முறிந்த கிளை

அழகு மலர் ஆரணங்கு, ஒயிலான
அன்னமென நடந்து வந்து, அந்த
காருடை பொன்திகழ் குயில் ஓடும்
பாரிடை விரிந்த அடர் சோலையில்,
வளைந்தோடும் நதியில் அவள் நீராட,
வளமார் நதியில் அவள் முகம் பார்த்து
உளமார வெட்கிக் குனிந்தது நிலா.

நனைந்த ஆடையுலர்த்தி நங்கை
புனைந்துடுத்தி இல் விரைந்தாள்.
மனமெல்லாம் மணவாளன் எண்ணம்.
மனம் மகிழ மணவாளனுக்கு
மணமான உணவு ஏது செய்யவென
சிந்தித்தே விரைந்து ஓடினாள்.
நேரத்தை
நிந்தித்தே களைத்து வாடினாள்.

எதிர் வந்த ஆடவன் ஒருவன்,
ஏந்திழையாளைக் கண்ணுற்று,
இனம் அறியா காதல் நோயால்,
இன்னலுற்றான் அந்த வேங்கை.

மயில் ஒத்த தோகையாள்
மனம் ஒத்து என் வாழ்வில்
காலமுழுதும் கூட இருந்தால்
களிப்பு மிகுமென நினைத்தான்.
அவன் ஊன் பழித்து உள்ளம்
புகுந்த அவள்,
அந்த

உள்ளம் கிழித்து அவன்
உணர்வாகி விட்டாள்.

மனம் மயங்கிய அந்தக் காளை
மணம் புரிய சம்மதம் கேட்டான்.
வேங்கையவன் வார்த்தை
செவியுற்ற மங்கையவள்
மனங்கலங்கி பதறினாள்.
அய்யகோ! வேறு ஆடவன் நெஞ்சின்
மையத்தில் நானா? என் நினைவா?
தவறிழையாத் தளிர்மேனி தாரகை
பதறி, மேனி விதிர்க்க விரைந்தாள்.

தவறிழைத்தேன் கற்பிழந்தேன்.
கவரி மானனைய உயிர்விடுவேன் என
புயலாய்ப் பூதச் சதுக்கம் புகுந்தாள்

மாண்பான தமிழ் ஆன்றோர்களே
மணிமேகலை கருத்து ஏற்புடையதா?

ஆண் பெண்ணின் மீது ஆசை
கொண்டால்
ஆணின் தவறா? பெண்ணின்
தவறா?

நஞ்சனைய நெஞ்சுடைய அந்த
வஞ்சகன்தானே மாய வேண்டும்.
மானமுள்ள என் தமிழச்சி ஏன்
மண்ணை விட்டு மறைய வேண்டும்.

முதிர்ந்த நம் இலக்கியச் சோலையில்
முறிந்து விழுந்த ஒரு கிளையோ இது.


ச.தீபன்.
நங்கநல்லூர்.
94435 51706

எழுதியவர் : தீபன் (6-Jul-20, 7:15 pm)
சேர்த்தது : Deepan
Tanglish : murintha kilai
பார்வை : 88

மேலே