் கங்கை சந்திரன்
முடியில்முத்துச்சுட்டி மயிற்பீலி

அரையில் புலித்தோல் சுடலை பூசிய உடல்
இடையில் பீதாம்பரம் உடலில் நெய்மணம்

தோளின்அணியாம் தூமணி அரவு
கழுத்தில்ஒளிரும் கனகமணிமாலை

ஞானம் புகட்டும் மோன மூர்த்தி
கீதை மொழியும் புருஷோத்தமன்

காளைஏறும் வேதமுதல்வன்
கருடன்ஏறும் காவல் நாயகன்

முப்புரமெரித்த ஒப்பிலா உத்தமன்
வசை சதம் பொறுத்த வாசுதேவன்

பொன்னிறவண்ணன் போதன் நாதன்
கார்மணிவண்ணன் காதல் கண்ணன்

பிரம்படிபட்ட பெருமனப் பரமன்
தர்மம் காத்து தேர் ஓட்டியதேவன்

திரிசூலம் தாங்கிய தேவர் ரட்சகன்
சக்கரம் ஏந்தும் சாதுஜனப்பிரியன்.

உருவில் திரிபு உண்மையில் ஒருமை
வேற்றுமையில் ஒற்றுமை உண்மை
அறம் ஆழ்ந்துணர ஒன்றேஉண்மை
புறம் அகம் இகம் பரம்யாவையும் ஒன்றே!

எழுதியவர் : இருகரை சாத்தன் (4-Jul-20, 4:24 pm)
பார்வை : 37

மேலே