சந்துரு என்கிற சேது

அந்த தெருவில் ஏறக்குறைய நாற்பது வீடுகள் இருந்தன .நடுநாயகமாக இருந்த அந்த வீடு இடிந்து சிதைந்து போயிருந்தது . வீட்டின் முன்னால் இருந்த அந்த வேப்ப மரம் மட்டும் கிளைகளோடு விரிந்து பரந்து தலை நிமிர்ந்து கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது . பார்த்து பத்து வருஷமாகிப்போனாலும் அது அவனை உடனே இனம் கண்டுவிட்டது போல தென்றலை அவன் மேல் வீசியடித்து ஸ்பரிசித்தது . இன்னமும் அதன் பாசம் அப்படியே இருந்தது கண்டு அவன் நெகிழ்ந்து போனான் . அந்த மரத்தை கொஞ்சநேரம் கட்டிப் பிடித்தபடியே நின்றான் .
பல மாதங்கள் சவரம் செய்யப்படாத முகத்தோடும் கழுத்தில் தொங்கிய தலைமுடியோடும் அவன் இருந்தான் . கண்ணனுக்கு கருப்புக் கண்ணாடியும் தலைக்கு தொப்பியும் அணிந்திருந்தான் . தன்னுடைய அடையாளங்களை மறைத்து பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசப்பட்டு தெரிந்தான் . அவனை பார்த்தவுடனே அந்த ஊர்வாசிகளுக்கு தெரிந்துவிடும் அவன் அந்த ஊர் மனிதன் இல்லை என்பது .
“ யாருப்பா நீ ? ஒனக்கு என்ன வேணும் ... ரொம்ப நேரமா நானும் பாக்கறேன் இடிஞ்சிபோன அந்த வீட்டையே வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டு நிக்கிறீயே... என்ன வேணும் ஒனக்கு ? “
அந்த பெரியவர் அதிகார தோரணையோடும் சந்தேக பார்வையோடும் கேள்விகளை அடுக்கினார் . அந்த கணீர் குரல் சேதுவை உலுக்கி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்திருந்தது . பெரியவரின் சத்தம் கேட்டு நான்கைந்து பேர் அங்கு கூடி விட்டனர் .
“ ஐயா … அது ஒண்ணுமில்ல …” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ சும்மாதான் பார்த்தேன் “ என்றவன் மேலும் சமாளித்துக் கொண்டு பேச தொடங்கினான் . “ எம் பேரு சந்துரு , ஊரு செங்கிப்பட்டி ,சிங்கப்பூர்ல வேல பாக்கேன் . இந்த வீட்டு பையன் சேதுராமன் என்னோட சிநேகிதன் . ஆறு மாசத்துக்கு முன்னாடி போன் பண்ணி வேல வேணுமுன்னு கேட்டான் , இப்ப தான் ஏற்பாடு பண்ண முடிஞ்சுது . போன் பண்ணேன் , இந்த நம்பர் பயன்பாட்டில் இல்லன்னு வருது , போன வாரந்தான் இந்தியாவுக்கு வந்தன். அதான் பாத்துட்டுப் போவலாமுன்னு இங்க வந்தன் . இதுதானே அவங்க வீடு ? ஏன் இடிஞ்சிபோயிருக்கு ? என்னாச்சு … “ ஒரு வழியாக சொல்லிமுடித்தான் சேது .
“ என்னப்பா நீ … வெவரம் தெரியாத புள்ளையா இருக்கியே ? ஒனக்கு விஷயமே தெரியாதா ? அந்த சேது பய செஞ்ச வேலையால அவங்க குடும்பமே அழிஞ்சி போச்சி ...”
கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டான் “ அப்புடி என்ன செஞ்சான் அவன் ? “ .
“அந்த சேது பய , பக்கத்துல இருக்கற காலனி பொண்ண இழுத்துகிட்டு ராத்திரியோட ராத்திரியா ஊற விட்டே ஓடிட்டான் . அவங்க அப்பா அம்மாக்கு ஒரே அவமானமாய் போய்டிச்சி . அவனோட அப்பா ரொம்ப நல்ல மனுஷன் , தல நிமிந்து நடந்தவர அந்த பாவி தலை குனிய வச்சுட்டான் . பாவம் ! ரொம்ப மனசொடிஞ்சி போயிட்டார் . ரொம்ப நாளா மனக்கஷ்டத்துல இருந்தவரு ஒரு நாள் திடீர்னு செத்துப் போய்ட்டாரு . அப்பொறம் ஊர்ல எல்லாருமா சேர்ந்து அவருக்கு சாங்கியமெல்லாம் செஞ்சி எடுத்து எரிச்சிட்டோம் …” .
அப்பாவின் இறப்பு செய்தி அவனை கலங்கடித்தது , அது மட்டுமல்லாமல் அவருக்கு ஏற்பட்ட அந்த நிலைக்கு தான் தான் காரணம் என்பதால் துக்கம் தொண்டையை அடைத்தது . தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவன் ரொம்பவே தடுமாறினான் . சோகம் அப்பிக்கொள்ள , முட்டிக்கொண்டு அந்த கண்ணீரை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டான் .
“ நீ… ஏம்பா கண் கலங்கற ...” என்ற அந்த பெரியவரின் கேள்விக்கு மற்றொரு பெரியவரே பதில் சொன்னார் “ அந்த தம்பி சேதுவோட ஸ்நேகிதன்னு சொல்லிச்சில்ல , அதான் அதால துக்கம் தாங்க முடியல போலருக்கு பாவம் ! . ஆனா அந்த சேது பய கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கியோ ஜாலியா இருக்கான் .”
“ அவன் ஏன் இங்க வரணும் ? தராதரம் தெரியாத பய ... வந்தா ஊருக்குள்ள நொழைய விட்ருவோமா ? தரங்கெட்ட வேலைய செஞ்சா இப்புடித்தான் தண்டன கெடைக்கிம் . பாவம் ! நல்ல மனுஷன் போய் சேந்துட்டாரு ... “ மற்றொரு பெரியவர் பேசிக்கொண்டேபோனார் .
கனத்த இதயத்தோடும் அடுத்து என்ன சொல்ல போகிறார்களோ என்ற பயத்தோடும் நடுங்கிய குரலில் கேட்டான் "சேதுவோட அம்மா ...?"
“ அட அது இன்னும் கொடுமப்பா ... மவன் ஓடிப் போனப்பவே ரொம்ப மனசு உட்டுட்டாங்க . ஒரே மவன் , எத்தினியோ கனவு இருந்திருக்குமுள்ள . பத்தா கொறைக்கி புருஷன் வேற போய் சேந்துட்டாரு . அந்த துக்கமும் சேந்துட்டதால அவுங்குளுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சி . கொஞ்ச நாள் அங்க இங்கன்னு சுத்திட்டு திரிஞ்சாங்க . இப்ப ரெண்டு மூணு வருஷமா ஆளையே காணும் . எங்க போனாங்க ,என்ன ஆனாங்கன்னு யாருக்கும் ஒன்னு தெரியலப்பா “ .
'அம்மாவுக்கு என்னாச்சு ? எங்க போயிருப்பாங்க ? எங்க போயி தேடறது ? வெளியில் விவரிக்க முடியாத அளவுக்கு சோகம் , கலங்கிப் போயிருந்தான் .
“ அதாம்பா அவுங்களுக்கு இப்படி ஆயிபோனதனால இந்த ஊடு ரொம்ப நாளா பூட்டி கெடந்துச்சி , போன மழையில இடிஞ்சி உழுந்துடுச்சி . ம்ம்ம் ... என்ன செய்ய ... “ அந்த பெரியவர் பெருமூச்சு விட்டார் .
“ ம்ம் … நல்ல புள்ளய பெக்கணும் . ஓடுகாலிய பெத்தா இப்புடிதான் ஆவும் . விதி யாரை வுட்டுது ? “ மற்றொரு பெரியவர் புலம்பினார் .
“அந்த பய எங்க இருக்கானு ஒனக்கு தெரியுமா தம்பி ? “ முதலில் பேசிய பெரியவர் கேட்டார் .
“ தெரியலீங்க … போனும் போவல, அட்ரசும் குடுக்கல . தேடிட்டே இருக்கேன் “
“ திருட்டு பய … உண்மைய சொல்ல மாட்டான் . அப்பாவ முழுங்கிட்டான், அம்மாவ புத்திஸ்வாதீனமில்லாதவளா சுத்த விட்ருக்கான் . இன்னும் என்ன பண்ணபோறானோ ? குடும்பமே நாசமாய் போய்டிச்சி . கண்டவள கை புடிச்சா இப்படித்தான் நடக்கும் “ குருக்கள் தன் பங்கிற்கு திட்டிக்கொண்டிருந்தார் .
விடை பெற்றுக்கொண்டு சந்துரு என்று சொல்லிக்கொண்ட அந்த சேது திரும்பி நடக்க தொடங்கினான் . ஒரு பொண்ண வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா ? நா பண்ண தப்புக்கு அம்மா அப்பாவுக்கு எதுக்கு பனிஷ்மென்ட் ? என்ன ஒலகம்டா இது ? . அம்மா எங்க இருப்பாளோ ? உயிரோட இருப்பாளா ? எங்க போயி தேடுவன் ? இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த சமூகம் இப்பிடியே இருக்கும் . பெத்தவங்கள காப்பாத்த முடியாத புள்ளையாயிட்டானே ... ஜனங்க மாறவே மாட்டாங்களா ...
இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு அதிகம் இருந்ததால் லலிதாவும் அவனும் ஒரு கோயிலில் மாலைமாற்றிக் கொண்டு வெளியூருக்கு போயி கொஞ்சகாலம் வாழலாம் என்று முடிவெடுத்தனர் . ஒன்றிரண்டு வருடங்கள் போனால் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தனர் . எல்லாம் சரியான பிறகு பெற்றோரை அழைத்துக்கொண்டு பட்டணத்திலேயே செட்டிலாகலாம் என்று திட்டம் வைத்திருந்தனர் . ஆனால் ஊர் மாறவே இல்லை , அவனுக்கு எல்லாமே தப்பு தப்பாய் நடந்துவிட்டது .
இலக்கு இல்லாமல் நடந்து கொண்டிருந்தவனுக்கு சட்ரென்று ஒரு எண்ணம் அவனுக்குள் உதித்தது . லலிதா வீட்டுக்கு போயி பாக்கலாமா ? ஒரு முடிவுக்கு வந்தவனாய் காலனியை நோக்கி நடைபோட்டான் . அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலத்தின் அருகில் வீடுகள் இருந்தன . வீடுகள் என்று சொல்வதைவிட குடிசைகள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் . ஆங்காங்கே கொஞ்சம் பயிர் பச்சைகளும் மரம் மட்டைகளும் , ஆடு மாடுகளும் தென்பட்டன . பத்து வருடத்தில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை என்பது பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று தெரிந்தது .
“ அம்மா இங்க சின்னசாமி வீடு ...? “ அவன் முடிக்குமுன் அந்த பெண்மணி பதில் சொன்னாள் .
“ அந்த ஓடுகாலி லலிதாவோட வூடா ? அந்த கடைசி வூடா ? “ . தெருவின் கடைசி வீட்டை காட்டினாள் .
தெருவின் கோடியிலிருந்த அந்த குடிசை வீட்டை அடைந்தான் . வீட்டின் அருகில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த வெள்ளை நிற முசு முசு நாய் மௌனம் காத்தது அவனுக்குள் பய கதிர்களை பாய்ச்சியது .
“ அம்மா ... அம்மா …. “ என்றான் .
லலிதாவின் அம்மா வெளியே வந்து வெத்தலை எச்சிலை துப்பிவிட்டு “என்ன “ என்றாள் அதிகாரமாக .
தான் சந்துரு, சேதுவோட நண்பன் என்று தொடங்கி முழு விவரமும் சொன்னான் .
“ அந்த நாய பத்தி பேசாத …. ஒன்னும் தெரியாத எம் பொண்ணு மனச கெடுத்து ஊரை விட்டே கூட்டிட்டு ஓடிட்டான் . மேல்சாதி காரனுவலாம் வந்து எங்க சாதி சனத்தலாம் அடி அடின்னு அடிச்சனானுவ . ஒரு குடுச வுடாம கொளுத்தி புட்டானுவ . இங்க இருந்த பொம்பள புள்ளவோல கண்டபுடி பேசி கைய புடிச்சசி இழுத்தானுவோ . அவுனுவோ அடிச்ச அடியில உழுந்த எம்புருஷன் இத்தனை வருஷமாயும் இன்னும் எழிந்திருக்கவே இல்ல . ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் பாயிலேயே போய்கிட்டு கெடக்கார் . எந்தலையெழுத்து எல்லாத்தையும் அனுபவச்சிக்கிட்டு இன்னும் உசுரோட இருக்கேன் “ .
“ இங்க யார் கிட்டயும் எதுவும் கேட்காத . அவன் பேர சொன்னாலே அடிப்பாங்க . நீ கெளம்பு ,எங்கயாவது அவன பாத்தா ஊர் பக்கம் வந்துறாதுன்னு சொல்லு . இங்க வந்தா , அவங்க ஆளுங்களுக்கு முன்ன எங்க ஆளுங்களே அவங்க ரெண்டு பேரையும் வவுந்து போட்ருவாங்க “ .
இன்னும் சாதீயம் சூடு குறையாமல் கதகதப்பாய் இருப்பதை உணர்த்த அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான் .
மீண்டும் அம்மாவைப் பற்றிய நினைவுகள் அவனுள் முளைக்க ஆரம்பித்துவிட்டன . பதினைந்து இருபது நிமிட நடையில் பேருந்து நிலையம் வந்திருந்தான் . தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற சுரத்தையே இல்லாமல் கண்கள் வெறித்திருக்க எதையோ பறிக்கொடுத்தவன் போல நின்று கொண்டிருந்தான் .
“ டேய் சேது “ என்றொரு குரல் அவனுக்கு வெகு அருகில் கேட்டது . கவனம் களைந்து திரும்பி பார்த்தான் . யாராக இருக்கும் ? என்னை கண்டுபிடித்துவிட்டார்களா ? ஏதும் பிரச்சினை வருமோ ? என்று எண்ணியபடி திரும்பி திரும்பி நாலா புறமும் பார்த்தான் . யாரையும் காணோம் ,யாராக இருக்கும் ? , அவனுக்குள் கொஞ்சம் டென்சன் எட்டிப்பார்த்தது .
“ டேய் சேது ... “ என்ற படி எங்கிருந்தோ திடீரென்று தன் முன்னால் வந்து நின்ற அந்த மனிதனை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை . வழுக்கை தலையோடும் ,தாடியோடும் ஒடிசலான தேகம் தாங்கி ஒரு ஒற்றை நாடி மனிதன் நின்றிருந்தான் .
“ என்ன தெரியலையா ? நா பாலா … மறந்துட்டியா ? அடையாளம் தெரியலையா … ?” .
பத்து வருடங்களுக்கு முன் அடர்த்தியான முடிக்கு சொந்தக் காரனாக மீசையில்லாமல் திரிந்தவன் , இப்போது வழுக்கை வாங்கியிருந்தான் , முகத்தில் சுருக்கம் , மனதில் தெளிவு , கண்ணில் வெளிச்சம் என்று வித்தியாசப்பட்டிருந்தான் .
சேதுவுக்கு தூக்கிவாரிப்போட்டது . ஐயோ !..இவனா ? எப்படி கண்டுபுடிச்சான் இவன் ? மறுப்புடியும் ஏதாவது பிரச்சன வருமா ? ஊற விட்டு ஓடும் போது எதிரில் வந்தவன் உடனே ஊருக்கு போட்டுகுடுத்தவன் இந்த பாவி தானே ? இப்ப என்ன செய்யப் போறானோ ? யோசனையில் இருந்தான் சேது .
“ தாடியும் கீடியுமா இருந்தாலும் ஒன்ன நா கண்டு புடிச்சிட்டேன் . பயப்படாத .. நா ஒன்ன காட்டிக் குடுக்கமாட்டன் . நீ தான் சேதுன்னு யார்கிட்டயும் சொல்லமாட்டேன் . மனுஷங்கன்னா மாறக் கூடாதா என்ன ? தப்பு செஞ்சவன் தான் செஞ்ச தப்ப திருத்திக்க சான்ஸ் கெடச்சா திருத்தக்க கூடாதா என்ன ? அங்க வீட்டாண்டையே ஒன்ன பாத்தவுடனே கண்டுபிடிச்சிட்டேன் . அங்கேயே ஒங்கிட்ட சொல்லிருப்பேன் . ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சி போயிருக்கும் . அதான் ஒன்னும் சொல்லல . எப்பிடியும் நீ இங்க பஸ்ஸ்டாண்டுக்கு வருவேன்னு நெனச்சேன் , அதான் இங்க வந்து காத்துகிட்டு இருக்கேன். "அப்படி வா " என்று ஒதுக்கு புறமாக அழைத்துக்கொண்டு போனவன் காதோரமாக அடிக்குரலில் சொன்னான் . அம்மா ! எங்க வூட்டுல தான் இருக்கு . அவுங்களுக்கு மனசு கொழம்பி போய்டிச்சி . தெருவுல திரிஞ்சிக்கிட்டு இருந்தவங்கள நாந்தான் எங்க கூட்டியாந்து வூட்ல வச்சிருக்கேன் . அடிக்கடி எங்கயாவது போய்டும் , அப்பொறம் நா தான் தேடி கண்டுபுடிச்சி கூட்டியாருவேன் . இப்ப கொஞ்ச நாளா எங்கயும் போறதில்ல , வீட்டோடவே இருக்கு .சோறு குடுத்தா சாப்பிடும் , குடுக்கலன்னா அது பாட்டுக்கு மோட்டுவளைய பாத்துகிட்டு ஒக்காந்திருக்கும் . நம்ப வூடு கொல்லையில இருக்கறதால ஊர்ல இருக்குறவங்களுக்கு இவுங்க இங்க இருக்கறது தெரியல . வா வந்து பாரு , வந்தா ஓங்க்கூட கூட்டிட்டு போ . கடைசி காலத்துல ஓங் கூடவே இருக்கட்டும் , ஒரு வேளை மனசு தெளிஞ்சா ரொம்ப சந்தோசம் . "வீட்டுக்கு வா ".. நா யார்கிட்டயும் நீ இன்னார்னு சொல்லமாட்டன், கவலைப்படாத “ .
கண்களில் நீர்கோர்த்துக்கொள்ள பாலாவை அப்படியே கட்டி பிடித்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதான் சேது . காலம்தான் எவ்வளவு வலிமையானது ,மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது …. மாற்றிவைக்கிறது .
“ அப்பா தான் துக்கம் தாளாமல் போய்ட்டாரு , அம்மா மனநிலை சரில்லைனாலும் உசுரோட இருக்காங்களேன்னு சந்தோஷப்படு . வா.. வா.. போவலாம் . வீட்டுக்கு நீ சந்துரு வாவே வா.. எல்லாம் சரியா போய்டும் … “ .
இன்னமும் நடப்பதை நம்பமுடியாமல், பாலாவை வியப்புடன் பார்த்துக்கொண்டு அவன் கைகளை பிடித்துக்கொண்டு நின்றான் சேது .

எழுதியவர் : வசிகரன் .க (10-Jul-20, 1:53 pm)
பார்வை : 101

மேலே