குமரேச சதகம் – செல்வம் நிலையாமை - பாடல் 73

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஓடமிடும் இடமது மணல்சுடும் சுடும்இடமும்
ஓடம்மிக வேநடக்கும்
உற்றதோர் ஆற்றின்நடு மேடாகும் மேடெலாம்
உறுபுனல்கொள் மடுவாயிடும்

நாடுகா டாகும்உயர் காடுநா டாகிவிடும்
நவில்சகடு மேல்கீழதாய்
நடையுறும் சந்தைபல கூடும்உட னேகலையும்
நல்நிலவும் இருளாய்விடும்

நீடுபகல் போயபின் இரவாகும் இரவுபோய்
நிறைபகற் போதாய்விடும்
நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர்
நிசமல்ல வாழ்வுகண்டாய்

மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
மருவுகன வாகும் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 73

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

ஓடத்தை வைத்திருக்கும் (நீர்நிறைந்த பள்ளமான) இடம் (நீர்வற்றி) மணல் சுடும்படி (மேடாக) மாறும்; (மேடாகிய) மணல் சுடும்படியான இடமும் (பள்ளமாகி நீர் நிறைவாய்) ஓடம் மிகுதியாக ஓடும்; நீருள்ள ஓராற்றின் பள்ளம் மேடாக மாறும்; மேடுகள் யாவும் மிகுதியான நீரைக்கொண்ட மடுவாக மாறிவிடும்;

(மக்களிருக்கும்) நாடு (விலங்குகள் வாழும்) காடாகும்; (மரங்கள்) உயர்ந்த காடு (மக்களிருக்கும்) நாடாக மாறி விடும்; சொல்லப்படும் (வண்டியின்) ஆழி மேலுங் கீழுமாக மாறி மாறிச் சுற்றிக் கொண்டு செல்லும்; பலவகைச் சந்தைகளும் கூடுவதும் கலைவதுமாகவே இருக்கும்; நல்ல நிலவின் ஒளியும் (மாறி) இருளாகி விடும்;

பெரிய பகல் கழிந்து இரவு வரும்; இரவு நீங்கி ஒளி நிறைந்த பகற் காலம் வந்துவிடும்; செல்வர் வறியராவர்; வறியோர் செல்வராவர்; (ஆகையால்) வாழ்க்கை நிலையானதன்று;

ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் அன்றோ?

அருஞ்சொற்கள்:

உறுபுனல் - மிகுதியான நீர், மிடி - வறுமை, பாரி - மனைவி, பூடணம் - அணிகலன்.

கருத்து:

செல்வம் நிலையற்றது. ஆகையால், அது உள்ளபோதே அறம்பல புரிய வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-20, 7:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே