வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதர்கள் ....

அன்று பள்ளி அலுவல் அறையில் ஒரு முக்கியமான ஃபைலை , பத்திரமாக வைக்கவேண்டும் என்று எங்கோ வைத்துவிட்டு... வைத்த இடத்தை மறந்து தேடிக் கொண்டிருந்தேன்.... அலுவலறை கதவில் உள்ள கண்ணாடி வழியே ...வெளியே ஒருவர் என்னை சந்திக்க காத்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது... உருவத்தைப் பார்த்ததும் வந்தவர் யார் என்று யூகித்துக் கொண்டதால், வேண்டுமென்றே குனிந்தத்தலையை நிமிர்த்தாமல் என் தேடுதலை தொடர்ந்தேன்.... காத்திருப்பவர் சற்று நிதானம் இழந்து நான் தலையை நிமிர்த்தி பார்க்கின்றேனா என்று கண்ணாடிவழியே உற்று உற்று பார்த்துக்கொண்டேயிருந்தார்....

யாரையும் வேண்டுமென்றே காத்திருக்க வைத்தும் பழக்கமில்லை......யாரையும் அவமதிக்கும் எண்ணமும் சிறிதும் இருந்ததில்லை.....

ஆனால் சின்னபுத்திக் கொண்டவர்கள்.... சில்லறைகளுக்கு அலைபவர்கள், பொய்பேசி பிறரை ஏமாற்றுபவர்கள், துஷ்டர்களைக் கண்டால் ஏதோ ஒரு அடக்க முடியா கோபம் வரும்.... முன்பெல்லாம் அவர்களை முகத்திற்கு நேராகவே திட்டி தீர்த்துவிடுவேன்....சில அனுபவங்களால் கொஞ்சம் பக்குவப்பட்டதும் , இதுபோன்றவர்களிடம் இருந்து விலகி சென்றுவிடுவேன்....பின்னர், இதுபோன்றவர்களை சந்தித்தால், அவர்களுக்கு ஏற்றார்போல பேசி சமாளிக்கக் கற்றுக் கொண்டேன் .....

அப்படி ஒரு ஆசாமிதான் அந்தக் காத்திருந்த மனிதர்..... எம் பள்ளியின் முன்னாள் நிர்வாகி அவர்களை பலமுறை மிரட்டி பணம்பறித்த சில்லறை திருடன்... எழுதப்படிக்கத் தெரியாதவன்..... ஆனால் அமெரிக்கன் பிரசிடன்ட் கூட வாடா போடான்னு பேசும் லெவலுக்கு கதைவிடுபவன்......சிலமுறை என்னிடம் வந்து மோதியிருக்கிறான்.... அவனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்சினையை தேடிப்பிடித்து .... அதன் வழியே ஏதாவது நம்மிடம் விதண்டாவாதம் செய்து, குரலை உயர்த்தி அச்சமுறும்படி பேசி.... அதன்மூலம் சில்லறை தேற்றலாம் என்று வருபவன்.....சிலமுறை எச்சரித்து அனுப்பிவிடுவேன்..... சிலமுறை சுமுகமாக சிரித்துக்கொண்டே பேசி சமாளித்து அனுப்புவேன்... சில்லறை ஏதும் தேறாது என்று தெரிந்தவுடன்.... எதையோ ஒரு வெற்று மிரட்டல் விட்டுச் செல்வான்.... அன்றும் அந்தவகையில்தான் ஏதோ ஒரு திட்டத்தோடு பார்க்க வந்திருப்பான் என்று எனக்கு நன்றாகவே தெரியும்... அதனால்தான் அவன் கொஞ்சம் கடுப்பாகட்டும் என்று , வேண்டுமென்றே காத்திருக்க வைத்தேன்....

ஆனால் , அந்தநேரம் பார்த்து எங்கள் ஆசிரியர் ஒருவர் உள்ளேவர.... சைக்கில் கேப்பில் உள்ளே புகுந்துவிட்டான்.... அப்போதும் வேண்டுமென்றே.... அவன் பக்கம் திரும்பாமலே... உள்ளே வந்த ஆசிரியரிடம் பேச்சை வளர்த்துக்கொண்டே ... இடையில் அவன்மீது பார்வையை வீசினேன்... இதுதான் சமயம் என்று இடைபுகுந்து எதையோ அவன் சொல்ல முற்பட்டான்.... நான் அதை கவனிக்காததுபோல் டக்கென்று என் பார்வையை திருப்பி எங்கள் ஆசிரியரிடம் மீண்டும் பேச்சை தொடர்ந்தேன்......

சற்று நேரத்தில் ஆசிரியர் அலுவலறையை விட்டு வெளியே போனதுதான் தாமதம்.... நான் அவனை என்ன விசயம் என்று கேட்பதற்கு முன்பே .... பொறுமை இழந்து ... அங்கு போடப்பட்டிருந்த இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்துக்கொண்டான்..அவன் சட்டை பாக்கெட்டில் அம்மா படம் வெளியில் தெரியும்படி எட்டிப் பார்த்தது.. ....

சிறு புன்முறுவலுடன்....
வாங்க அல்ஃபோன்ஸ்....
ரொம்ப நாளாச்சு....?
எப்டி இருக்கிங்க...?
மகன் என்னப் பண்றான்...?(மகன் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவன்)
இப்படி சகஜமாய் அவனை குசலம் விசாரிக்க...., அவனுக்கு வந்த வெத்து வேகம் குறைந்தது.....
ஆனாலும் கெத்தாக முகத்தை வைத்துக்கொண்டு ....
மேடம், நிறைய பிரச்சனை வெளிய எங்கிட்ட வருது... மேலவரைக்கும் போனா பிரச்சன பெருசாயிடும்... மேடம் நம்பளுக்கு வேண்டியங்களாச்சே... முதல்ல என்னா விசியம்னு கேட்டுக்குனு... அப்றமா இன்னா மேல்கொண்டு பண்லாம்னு முடிவு பண்ணிக்லாம்னுதான் உங்கள பாக்க வந்தேன்.... நாளிக்கு நீங்க தப்பா நென்ச்சிக்கக் கூடாதுல...
இன்னாடா... அல்போன்ஸ்கு நம்மள நல்லா தெரியுமே... நம்மகிட்ட வந்து விசியத்த காதுல போட்ருக்கக் கூடாதானு ... அதா கண்டுக்குனு போலான்னு வந்தேன்....

அப்படியே சொல்லிக் கொண்டே... இருக்கைக்கு விளிம்பில் அமர்ந்தான்.... அவன் பார்வை பேசும்வரை தரையை நோக்கியே இருந்தது.....

(அபூர்வ சகோதரர்கள் படத்தில் காவல் நிலையத்தில் ... கமல்... சார்... இந்த சம்பவம் சம்பவம்னு சொல்றிங்களே.... அது இன்னா சம்பவம் சார்னு இன்னசன்டா கேட்பார் ... அந்தக் காட்சி ஒருநிமிடம் மனதில் எனக்கு வந்தது... எனக்குள் சிரித்துக் கொண்டேன்)

என்ன விசயம் வெளியில் வந்தது என்று அவனிடம் கேட்கவேயில்லை... ஒரு விசியமும் இருக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.... இருந்தாலும் மிகவும் அக்கறையாய் கேட்பதுபோல்....
அப்டியா..? யார்கிட்ட போவுது விசியம்? என்று கேட்க....
அதான் நம்ம அண்ணன் ஜெயக்குமார் (அமைச்சர் ஜெயக்குமார்)கிட்டதா போக இருந்துது..... மெல்ல குழைந்தான்...(என்னை அச்சுறுத்த அவன் போட்ட முதல் பிட்)

அப்டியா.... நல்லதா போச்சு.... ஜெயக்குமார் சார் எங்க வீட்டுக்காருக்கு டியர் ஃபிரண்டு தான் ...எங்க சார்தா அவங்க ஃபேமிலி டாக்டர்... (இது 100% உண்மை தான்)விசியம் அங்க போனா நான் பேசிக்றேன்.... நீங்க கவலப்பட வேணாம்... சொல்லியபடி சிரித்தேன்... அவன் முகத்தில் அசடு வழிந்தது...... அவன் தன் புரணாகால உலக்கை உடம்பை லேசாக நகர்த்தி.... அடுத்த பிட்டை போடத் தொடங்கினான்....

மேடம் அண்ணன் பன்னீர் செல்வம் கட்சில சேர்ந்துட்டேன் மேடம்....(அப்போது ஓ.பி.எஸ் தர்ம யுத்தம் தொடங்கிய நேரம்)அண்ணன எனக்கு... என்று எதையோ சொல்ல முற்பட்டவனை இடைமறித்து......
ஓ! நம்ம ஓபிஎஸ் அண்ணனா.....முந்தாநாள் காலைலதான் எனக்கு கால் பண்ணாரு.... என்னம்மா பண்ணலாம் ... ? எடப்பாடி க்ரூப்லருந்்து டீல் பேசறாங்க ... டெபுட்டி சிஎம் போஸ்ட்டு தரோம்னு சொல்றாங்க... என்னா சொல்லலாம்னு என்ன கேட்டாரு... எதுக்கு அண்ணே கட்சிக்குள்ள சண்ட.... சமாதானமா போய்ட்டா ... கட்சி ஸ்ட்ராங்கா இருக்கும்... உங்களுக்கு ஒரு கௌரமா இருக்குமேனு சொன்னே... அண்ணன் அதான் சரினு சொன்னாரு.... பாருங்க இன்னிக்கு சேர்ந்துட்டாரு ... நம்ம பேச்சிக்கு அவ்ளோ மரியாத குடுப்பாரு... நாளைக்கு அவரதான் காலைல பாக்கப்போறேன்..... (100% பொய்)முகத்தில் எந்த பாவமும் காடாமல் அலட்டலும் இல்லாமல் சொன்னேன்.... அவன் முகத்தில் ஒருவித அச்சம் தெரிந்தது....நானோ உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.... அப்பாவியாய் அவனை பார்த்தேன்......

ஆனாலும் அசகாய சூரன் .... மூன்றாவது பிட்டை எடுத்தான்...
மேடம் நம்ம கமிஷனர் எனக்கு நேரடி பழக்கம் மேடம்.... என்று சொல்லியவண்ணம் பாக்கெட்டிலிருந்து எதோ ஒரு விசிட்டிங் கார்டை என் முன் நீட்ட...
அதை பார்த்த படியே.....
நம்ம கமிஷனர் தானே.... (சென்னை போலீஸ் கமிஷனர் )போனவாரம் ஒரு விசியமா பார்க்கப் போனேன்... நல்லா பேசுனாரு.... நம்ம ஊர்காரர்.... ம்மா... ஸ்கூல்ல வந்து யாராவது பிரச்சனப் பண்ணா...ஒடனே எனக்கு ஒரு கால் அடி... புடிச்சி உள்ளப்போட்டு நிமித்திடுறேன்னு சொன்னார்.... அவர் பெர்சனல் நம்மரையும் குடுத்திருக்காரு.... நிதானமாய் பொய் சொன்னேன்.....

இருக்கையை விட்டு மெல்ல எழுந்து நின்றான்...
முகம் அப்படியே தொங்கிப் போனது... இன்று குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வழியில்லாமல் போனதே என்ற ஏமாற்றத்துடன் வெளியே சென்றான் ....

எப்போதாவது, என்னை இதுபோல் மிரட்ட வந்தால்.... அலுவலறை விட்டு வெளியே சென்று ஒருசில விநாடிகளில் திரும்பிவந்து நம் பல்ஸை பார்ப்பது அவன் வழக்கம் .... இதை நான் முன்பே கவனித்துள்ளேன்......அன்றும் நான் எதிர்ப்பார்த்து போலவே... ஒருசில விநாடிகளில் மீண்டும் வந்தான்....காண்ணாடி வழியே என்னை உற்றுப் பார்த்தான் ..... நானோ மொபைலை எடுத்து யாரிடமோ பேசுவதுபோல் பாவலா செய்தேன்... வேகமாக அலுவலறை கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தவன்....
மேடம் ...மேடம்... நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிடுங்க மேடம்.... பதறி கெஞ்சினான்....உண்மையில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை....
அவனை பெரியமனதில் மன்னித்துவிட்டதாய் தலையை லேசாய் அசைத்து.... (ஏதோ முக்கியமான அழைப்பில் இருப்பதுபோல் பாவனையில்) அவனை கைகளால் வெளியே செல்லும்படி சைகை செய்தேன்.... கல்லால் அடிபட்டு வாலை சுருட்டிக் கொண்டு ஓடும் தெருநாய் போல..... அச்சத்தில் விலகிச் சென்றான் .... அதன்பின் பள்ளி அருகே அவனை பார்க்கவேயில்லை.....

எழுதியவர் : வை.அமுதா (8-Jul-20, 9:39 am)
பார்வை : 115

சிறந்த கட்டுரைகள்

மேலே