காலாறக் கடலோரம்

ஆதவன் தன்அனல் தணிக்க,
ஆழ்கடல் மூழ்கும் அந்திமாலை.
எடையைக் குறைக்க கடலோரம்,
உடல் வேர்க்க நடைபயின்றேன்.

பார்வை சுழன்றது கரையிலே.
பார்த்தவை உழன்றது மனதிலே.

பருத்த உடலுடன் காரில் வந்தவர்,
கருத்தாய் நடந்தார் உடல் குறைக்க.
உழைக்கும் வறியவனோ, பாரம்
இழுத்து நடந்தான் குடல் நிரப்ப.
உடல் குறைக்க ஒருவன்.
குடல் நிறைக்க ஒருவன்.

கற்பு விற்பனைக்கு வந்தது
கண்ணகி சிலைக்கு கீழே.
காணச் சகிக்காத கண்ணகி,
காணாது ஒளிந்து கொண்டாள்.

உருப்படாத சில மனிதர்கள்,
உறங்க இடம் தேடினார்கள்,
உழைப்பாளர் சிலை கீழே.

எதிர்காலம் அசைபோட அங்கே,
பசைபோல ஒட்டிய காதலர்கள்,
படகோரம் பதுங்கி நின்றார்.

நுரைத்த அலைகள் கரை மோத,
கரையாத நினைவுகள் கவிபாட,
புதிரான பதிவுகள் மதியேந்தி,
வீதியில் நடந்து வீடு வந்தேன்.


ச.தீபன்.
94435 51706

எழுதியவர் : தீபன் (6-Jul-20, 5:38 pm)
சேர்த்தது : Deepan
பார்வை : 61

மேலே