17 அவளுடன் பேசும்போது

_______=======______

நாய்குட்டிகளை என் வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் கோவிலுக்கு போவதென்று முடிவு செய்து இருந்தாள்.

அம்மாவிடம் குட்டிகள் முன்பை விட நன்றாக ஒட்டிக்கொள்கின்றன.

ஊருக்கு சற்று வெளியில் இருந்த அந்த கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தோம்.

அவள் வழியில் எதுவும் பேசவில்லை.

"என்ன மௌனம்"

"உங்களைப்பற்றி நினைத்தேன். அதுதான்".

எதற்கு?

நீங்கள் உண்மையில் நான் கூப்பிட்டதால் மட்டுமே கோவிலுக்கு துணைக்கு வந்தது போல் இருந்தது. அப்படித்தானே?

உண்மைதான். நான் துணைக்கு மட்டுமே வந்தேன்.

நீங்கள் அங்கு எந்த வழிபாட்டிலும் இல்லை என்பது நான் புரிந்து கொண்டேன். கடவுளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ஸ்பரி?

நீ?

கடவுளாக, தோழனாக மட்டுமே.

"பின்னர் அது ஏன் சடங்கு, வழிபாடு, விரதம், மந்திரங்கள், நியதிகள் என்று இடையற்று சடங்குகள் போல் நீள்கிறது"?

காலம் காலமாக அப்படித்தானே... இதில் என்ன புதுமை செய்ய முடியும்?

புதுமை அல்ல. கடவுள் ஒரு அடையாளம். மென்மையான சின்னம் அவ்வளவுதான்.

ஜே.கே சொன்னாரோ? சிரித்தாள்...

நானும் சிரித்தேன்.

போகட்டும். நீங்களும் அவரைபோல் வணங்காது இருக்க முடியுமா? அவர் கடந்தவர்... நாம் வாழ்பவர் அன்றோ?

அவளை நேரிடையாக பார்த்தேன்.

உன் மனம் ஒரு தூசி. அதை அப்படியே வைத்திருப்பது கடவுள் என்னும் பிம்பம்.
நீ வெறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாத அவஸ்தைகள் மட்டுமே உன் ஒவ்வொரு நாட்கள். கடவுள் என்னும் ஒரே ஒரு சிந்தனையின் மயக்கம் மட்டுமே இவைகளை இப்படி பல அச்சுறுத்தலில் இருந்து மனதை தாங்கி பிடிக்கிறது.

எப்படி ஸ்பரி?

"உன்னால் இருந்த இடத்திலிருந்து வெகு தூரம் வரை பார்க்க முடியும். ஆனால் பார்வையின் கடைசி புள்ளிக்கு உடனே உடல் அளவில் செல்ல முடியாது. உன் கடவுள் அங்கிருக்கிறார் என்பதால் உனக்கு பயம்,சந்தேகம்,கேள்விகள் எதுவும் வருவதில்லை. அந்த வெகுதூரம் என்பது உன் வாழ்க்கையின் ஒருநாள் மட்டும்."

ஒருவேளை இது உண்மையென்றால் சில லீலைகளும், அதிசயங்களும் இங்கு உலகில் நிகழத்தானே செய்கிறது?

அது நிகழ்வு. அது கடவுளா?சொல். இன்னும் கேட்கிறேன்...

விலங்குகள் விபத்தில் தப்பிக்கிறது. மரங்கள் ஆபத்தில் இருந்து பல நேரங்களில் விலகுகின்றன. ஆனால் அவைகள் ஒருபோதும் துதிப்பதில்லை.

நீங்கள் நாத்திகவாதி அல்ல என்பது எனக்கு தெரியும்.

ஆத்திகவாதியும் அல்ல என்பதும் கூட.

ஆனால்... ஒரு எளிய மனதுக்கு கடவுள் எத்துணை அருந்துணை என்பது தெரியுமா உங்களுக்கு?

அவை படிமங்களின் இடைவிடாத எண்ணம். எண்ணங்களின் தீவிரமான நம்பிக்கை. நம்பிக்கை என்பது கற்பிக்கப்படும்போது வெறும் சொற்கள் மட்டுமே.
உன்னை நீ சிலுவையாக மாற்றி கொள்வதே பக்தி என்றால்... வரம் தரும் கோவில் மணியோசையே நீதான் என்றால்... கடவுள் உன் மூலம் தன்னையே குழப்பி கொள்கிறார் அல்லவா?

இது எப்படி? நான் பிராத்திக்கிறேன். கேட்கிறேன். நம்புகிறேன். இறுதியில் ஒரு தேவையான ஆறுதல் கிடைக்கிறது.
என்னை எப்போதும் காலங்கள் சூழ்ந்து கிடக்கிறது ஸ்பரி. அவை திரும்ப திரும்ப எண்ணங்களால் ஆனது.

நான் இனியும் மனிதனிடம் மன்றாட விரும்பவில்லை. ஆனால் புலனாகாத ஒன்றின் பாதை எனக்காக திறக்கப்படும் என்பதில் ஐயமின்றி இருக்க முடிகிறது. இதை இறைநம்பிக்கை செய்கிறது.

உனக்கு இறை நம்பிக்கை இல்லாது போனாலும் இவை நடக்கலாம். ஆனால் நீ போர்த்தி கொள்ளவே விரும்புவாய். இதமான உஷ்ணத்தில் உன்னால் உறங்க முடியும் என்றால் ஒருபோதும் இறை நம்பிக்கை தவறே அல்ல என்றதும் அவள் சற்று அமைதியாக நடந்தாள்.

உங்கள் அம்மா நாள் முழுக்க துதியில் இருப்பவர்தானே?

அது அவள் உலகம். அவளை இறைவன் காண விருப்பப்பட்டு நேரே வந்தால் நிச்சயம் வரவேற்க மாட்டாள். முக்தி என்பதன் முகவராக மட்டுமே அவள் கடவுளை சந்திக்க பிரியப்படுகிறாள்.

கடவுள் வர மாட்டார் என்பதினால் மட்டுமே ஆன்மீகம் தழைத்து நிற்கிறது. இந்த அசௌகரியம் நாஸ்திகத்தில் ஒரு போதும் இல்லை.

நீங்கள் வேறு எதை தெய்வம் என்று நம்புகின்றீர்கள் என்று அவள் இன்னும் ஏதோ கேட்க முனையும்போது வீட்டு வாசலை அடைந்தோம்...

வாசலில் இருந்த குட்டிகள் எந்த பிரதி பலனும் பாராது வால்கள் அசைத்து அசைத்து அவள் மீது தங்களின் அன்பை சொரிந்தன.

அவள் தன்னை மறந்து அவைகளோடு தாயாய் கிடந்தாள்.


_____==========_______

எழுதியவர் : ஸ்பரிசன் (10-Jul-20, 10:42 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 55

மேலே