16 அவளுடன் பேசும்போது

________=====_________

இன்று நாங்கள் பூங்காவுக்கு நாய் குட்டிகளை அழைத்து போக முடிவு செய்திருந்தோம். அந்த இடம் ஒரு உலகமாக அவைகட்கு மாறி இருந்தன. கொஞ்ச நேரம் மனிதர்களையும் அவர்களின் கொஞ்சலையும் ரசித்து விட்டு பின் தங்கள் சேஷ்டையில் ரீங்கரித்தன.

ஸ்பரி...

என்ன?

சில சமயம் நம் மனது நமக்கே ஆறுதலும் தைரியமும் தருவதை நீங்கள் உணர்ந்தது உண்டா?

அது ஒரு தினத்தின் பல மணி நேரங்களில் அப்படித்தானே போகிறது?

அது நமக்கு உண்டான போதையா அல்லது துரோகமா ஸ்பரி?

நீ ஏதேனும் படம் பார்த்தாயா அல்லது படித்தாயா என்று கேட்டேன்.

மறந்து போன என் பழைய காதல் நினைவுக்கு வந்தது நேற்று... எனக்கு நான் என்ன சொல்லிக்கொள்வது என்றே தெரியவில்லை ஸ்பரி... நீங்கவேயில்லை அது என்றாள்.

அது உனக்கு நிச்சயம் கனவு இல்லை... நடந்து முடிந்த சம்பவம். பழைய காட்சி... உன் கால்களை கடந்து போன தடங்கள் இல்லையா...

நீங்கள் ஏன் வலியை ஒரு கவிதை போல் ஆக்கி ஆறுதல் படுத்த முயற்சி செய்கிறீர்கள்?

ஏன் என்றால் காதல் என்பது ஒருவரை காதலித்தாலும் யாரையுமே நாம் காதலிக்காது போனாலும் கூட நம்மை விட்டு காதல் என்பது நீங்குவதில்லை. அது நெடி இல்லை. தும்மலில் வெளியேற்ற... மீண்டும் உன்னை காதலிக்க சொல்கிறது.

நான் கற்பனையில் காதலிக்க வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது நீங்கள் பேசுவது என்று சிரித்தாள். அதில் ரத்தம் வடிவது எனக்கு தெரிந்தது.

நீ பிரார்த்தனைகள் செய்வதும் கூட ஒரு விதத்தில் உன்னை நீயே காதலிப்பதுதான். அது சுதந்திரமாக இருக்கிறது என்பதை விட சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதுதான் உண்மை.ஒரே வித்தியாசமும் கூட.

ஆனால் காதல் மனிதர் நோக்கி திரும்புகிறது. ஆசையும், நிராசையும் பதுங்கி கிடக்கும் இரண்டு உள்ளங்கள் ஒன்றில் ஒன்று நிவர்த்தியை தமக்குள் தேடுகின்றன. அது இயலாது போனதும் ஏதோ ஒரு ஈகோவில் விலகுகிறது... என்றேன்.

யாருமே இல்லாத வெற்று இதயம் ஸ்பரி என்னுடையது. நான் கனவு கூட காண்பது இல்லை. நான் எனக்கு வெளியில் மட்டுமே இருக்கிறேன்.

ஆனால் நீ எப்போதும் வியப்புடன் மட்டுமே இருக்கிறாய். நீ வலிய புறக்கணித்த எந்த ஒன்றையும் வியந்து பார்க்கிறாய். அதில் நீ அறியாது நழுவும் உன் மனம் ஆறுதலையும் ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. பின்னர் நீயும் காட்சிகளில் வாழ ஆரம்பித்து விடுகிறாய்.
சரியா...

"நிச்சயமாக தெரியவில்லை ஸ்பரி... நான் இதில் இருந்து எப்படி வெளி வர வேண்டும்?"

எதில் இருந்து... காதலில் இருந்தா? அதன் நினைவில் இருந்தா? அல்லது ஒரு முறை உன் முகம் பார்த்து உன்னோடு பேச விரும்பும் உன் மனதில் இருந்தா?

"மிகவும் சாமர்த்தியமாக நீங்கள் குழப்பம் செய்கின்றீர்... நான் எனக்கு தைரியம் கொடுத்து கொள்வதில் இருந்து வந்தால் போதும்... எனக்கு உண்மையில் பயம் என்பது இல்லை. என் மனம் எனக்கு தரும் உற்சாகம் பிடிக்கவில்லை."

நீ போரிடுவதில் இருந்து விலக வேண்டுமா?

"ம்ம்ம்... இதுவும் ஒரு போராட்டம் போலத்தான்...

"பழைய காட்சிகளில் இருந்து உன்னை விலக்கிக்கொள். இன்னும் அரை மணி நேரத்துக்கு பின் நமக்கு வாழ்க்கை இல்லை என்று நினைத்துக்கொள். இப்போது இருக்கும் நிதர்சனம் இது மட்டும் போதும் என்று சொல்லிப்பார்.."

இது போதுமா ஸ்பரி...

போதாது... முதல் அடி இதுதான்.

சிறிது நேரம் கழித்து....

"மரங்களும் புற்களும் ரம்யமாய் இருக்கிறது ஸ்பரி" என்றாள்.


____=========_______

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Jul-20, 8:23 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே