15 அவளுடன் பேசும்போது

________======________

காலையில் இருந்தே அவள் வீட்டில் இருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டும் படித்தும் பொழுது போனது.

வாசலில் ஒரு கடிதம் விழ பிரித்து படித்துக்கொண்டே வந்தவள் என்னிடம் நீட்டினாள்.

பல பத்திகள் பிரிக்கப்பட்டு அதில் முதல் பத்தியே குடலை பிரட்டியது. மடக்கி கொண்டேன்.

அவளைப்பார்த்தேன். "என்ன செய்யலாம்...போலீசிடம் போகவா?"

அவள் அதை வாங்கி கிழித்து எறிந்தாள்.பழக்கமானது போல் இருந்தது அது.

நீங்கள் என்ன சொல்கிறீர் ஸ்பரி?

நானும் இதைத்தான் செய்ய விரும்பினேன்...ஆனால் நீ பெண்ணுரிமை என்று கூறிவிட்டால்...?

அவள் என்னை கூர்மையாக பார்த்தாள்.

அப்படியெனில்?

நீங்கள் உங்கள் பூட்ஸ் காலால் எங்கள் கூந்தலை மிதித்துக்கொண்டு மற்ற எல்லா விடுதலையையும் கொடுத்து விட்டீர்களே அதுவா..?

அவளுக்கு பெண்ணுரிமையின் ஆரம்பத்தை உணர்த்த முயன்றேன்..

கையமர்த்தினாள்.

போதும் ஸ்பரி...நீங்கள் கொடுத்ததிலும் நாங்கள் பெற்றதிலும் எவ்வளவோ நீர்த்துப்போன செய்திகள் உண்டு. ஒரு பெண் ஏன் போகமாகிறாள்? ஆகாரமாகிறாள்? அவள் ஆவியை எதற்கு குதற வேண்டும்? அவளை ஏன் குருதியின் சின்னமாக ஆக்கி வைத்து பார்க்கின்றீர்? நீங்கள்
உரசியவுடன் அவள் வந்து நிற்க ஜீனிபூதமா?

பெண்ணுக்கு இப்படி தேவைகளே வராது போய் விடுமா? என்றேன்.

எத்தனை கோவில் சென்றாலும் பிள்ளை வரம் கொடுப்பது புருஷன் அல்லவா என்று கிராமத்தில் சொல்வார்களே...

டெஸ்ட்ட்யூப் போதும் ஸ்பரி இப்போது...

நீங்களும் பெண்களை இறுக்க பிடித்து காப்பாற்ற வேண்டாம்..பெண்ணுரிமை ஜாதி அரசியல் மூன்றும் இறைச்சியாகி விட்டது.நீங்கள் வீட்டின் பின்கட்டை நவீனமாக்கி தருவது அல்ல அது.சற்று ஆவேசப்பட்டாள்.

பெண்ணுக்கு உரிமை என்பது முழு வடிவம் உண்டா? கோவிலுக்குள் திருட்டுத்தனமாக செல்வதா? சாரதா அம்மையார் ஆண்களாலும் வணங்கப்பட்டவர்தானே...அமிர்தானந்தமயி ஏன் எந்த கருத்தும் சொல்லவில்லை?பெண்கள் பாதுகாப்பை பெண்களே முற்றும் உறுதி செய்ய முடியுமா?
பெண்ணுரிமை பேசி 20 லட்ச ரூபாய் காரில் நெயில் பாலீஷ் அழியாது போகும் பெண்ணுக்கு அந்த காரையே பார்த்திராத ஒரு பழைய புடவைக்காரிக்கு எந்த உரிமையை மீட்டு கொடுத்து உள்ளனர்...சொத்துஉரிமை தவிர...ஓலை வீட்டுக்கு சொத்துரிமை வந்தால் என்ன வராவிடில் என்ன.. இதையும் நீ கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?

அவள் கற்புக்கு உயிருக்கு சட்டப்பாதுகாப்பு உண்டு ஸ்பரி...

பின் ஏன் அந்த கடிதம் கிழித்தாய்? இப்படி எத்தனை குறுஞ்செய்தி அழிக்கப்படுகிறது..?
இப்படி நீ எத்தனை பேருக்கு சொல்லில் தங்கை ஆக வேண்டியிருக்கிறது. பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டு கவிதை எழுதி பார்க்கும் பெண்களை தெரியுமா?

அப்படியென்றால்?

நீங்கள் ஆண்களிடம் அந்நியப்பட்டு போய் விட்டீர்கள்...உங்களை பாதுகாக்கும் யுக்திகள் கற்பிக்கப்பட்டு,பரப்பப்பட்டு காதலை மறந்து போய் விட்டீர்கள்...இப்போது பத்து வயது குழந்தை நெஞ்சை மூடிக்கொண்டு அலைவதை பார்க்க எவ்வளவு வேதனை?அது இன்னும் எத்தனை காலம் இப்படி இருக்க வேண்டும்...?மாதங்கள்...வருடங்கள்...
வகுப்பில் இருந்து தெருவில் இருந்து உறவில் இருந்து அது ஆண்களை நெருப்பு போல் பார்க்க பழக்கப்பட்ட பின் காதலை எப்படி கற்க முடியும்...?

ஆண்கள் ஒரு மிருகம். அது பாயும் நேரம்தான் தெரியாது. அந்த கடிதம் நீங்கள் முழுமையாக படிக்கவில்லை...

ஆம். படிக்க முடியவில்லை. கண்ணீர் மறைத்து விட்டது என்றேன்.

அவள் வெடித்து அழுது மடியில் சாய்ந்துகொண்டாள்.


--------×××××++++×××-----------

எழுதியவர் : ஸ்பரிசன் (8-Jul-20, 9:33 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 23

மேலே