நெய்யிலே கையிட்டான்
தில்லை பொன்னம்பலத்திலே சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர் தம் கையிலே மழுவாயுதத்தை ஏந்துபவர். தில்லைக் கோவிந்தராயர் வெண்ணெய் திருடியுண்ட மாயன்; அவன் ஆயனும் ஆகியவன். இவற்றை வைத்துச் சுவையாகப் பாடுகின்றார் கவி காளமேகம்.
தில்லைக்கா வுக்குட் சிதம்பரனா ராட்டையெடுத்(து)
இல்லைக்கா ணென்றுமழு ஏந்தினார் - சொல்லக்கேள்
மெய்யிலே கண்டேன்யான் மீண்டுங்கேள் ஆயனுமே
நெய்யிலே கையிட்டா னே. 148
- கவி காளமேகம்
பொருளுரை:
“தில்லைமரக் காட்டிலுள்ள சிதம்பரத்தே கோயில் கொண்டிருக்கும் பெருமான் ஆட்டை எடுத்தனர் (திருநடனம் செய்தனர்); யான் எடுக்கவில்லை பாரென்று தன் செயலையும் மறைத்துக்கொண்டு மழுவேந்திப் போரிடவும் அவர் தயாரா யிருந்தனர். சொல்வதனை இன்னமுங் கேள்; அவருடைய உடலிலேயே அவர் ஆடெடுத்திருந்ததன் தன்மையினை யானே நேரிற் கண்டேன் மீளவும் கேள்; ஆயனும் நெய்யிலே கையிட்டுச் சத்தியமும் செய்துள்ளனன்.”
பெருமானின் நடனத்தை ஆடு திருடியதாகவும், அதனைப் பற்றிக் கேட்கப் போக ஆடுதிருடியதும் அல்லாமல் மழுவேந்திச் சண்டைக்கு வந்ததாகவும் குற்றஞ் சுமத்துகிறார். ஆடெடுத்த மெய்ப்பாட்டினைத் தாமே அவன் திருமேனியிற் கண்டதாகவும், மேலும் ஆடு மேய்ப்போனாகிய ஆயன் நெய்யிலே கையிட்டுச் சத்தியம் செய்ததாகவும் சொல்லுகிறார்.
இப்படி நிந்திப்பது போலக் கூத்தனின் நடனத்தை வியந்து போற்றவும் செய்கிறார் கவிஞர் காளமேகம்.