நீர் மேல் நடத்தல்

”நீராழிவண்ணனைப் பாலாழிநாதனைநின்மலனைச்
சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்
கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோ
னோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே”
என்று அந்த அதி காலையில் அழகர் அந்தாதியை அழுத்தம் திருத்தமாகப் பாடி நின்ற அந்த குருவின் அருகே கையால் வாயினை பொத்தி மெய்யடக்கத்துடன் நின்றிருந்தனர் இரு சீடர்கள். கண் மலர்ந்த அந்த குரு அவ்விரு சீடர்களையும் பார்த்து,
“வெய்யோன் தேரேறி நடு வானுக்கு வரு முன்னர் நீங்கள் சென்று ஏதாவது நல்லதை செய்து சாதித்து ஒரு ஆண்டு கழிந்தென்னை வந்து பாருங்கள்”
என்று தன் கையைத் தூக்கி ஆசி அளித்து அனுப்பினார்.

பூர்ணிமை தினத்தன்று முதல் சீடன் ஒரு முழு ஆண்டு முடிந்தது என அங்கு வந்து சேர்ந்தான். குருவோ தியானத்தில் இருந்தார். உச்சி வேளையில், இரண்டாம் சீடனும் அங்கு வந்து சேர்ந்தான். பசி வந்ததால் கண்களைத் திறந்து பார்த்த குரு அங்கு தனக்குத் தாயாராக போஜனம் வைக்கப்பட்டு இருப்பதும், நீர் ஏந்திய கலங்களுடன் இரு சீடர்களும் அங்கு நிற்பதையும் கண்டு புன்முறுவல் செய்தார். பசியை விட அவர்கள் செய்தது என்ன என்பதை அறிந்திடும் ஆவலில் இருந்த குரு முதலாம் சீடனைப் பார்த்துக் கேட்டார்.
“எல்லாம் நலம்தானே? நீ என்ன செய்தாய் ? என்றார்.
அவனோ,” குருவே, மந்திர தந்திரங்களில் தலை சிறந்ததாகிய நீர் மேல் நடக்கும் கலையை நான் நன்றாக பயின்று விட்டேன்” என்றான்.
”நல்லது. நீ என்னப்பா செய்தாய்” என அடுத்த சீடரைப் பார்த்துக் கேட்டார்.
“ஐயா, நானும் அதே கலையைக் கற்றுக் கொண்டேன். ஆனால் நான் ஒருவன் மட்டுமே அப்படி நடக்க முடியும் என்பதால், அவ்வாறு நடந்து பெரும் கற்களைப் பொறுக்கி எடுத்து ஆற்றின் மேல் போட்டு ஒரு பாலம் கட்டினேன். இப்போது எல்லோரும் அதன் மீது நடக்கிறார்கள்” என்றான்.

அந்த குரு, ”எப்பொழுது அடுத்தவர்க்குப் பயனுற உன் திறமையை வளர்த்துக் கொண்டாயோ அப்பொழுதே நீ என் வாரிசு ஆகி விட்டாய் என்றாய்.

இவ்வாறு மந்திர தந்திரங்களில் தலை சிறந்த கலை எனப் போற்றப்படும் நீர் மேல் நடத்தல் என்பது எல்லோருக்கும் சாத்தியம் ஆகாது. ஜூன் மாதம் 25 ஆம் நாள் 2011 ஆம் ஆண்டில், ஸ்டீஃபன் ஃப்ரேய்ன் என்னும் இயற்பெயற் கொண்ட டைனமோ, எனும் பெயருடைய பிரிட்டிஷ் மாஜிக் நிபுணர், இங்கிலாந்தின் நாடாளுமன்ற இல்லத்திற்கு வெளியே, தெம்ஸ் நதி மீது, வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் கூடியிருந்த அத்தனை மக்கள் முன்னிலையில், நூறு அடி தூரம் நடந்து காட்டினார். அவரை, காவல் துறையின் முன் அனுமதி பெறவில்லை என்றும் உயிருக்கு ஆபத்து போன்ற நொண்டி சாக்குகளைக் கூறி, காவல் துறை நதி மீது இயந்திரப் படகில் சென்று அவரைப் பிடித்துக் கொண்டு சென்று விட்டது.
உண்மையில், அவர், எந்த இடத்தில் நதியில் காலை வைத்து நடக்க இருக்கிறார் என்பதும், எவ்வளவு தூரம் நடப்பார் என்பதும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு, ”ஃப்ளெக்சி க்லாஸ்” எனும் வளையும் மற்றும் மிதக்கும் தன்மை கொண்ட ஒரு வகை கண்ணாடி நடைமேடை நீருக்கு அடியில் தயாராய் வைக்கப்பட்டு இருந்தது என்பதும் அந்த காவலர்களும் அவரது ஏற்பாட்டின்படியே அங்கு வந்து அவரைப் பிடித்தனர் என்பதும் பின்னாளில் அனைவர்க்கும் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது.

அப்படியானால், நீரின் மேல் எவருமே நடக்க முடியாதா என்ற கேள்விக்கு, பொளதிக விதிகட்கு உட்பட்டுப் பார்த்தால் நாம் கொசுவாக இருந்தால் அன்றி நடக்க முடியாது என்ற அறிவியல் பூர்வமான விடை கிடைக்கிறது. கொசுக்களுக்கு கால்கள் மூன்று பகுதிகளாக உள்ளன. அவை தண்ணீரை எதிர்க்கும் சக்தி கொண்ட நுணுக்கமான செதில்களைக் கொண்டவை. வயிற்றிலிருந்து நீளும் ஃபீமர் பகுதி, டிபியா எனும் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி அடுத்த பகுதியாகிய டார்சசுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கடைப் பகுதியாகிய டார்சஸ் மெலிதாகவும் நீண்டும் இருந்தாலும் எளிதில் வளையக் கூடியதாய் இருக்கிறது. இந்த டார்சஸ் மட்டுமே தண்ணீரைத் தொடும். இந்த கடைக்கால் பகுதி மிதக்கும் நீள் மிதவை போல் செயல்படுகிறது. இவ்வாறு, நீரின் மேற்புறம் டார்சஸ் வளையும்போது அதன் மொத்த ஆறு கால்களும் கொசுவின் எடைக்கு நிகரான இருபது மடங்கு மேலெழும் சக்தியை உருவாக்கும் என்பதால் கொசு நீரில் மூழ்காமல் மிதக்க முடியும். கால்களால் மிதக்கும்போது நிற்பது,,நடப்பது போன்ற தோற்றம் அளிக்கும்.
நீர் மேல் நடத்தல் போன்ற புதுமைகள் அனைத்து சமயங்களிலும் சொல்லப்படுகின்றன. பழம் பெரும் சமயங்களாகிய இந்து சமயம், புத்த சமயம் போன்றவற்றில் இது குறித்து ஏராளமான நிகழ்வுகளின் மேற்கோள்கள் உள்ளன. கி.மு. கிபி. என வரலாறு பிரிக்கப்பட்டதால், கி.மு, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொளதம புத்தர், நீரில் மேல் நட்ந்து அல்ல, பறந்து சென்றதாக கூறப்படுகிறது.

சுனிதா, வாசக்கரா என்ற இரு புத்த பிக்குகள் அவரது நெருங்கிய சீடர்களாக இருந்தவர்கள், அவரது அடியொட்டி நடந்து செல்பர்கள், கங்கைக் கரை ஓரம் அவர் பின்னே சென்று கொண்டு இருந்தனர். அவர் நதியின் எந்த வாயில் வழியாக அதனைக் கடக்கிறாரோ அதனை ’கொளதம வாயில்’ என்றும், எந்த கலம் வழியாக அவர் கங்கையைக் கடக்கிறாரோ அதனைக் ’கொளதமக் கலன்’ எனப் பெயரிடுவோம் எனக் கூறிக் கொண்டு அவர்கள் சென்றனர். ஆனால் புத்த பிரான் கங்கைக்கு அருகில் வந்த பொழுது அதில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், காகங்கள் அதன் மேற்பரப்பில் நீர் அருந்துவதையும், அதனைக் கடப்பதற்கென சிலர் படகுகளையும் மிதவைக் கட்டைகளையும் கட்டிக் கொண்டு இருப்பதையும் கண்டார், அடுத்த கணமே தன் கைகளை முன் பக்கம் மிக நீளமாக விரித்து ஒரே தாவலில் கங்கையைக் கடந்து பறந்து அடுத்த கரைப் பக்கம் நின்றார்.

பின்னொரு நாளில் அதைப் போலவே அவரது சீடர்களில் ஒருவராகிய சாரு புட்டன் என்பவன் கங்கையைக் கடக்க முயன்று பாதி வழியில் அமிழும் போது புத்தனை நம்பினால் முடியும் என நம்பி நீர் மேல் நடந்து கடக்கின்றார். “உன் நம்பிக்கையால்தான் உன்னால் முடிந்தது” என புத்தர் அவனிடம் கூறியதாக மஹா பரினிப்பான சட்டா எனும் நூல் கூறுகிறது.

இதைப்போலவே பார்சி சமயத்தின் ஜொராஸ்ட்ர் வரலாற்றிலும் கிரேக்க மன்னர் அலெக்சாந்தர் வரலாற்றிலும் நடந்ததாக, இலண்டன் சுவாமினாதன் தனது இணைய தளத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
ஜொராஸ்டர், தனது குடும்பத்துடன் அராக்ஸஸ் நதிக்கரைக்கு வந்தார். வெள்ளத்தில் இறங்கி துணிமணிகள் நனைந்து போனால் எல்லோரும் பார்த்து சிரிப்பாளர்களே என்று தயங்கினார். பின்னர் நீர் மீது நடந்து சென்று அக்கரைக்குப் போய்விட்டார். ஆனால் இக்கதை பன்னிரெண்டாம் நூற்றாண்டில்தான எழுதப்பட்டது. இதற்கு முன்னுள்ள கீழே குறிப்பிடப்படும் எல்லா கிரேக்க எழுத்தாளர்களும் முதல் இரண்டு நூற்றாண்டுகளை சேர்ந்தவர்களே.
அர்ரியன் என்பவர் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தில் வாடைக் காற்று வீசும்போது மட்டுமே நீர்வழியைக் கடக்க இயலும் ஆனால் அலெக்ஸாண்டருக்காக திடீரென தென்றல் காற்று வீசி வழிவிட்டது. இதற்கு தெய்வத் தலையீடே காரணம் என்பார்.

ப்ளூடார்ச் என்பாரும் இந்த வரலாற்றை மீனேந்த்திரன் (மெனாண்டர்) சொல்வதாக எழுதியுள்ளார்
சீஸரின் யவனக் கடல் சாகசத்தை விளக்கும்போது அப்பியன் என்ற எழுத்தாளரும் இதைக் குறிப்பிடுவார்.

அலெக்ஸாண்டரின் படைகள் நாள் முழுதும் நதிகளைக் கடந்த போதிலும் தண்ணீர் இடுப்பளவே இருந்ததாக ஸ்ட்றாபோ கூறுகிறார்.

காலிஸ்தெனிஸ் என்பவர் இவர்கள் எல்லோருக்கும் ஒரு அடி மேல் சென்றுவிட்டார். அலெக்ஸாண்டருக்காக் கடல் திறந்து வழி ஏற்பட்டதாவும், அத்தோடு நில்லாமல் கடல் அலைகள் மேலும் கீழும் எழுந்து அலெக்ஸாண்டருக்கு வணக்கம் செலுத்தியதாகவும் கூறுகிறார். இது தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போலத் தற்குறிப்பு ஏற்ற அணியாகும்; இயற்கையில் நாள்தோறும் நடக்கும் நிகச்சிகளை புலவர்கள் இப்படிப் பயன்படுத்துவர். நாம் தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்ள வேண்டும்.

ரோமானிய வரலாற்று எழுத்தாளர் ஜோஸபஸ், அலெக்ஸாண்டரின் அற்புதத்தை விவரித்து விட்டு அது மோஸஸ் தெய்வீக சக்தியால் செங்கடலைக் கடந்தது போல என்று எழுதியுள்ளார்

இறுதியாக அலெக்ஸாண்டர் பற்றி இன்னும் ஒரு சுவையான செய்தியும் உண்டு.
அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னர் , மாறு வேஷத்தில் பாபிலோனில், டேரியஸ் நடத்திய ராஜ விருந்துக்குச் சென்றாராம். அங்கிருந்த ஒரு படைத் தளபதி அவரை அடையாளம் கண்டு மன்னர் டேரியஸிடம் சொன்னவுடன் அலெக்ஸாண்டர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிட்டாகப் பறந்து வெளியேறினார். அவரது அதிர்ஷ்டம், அப்போது வாசலில் ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது. அலெக்ஸாண்டர் ஒருவருடைய தீவட்டியைப் பிடுங்கிக் கொண்டு வெளிச்சம் போட்டுக்கொண்டே சென்றாராம்.அலெக்ஸாண்டரின் குதிரை ஒரு ஆற்றைக் கடந்து சென்று எதிர்க் கரையில் முன்காலை வைக்கவும், நதி உருகத் துவங்கியதாகவும் இதனால் குதிரையின் பின்கால்கள் சேற்றில் சிக்கிக் கொண்டதாகவும் அலெக்ஸாண்டர் ஒரே தாவாகத் தாவி தரையில் குதித்துத் தப்பிவிட்டதாகவும் கதைகள் சொல்லும்.
நமது இந்து புராணங்களிலும் இத்தகைய கதைகள் நிறையவே உள்ளன. பகவான் கிருஷ்னணை குழந்தையாக் வாசுதேவர் ஒரு கூடையில் சுமந்து யமுனை ஆற்றைக் கடக்க முயன்ற பொழுது, அந்த ஆற்று நீர் விலகி வழி விட்டது எனக் கூறுவர்.
ஆதி சங்கரரின் சீடர் பத்ம பாதர் (தாமரை தாள்) என்பவருக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்றால், அவரது குரு அவரை அழைக்கும் பொழுது அவர் நீர் மேல் நடந்தார். ஒவ்வொரு அடியும் அவர் வைக்கையில் ஒரு தாமரை மலர் அவரது அடிகளைத் தாங்கிக் கொண்டதாம். இந்து சமயத்தில் இதைப் போன்ற நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன. ஹடயோகம் எனப்படும் யோகப்பயிற்சி நீர் மேல் நடப்பதற்கான திறம் அளிக்கும் என யோகக் கலை கூறுகிறது.

இதைப்போலவே விசுவாமித்திர முனிவரும் காளைகள் இழுக்கும் வண்டி நிறைய பொன் பொருள் என பெரும் புதையலை அள்ளி எடுத்து வரும்போது இடையில் குறுக்கிட்ட ஆற்றினிடம், தன் இரு வாயில்லா ஜீவன்களை நோகச் செய்யாமல், அவற்றின் கால்களுக்கு கீழேயும் வண்டியின் அச்சுக்குக் கீழேயும் நின்று எங்களுக்கு வழி கொடு தமக்கையே என ஐந்தறிவு உயிர்களுக்காக நதி நீரிடம் கெஞ்சி மன்றாடி அதன்படி அவை இசைந்தன என்பதால் அவர் நீ்ரின் மேல் வண்டியோடு கடந்து சென்றரார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு நீரின் கட்வுளாகிய இந்திரன், தன்னை இறைஞ்சிய மனிதர்க்கு உதவியுள்ளார் என்பது ரிக் வேதத்தில் சொல்லியுள்ளபடி , துர்விதி மற்றும் வவ்யாவிற்கும் மகாபாரதத்தில் திலீபன் எனும் அரசர்க்கும் நீரினைக் கடக்க உதவினார் என கூறப்படுகிறது.
நீரின் மேல் நடப்பது என்பதற்கு வரலாற்று சான்றுடன் இருக்கும் நிகழ்வு
விவிலியத்தில் மத்தேயு 14: 22-36, மாற்கு 6” 45-46, மற்றும் யோவன் 6:16-21 இல் இயேசு கலிலேய கடல் நீர் மீது நடந்து சென்றதை விவரிக்கின்றன. அத்தோடு, நானும் நடந்து வரவா எனக் கேட்ட அவரது சீடராகிய பேதுருவையும் நடக்கச் செய்த நிகழ்ச்சி, நம் கன்களை ஆச்சரியத்தில் விரியச் செய்கிறது.:

யோர்தான் பள்ளத்தாக்கின் கீழ் பக்கம் உள்ள கடல் மட்டத்தில் இருந்து 400 அடி உயரம் எழும் மலை அடுக்குகளின் விளிம்பாக இருக்கும் இந்த கலிலேயக் கடல், மத்திய தரக் கடலில் இருந்து 700 அடி ஆழ்ம் தாழ்வாக இருக்கும் ஒன்று ஆகும். இந்தக் கட்லில் முக்கிய அம்சம் என்னவெனில் இதில் திடீர் திடீர் என கடும் காற்றும் புயலலும் வெடிக்கும். யோவானின் கூற்றுப்படி, கடலில் பலத்த காற்று வீசிக் கொண்டு இருந்தது. இயேசு அவ்ர்களோடு இல்லை. அவர்கள் மூன்று அல்லது மூன்றரை மைல் கல் கடந்து வந்த போது இயேசு அவ்ர்கலௌ படகினை நெருங்கி வருவதைக் கண்டு அஞ்சினர். நான்தான் அஞ்ச வேண்டாம் என அவர் கூறினார். அவரை படகில் ஏற்றிக் கொள்ள விழைந்தபோது படகு கரையைச் சேர்ந்து இருந்தது எனத் தெளிவாகக் கூறுகிறார்

1949 ஆம் ஆண்டில் ஆர்.கே. கரஞ்சியா, ப்ளிட்ஸ் எனும் செய்தித் தாளின் ஆசிரியர், மந்திர தந்திரங்கள வெட்ட வெளிச்சமாகுவதில் வல்லவராய் இருந்தவர் தானே ஒரு யோகி கங்கை நதியில் கண்ணுக்குப் புலப்படாத கயிறுகளின் மீது நடந்ததை கண்டதாகவும் கூறுகிறார். ஹதயோகி ஆகிய ஒரு சாமியார் உண்மையில் ஒரு தொட்டி நீரில் நீர் நிரப்பி கண்ணாடி தாள் ஒன்றின் மீது நடக்க ஏற்பாடு செய்து, நீர் மேல் நடந்து காட்டுவதாக சவால்கள் விடுத்து உள்ளார். அவரது சவால் சத்ய சாய் பாபாவுக்கு எதிரானவை என்பதால்,,அவர் சாதிக்க இருந்த மூன்று நாட்களுக்கு முன்னரே பாபாவின் முகவர்கள் அந்த சிமெண்டு தொட்டியை உடைத்து போட்டு விட்டனர். புதிய தொட்டி ஒன்று கட்டி முடிக்க நேரம் இன்மையால் உலோகத் தொட்டி ஒன்று கட்டி அதில் கண்ணாடித் தகடுகள் வைத்து விட்டனர். ஆயினும், நீரி நிரம்பிய பொழுது, பொளதிக விதிகளின்படி கண்ணாடி தகடுகள் மேலே எழத் தவறி விட்டன என்பதால் அவரால் அந்த மந்திர நடையினை மேற்கொள்ள இயலவில்லை
.
எனவே, புத்தன், இயேசு ஆகிய கடவுளர் செய்ததை மனிதர் முயன்றால் இவ்வாறு போலியாக, பொய்யாகத்தான் செய்ய முடியும்.

எழுதியவர் : தா . ஜோ . ஜூலியஸ் (8-Jul-20, 3:17 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 69

மேலே