14 அவளுடன் பேசும்போது

---------------------------------


(16.ஜனவரி.2019 மதியம் 3.30க்கு அவள் வாட்ஸப்பில் எனக்கு பதிவிட்டு அனுப்பியது)

ஸ்பரி...

தோட்டத்தில் இருக்கிறேன். நீங்கள் வழக்கமாய் அமரும் இடத்துக்கு சற்று தள்ளி ஒரு நீலநிற தொட்டியில் ரோஸ் பூத்திருக்குமே... அதற்கும் சற்று தள்ளி...

எந்த சப்தமும் இல்லை. மனோரஞ்சிதத்தின் வாசனை அப்போதும் இருக்கிறது.

எந்த ஒலியும் இல்லாது இந்த பூக்களின் வாசனை எப்படி மயக்கங்களை தருகிறது. மனம் வரை நீள்கிறது? "பூக்களுக்கு முன்னால் வார்த்தைகள் வெறும் தூண் போல் ஆகிறது"... என்று நீங்கள் சொன்னதை நினைத்து கொண்டேன்.

தோட்டம் திட்டமிட்டு உருவாக்கி இருந்தாலும் அதன் நிசப்தத்தை நாம் உருவாக்க முடியாது. அதன் பீடங்களில் நாம் அமர முடியாது ஸ்பரி...

இங்கு காற்று இருப்பதை நான் மறந்து போகிறேன். எனது மூச்சுக்காற்றையும் அது ஆமோதிக்கவில்லை என்று தோன்றுகிறது.

தோட்டம் தன்னுள் தானே வயப்படுகிறது. அதனில் வாழும் உயிரினங்கள் குறித்து மிகுந்த அக்கறை கொள்கிறது.

எறும்புகள் ஒழுங்காய் சுவரோரம் செல்ல பழக்கப்படுத்தப்பட்டு உள்ளன. வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் பயணத்தின் திசைகளில் எந்தவிதமான இலக்கையும் குறிப்பதில்லை. மாறாக வர்ணங்களில் தன் நிழலை விற்று விடுகின்றன.

பெயர்கள் இல்லாத புழுக்கள் மண்ணிற்கு மேல் வருவதும் தாழ்வதும்.. உலகத்தை பூமிக்குள் கடத்துகிறதா ஸ்பரி...?

சில கணங்களுக்கு பின்னர் நான் இங்கு எனக்குள் கேட்பதையும் பேசுவதையும் நிறுத்தி கொள்கிறேன்.

தோட்டம் என்னையும் உள்ளிழுத்து கொள்வது போல உணர்வு அடைகிறேன். நான் எங்கும் செல்ல முடிகிறது.

அதை என்னால் அருகில் இருந்தும் தொலைவில் இருந்தும் பார்ப்பது போல் இருக்கிறது. இதுதான் சஞ்சரித்தல் என்பதா?

மொழிகள் இல்லை. வேதனைகள் இல்லை. தோட்டம் எனக்குள் கலந்து கிளை, இலை, வேர், குளிர், கனங்களை நிரப்புகிறது. என்னையும் ஒரு தோட்டமாக ஆக்குகிறது.

நான் மாறுகிறேன் ஸ்பரி... ஒன்றை மறுக்கவும் எதிர்க்கவும் நான் இப்போது விரும்பவில்லை. ஏனெனில் விருப்பம், வெறுத்தல், மறுத்தல் என்பது போன்ற தேர்வுகள் இருப்பதை என் மூளை மறந்தே போய் விட்டது.

நான் புலன்களில், அறிவில், உணர்வில், மொழியில் முற்றும் பின்வாங்குகிறேன். அவைகளை இழந்து போகிறேன். காற்றில் ஒளியாய் ஒளியில் தட்பமாய் பிரிந்து பிரிந்து எதுவுமின்றி ஆன நிலை.

என் கை கால்கள் அசையவில்லை. அசையவும் கூடாது. மெல்ல நினைவுகள் முற்றிலும் தவறி விட்டது ஸ்பரி...

உங்களை நினைத்து கொள்ள ஆசை ஆசையாய் இருக்கிறது.

"தியானத்தின் அபஸ்வரம் நினைவுகள்" நீங்கள் சொன்னதை இப்போது உணர்கிறேன். அதன் பின்பு நீங்கள் தெரியவில்லை.

வெகு நேரங்கள் ஆகவில்லை... சில பெருமூச்சுகள் என்னில் வரும்போது ஒரு வெறுப்பு தெரிகிறது.

தோட்டம் இப்போது மெள்ள நீங்குகிறது. ஒரு பயணியை அது உதிர்க்கிறது. இயற்கை சருகை எப்படி தவிர்க்குமோ அப்படி என்னை பூமியில் கிடத்துகிறது.

ஒரு எறும்பு கூட்டம் தம் வாயில் முட்டைகளை பற்றிக்கொண்டு நீள்கின்றன. ஒரேயொரு எறும்பை என் விரலில் படர செய்தேன். அது தன் முட்டையை அப்போதும் விடவில்லை.

விரல் நுனியில் அதன் பாதை முடிந்ததும் சற்று திகைத்து மீண்டும் வந்த வழியே திரும்புகிறது. அது அப்போதும் கூட யாரையும் பழிதீர்க்க விரும்பவில்லை ஸ்பரி...

அதன் பதற்றங்கள் முட்டை என்பதில் அல்ல... அதில் செழித்து வளரும் சிறிய இன்னொரு உயிருக்கு. இரு விரலை கொண்டு சற்று இறுக்கிப்பிடித்தால் என்னால் குறைந்தபட்சம் எட்டு மாத கனவுகளை நொறுக்கி விடமுடியும் ஸ்பரி... கைகள் நடுங்குகிறது.

"ஒரு வாழ்க்கையை இன்னொரு வாழ்க்கை காப்பாற்றிக்கொண்டிருக்கும் உணர்வின் முன் காதல் என்பதெல்லாம் ஒன்றுமே இல்லை" என்றும் நீங்கள் சொல்வீர்கள்... அதை நான் இங்கு பார்க்கிறேன் ஸ்பரி.

அந்த எறும்பு இப்போது ஒரு தோட்டம் போல் தெரிகிறது. அதற்குள் வாசனை, பூக்கள், ஈரம், காற்று அனைத்தும் இருப்பதை நான் உணர்கிறேன்.

மெள்ள சுவரின் வேறு பக்கத்தில் அதை விடுகிறேன். வெண்மையான அந்த இடத்தில் ஒரு முறை நின்று நிதானித்து சின்னதாய் ஒரு சுழற்சியில் மீண்டும் வரிசைக்குள் புகுந்து விடுகிறது.

எந்த எறும்பும் அந்த எறும்பை தடுக்கவோ, வெறுக்கவோ இல்லை. ஒருமுறை
நான் அனிச்சையாக கண் சிமிட்டியபின் அந்த எறும்பை மீண்டும் என்னால் அடையாளம் காண, கண்டுபிடிக்கவும் முடியாமல் போயிற்று.

கலந்து விட்டது...

ஸ்பரி...

நாம் மட்டும் ஏன் இப்படி சுருண்டு தேங்கி போகிறோம்?

_______========_____

எழுதியவர் : ஸ்பரிசன் (6-Jul-20, 4:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே