மருத்துவ வெண்பா - முள்ளம்பன்றி - பாடல் 65

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

முன்னுரை:

சில நாட்களுக்கு முன்னால் National geography Channel பார்த்துக் கொண்டிருந்த போது காட்டில் வாழும் இரண்டு ஆதிவாசிகள் உணவுக்காக முள்ளம்பன்றியை வேட்டையாடிப் பிடித்தனர்.

அவைகள் தங்குமிடத்தை அறிந்து, அங்கே குழி பறித்து, ஒருபக்கம் அடைத்து மறு பக்கம் நெருப்புக் கொளுத்தி புகை மூட்டம் போட்டு சிறிது நேரத்தில் அந்தக் குழியில் நுழைந்து இறந்து விட்ட இரு முள்ளம் பன்றிகளைப் பிடித்தார்கள்.

காட்டுவாசிகளுக்கு உடல் வலிமை தரும் மாமிச உணவுகளில் ஒன்று முள்ளம்பன்றி இறைச்சியாகும்.

நேரிசை வெண்பா:

காட்டுப்பன் றிக்குணமுங் காயமெல் லாமுள்ளை
நீட்டுப்பன் றிக்குணமு நேரொன்றாய்க் – காட்டுகினும்
இப்பன்றிக்(கு) அங்கம் இறுகுவதால் இப்பன்றிக்(கு)
எப்பன் றியுநிகரோ எண்.

பொருளுரை:

காட்டுப்பன்றியின் இறைச்சியும், உடம்பெல்லாம் முட்கள் இருக்கும் முள்ளம் பன்றியின் இறைச்சியும் குணத்தினால் ஒன்றே.

இருந்தாலும் முள்ளம்பன்றி இறைச்சி உண்டால் உடல் இறுகி வலிமை பெருகும் எனப்படுகிறது.

அதனால் இப்பன்றியின் இறைச்சிக்கு எப்பன்றியும் நிகரோ என்று எண்ணிப் பார் என்கிறார் இவ்வாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-20, 7:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே