சுழல்

அவர்கள் ஹாஸ்பிடலிலிருந்து வெளிவந்த பொழுது இளஞ்சூடான மாலை வெயில் அவர்கள் கார் கண்ணாடிகளில் பட்டு எதிரொளித்துக் கொண்டிருந்தது.

கவின் கார் கதவைத் திறந்து அமர்ந்து கொள்ள, சித்ராவும் அவனருகே அமர்ந்து கொண்டாள்

கவின் காரை ஸ்டார்ட் செய்து கிளப்பினான்.சித்ரா கர்சீப்பை வாயில் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.அவள் கண்களிலிருந்து கண்ணீரும், வாயிலிருந்து அழுகையும் பெருகிக் கொண்டேயிருந்தது.கவின் துக்கம் பரவிய கண்ணோடு அவளை ஆறுதல் படுத்தும் பொருட்டு,அவள் தோளை தட்டிக் கொடுத்து "ப்ளீஸ் காம் சித்ரா"

அவன் கைகளை தட்டிவிட்டு "டோன்ட் டச் கவின். ப்ளீஸ், என்ன நிம்மதியா அழவிடுங்க"

அவன் காரை வேகமாக செலுத்த தொடங்க, திடீரென ஒருநாய் ரோட்டின் குறுக்கே ஓடிவந்தது

_______

"வந்ததும், வராததுமா உன் இராமாயணத்த ஆரம்பிச்சுட்டியா. நாம மீட் பண்றதே வாரத்துல ஒருநாள் தான். அதுல கொஞ்சம் நேரம் பேசறதுக்குள்ளே, வீட்டுல தேடுவாங்க நான் கிளம்பணும்னு, படிச்ச பாட்டையே திரும்ப திரும்ப படிச்சுக்கிட்டு"

"கோவிச்சுக்காத கவின். அம்மா உடம்பு முடியாம இருக்காங்க. அவங்கள பார்த்துக்க சொல்லி அப்பா என்னை வீட்டுலேயே இருக்க சொல்லிருக்காரு. இப்ப வேலை முடிஞ்சு அப்பா வீட்டுக்கு வரப்ப நான் இல்லைனா எதாவது சொல்லுவாரு.அதான்"

"உன் ஃபேமிலி சுச்சூவேஷன் புரியுது கவிதா. ஆனா என் மேலேயும் நீ கொஞ்சம் கருணை காட்டலாமில்லையா. வாரத்துல ஆறுநாள் உன்ன பார்க்கணும், உன் கூட பேசணும்னு எவ்வளவு கற்பனை பண்ணிக்கிட்டு உன்ன மீட் பண்ண வரேன் தெரியுமா. அதுவுமில்லாம அப்பா வேற அவர மீட் பண்ண என்னை டெல்லிக்கு வரச் சொல்லிட்டேயிருக்காரு"

"சரி. சரி. நான் கிளம்பல, போதுமா. இப்ப உங்க ஆசைத் தீர பேசுங்க.கேக்கறேன்"

"அது பேசிப்பேசி வாயெல்லாம் டயர்டா இருக்கா.அதான் கொஞ்சம் எனர்ஜி ஏத்திக்கிட்டா நல்லா இருக்கும்னு பாக்குறேன்"

அவள் பார்வையிலேயே என்ன வேணும் எனக் கேட்க, அவள் ஈரம் படிந்த இதழ்களை நோக்கி, தன் உதடுகளை நெருக்கமாக கொண்டு சென்றான்

______

சரெலென்று அவன் ப்ரேக்கை அழுத்த கார் கீரிச்சபடியே நின்றது.அதிர்விலிருந்து மீள்வதற்கு இருவருக்கும் ஒருகணம் பிடித்தது.

சித்ராவின் அழுகை தானாக நின்று, அந்த நாய்க்கு எதாவது நேர்ந்துவிட்டதோ என்ற பயமும், பதட்டமும் தொற்றிக் கொண்டது.இருவரும் வேகமாக காரிலிருந்து இறங்கி காரின் முன்பகுதியை நெருங்க, அங்கே, நாய் ஒரு கால் நசுக்கப்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தது.

சித்ரா நாயை நெருங்கி செல்ல

"என்ன பண்ணப்போற சித்ரா"

"ப்ளீஸ். நீங்க போய் கார ஸ்டார்ட் பண்ணுங்க"

அவன் காரை ஸ்டார்ட் செய்ய, அவள் நாயை தூக்கிக் கொண்டு காரின் பின் சீட்டில் கிடத்தி, அவளும் ஏறிக் கொண்டாள்.

"கவின் பக்கத்தில எதாவது வெட்னரி ஹாஸ்பிடல் இருந்தா கொஞ்சம் சீக்கிரமா போங்களேன்" அவன் காரை கிளப்ப, அவள் நாயை வருடத் தொடங்கினாள்.

------

தலையை வருடிய கவிதாவின் கைகளை பிடித்து முத்தம் கொடுத்தவாறே, அவள் மடியில் சாய்ந்து கொண்டான் கவின்.

"கவிதா, இப்படியே உன் மடியிலே சாய்ந்துகிட்டு, இந்த வானத்தை பார்த்துகிட்டு, கடல் ஓசையை கேட்டுக்கிட்டு, உன் கையப் பிடிச்சுக்கிட்டு அப்படியே செத்துட்டா என்னனு தோணுது"

மௌனமான கவிதாவின் விழிகளிலிருந்து இருத்துளி சுரந்து, வழிந்தோடி அவன் முகத்தை முத்தமிட,
அவன் மூடிய விழித்திருந்து பார்த்து அதிர்ந்தான்.

______

கவினுக்கு அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருந்தது

"என்ன சித்ரா சொல்ற, இந்த நாய இனிமே நம்ம வீட்லயே வச்சு வளர்க்க போறீயா"

"கவின், வீணா பேசிட்டு இருக்காம வந்து வண்டிய எடுங்க. நாம பண்ண தப்புக்கு நாம தான் பிராயச்சித்தம் தேடணும்"

"நீ பேசறத பார்த்தா, நான் வேணும்னே இந்த நாய் மேல வண்டி ஏத்திட்டேனு சொல்றீயா"

"சி கவின், நீங்க தெரிஞ்சு பண்ணதா நான் சொல்ல வரல.விபத்து எதிர்பாராத விதமா நடந்திருந்தாலும், அதுல நமக்கும் பங்கு இருக்கு. அதைத்தான் அப்படி சொன்னேன்"

"என்னமோ பண்ணித் தொலை. நான் சொல்றத நீ என்னிக்கு கேட்டிருக்க" அவன் கோபத்தினூடாக சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு, காரை ஸ்டார்ட் செய்தான்.

நாய் அரை மயக்கத்தில், அவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

------

கவிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான் கவின்

அவள் அழுதுவடிந்த கண்களை கர்சீப்பால் துடைத்துக் கொண்டு, மூக்கை உறிஞ்சினாள்

"கவிதா நான் விளையாட்டுக்குத் தான் சொன்னேன்"

"உங்கள மாதிரியே தான் அன்னிக்கு என் தம்பியும் சொன்னான். நான் அப்ப விளையாட்டா எடுத்துக்கிட்டேன். இப்ப அவன் உயிரோட இல்லை"

"உன் தம்பிக்கு என்ன ஆச்சு?"

அவன் பத்தாவது வகுப்பில மார்க் கம்மியா வாங்கிட்டான். அவன டாக்டருக்கு படிக்க வைக்கணும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. பட் அவனோட கட் ஆஃப் மார்க்குக்கு எந்த காலேஜ்லேயும் சீட் கிடைக்கல. அதனால அப்பாக்கு ரொம்ப கோபம் வந்து அவன் கூட பேசவேயில்லை. அம்மாவும் அப்பப்ப அவன் சரியா படிக்கலைனு குத்தம் சொல்லிட்டே இருந்தாங்க.நல்லா துறு துறுனு இருந்த பையன் ரொம்ப சோகமா ஒருநாள் என் ரூமுக்கு வந்து உட்கார்ந்துட்டு இருந்தான்.நானும் அம்மாவும் கோயிலுக்கு கிளம்பிட்டு இருந்தோம்.அப்ப தான் அவன் சிரிச்சிட்டே "அக்கா, நான் செத்துட்டா அப்பா அம்மோவோட கோபம் கொறையும்ல"

நான் தலையை சீவி கொண்டிருக்க, அவன் ஜன்னலையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்

நான் அவன் விளையாடுறானு நினைச்சு, "ஆமா, ஆமா, இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி அதுவுமா செத்தா, நேரா சொர்க்கத்துக்கு போவாங்கலாம். பேசறான் பாரு பெரிய மனுஷனாட்டம்"

அம்மா அதற்குள் "கிளம்பிட்டியா கவிதா. இந்தா இந்த பூவ வச்சுக்கோ" என அவள் கொண்டு வந்த மல்லிகைப்பூவை கவிதாவின் தலையில் சூட்டினாள்."டேய் நீ கிளம்பலையா" என அவனிடம் கேட்க அவள் சொல்லையே காதில் வாங்காமல் அவன் ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கவிதாவை அழைத்துக் கொண்டு கிளம்பும் பொழுது அவனிடம், "வெளில எங்கேயும் சுத்திக்கிட்டு இருக்காம, கதவ சாத்திக்கிட்டு வீட்டுலயே இரு. புரியுதா" அவர்கள் விடைபெற அவன் கதவைச் சாத்திக்கொண்டான்.

--------

கார் கதவைத் திறந்து வெளியே வந்த கவின், அதனைச் சத்தமாக சாத்திவிட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தான்

சித்ரா நாயைத் தூக்கி கொண்டுவந்து வீட்டு வாசலில் ஒரு கோணிப்பையை போட்டு அதன் மேல் படுக்க வைத்தாள். நாய் அவள் கையை நக்கத் தொடங்கியது.அதன் தலையை வருடிக் கொடுத்துவிட்டு உள்ளே சென்று ப்ரீட்ஜிலிருந்து ஒரு கப் பாலை ப்ளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றி அதனருகே வைத்தாள். நாய் சற்று தயங்கி, பின் வேகவேகமாக பாலை குடிக்க தொடங்கியதும், மாடிப்படியேறி சென்றாள். அங்கே பால்கனியில், கவின் விஸ்கி பாட்டிலை ஓபன் செய்து கொண்டிருந்தான்.

-------

மூடியை கழற்றி தன் உடலெங்கும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டான் கவிதாவின் தம்பி. டிவி அருகிலிருந்த தன் குடும்ப புகைப்படத்தை பார்த்தவனுக்கு அழுகையாக வந்தது.அழுகையை விழுங்கி, தன் நாக்கை நன்றாக கடித்துக் கொண்டான்.தீப்பெட்டியை பற்ற வைக்க, உடல் தீயில் பரவியது.

சன்னல் வழியே புகையும், கருகிய வாடையும் வரவே அக்கம்பக்கத்து வீட்டார் தாளிட்ட கதவை தட்ட, ஒருசிலர் சன்னல் வழியே எட்டிப்பார்த்து கத்தத் தொடங்கினர்.

இரண்டு பேர் கடப்பாரை கொண்டு, கதவை உடைக்கும் போது, கவிதாவும், அவள் அம்மாவும் பதறியவாறே வீட்டுக்கு ஓடிவந்தனர்.கதவை உடைத்து உள்ளே சென்ற இரண்டொருவர் கருகிய உடலின் மீது, கோணிப்பையை போர்த்தி, வெளியே தூக்கி கொண்டு வந்தனர். அம்மா உடலைக் கண்டதும் மயக்கமுற்று விழுந்தாள். கவிதா அசைவற்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் சுவாசம் இழுத்துக் கொண்டிருந்தது. அவன் கவிதாவை சைகையால் அழைத்தான். அவள் அவனருகே செல்ல, அவள் காதில் "நா...ன் சொ..ர்க்க..ம் போ..கப் போறேன்.. க்கா" வார்த்தை அடங்கி, உயிர் பிரிந்து, அவன் தலை கவிழ்ந்தது. கவிதா வெடித்து அழுதவாறே, அவன் திறந்திருந்த கண்களையே பார்த்து கொண்டிருந்தாள். அதன் ஓரத்தில் அனலையும் தாண்டி, சிறிது ஈரம் கசிந்திருந்தது. கவிதா மயக்கமுற்று விழுந்திருந்த அம்மாவை எழுப்பத் தொடங்கினாள்

_______

கண் திறந்து பார்த்த போது, கவின் போதையில் நாற்காலியிலே சற்று சாய்ந்தபடியே தூங்கி இருந்தான். எழுந்து அறைக்குள் நுழைந்தான். டைனிங் டேபிளில் அவனுக்கான உணவு மூடி வைக்கப்பட்டிருந்தது.நான்கு சப்பாத்தி, கொஞ்சம் குருமா ஊற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்க, எங்கோ தூரத்தில் நாய் குரைக்கும் சத்தம்.அவனுக்கு திடீரென கோபம் கோபமாக வந்தது. தட்டிலேயே கைகழுவி விட்டு, அறைக்குள் செல்ல, அங்கே சித்ரா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளருகிலிருந்த தலையணையை எடுத்து, கீழே போட்டு, தரையிலேயே படுத்துக் கொண்டான்.மின்விசிறி சடசடப்பில், காற்று அறையை நிரப்பி கொண்டிருந்தது.

_______

வருடிய காற்றில் தலைமுடி பறக்க இருவரும் கடற்கரையிலிருந்து வெளியேறினர். கவின் கவிதாவின் கரங்களை இறுக்க பற்றிக் கொண்டிருந்தான். காரில் இருவரும் ஏறிக் கொண்டனர். கார் சாலையை மிதித்தோட தொடங்கியது.

"சாரி கவின், உங்க மூட ஸ்பாயில் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். நான் பொதுவா என்னோட கஷ்டத்தை யாருகிட்டேயும் ஷேர் பண்ணக்கூடாதுனு நினைக்கிறேன், ஆனா சில சமயம் உணர்ச்சி வசத்துல என்னையே மறந்து.."

"ஸ்டாப்பிட் கவிதா, நீ இந்த மாதிரி பேசறது தான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. உன்னோட சந்தோஷத்துல மட்டுமில்ல, துக்கத்திலேயும் ஒரு பாதியா நான் இருக்கணும்னு தான் விரும்புறேன். அதுதான் உண்மையான காதலும் கூட"

அவள் இறங்கும் இடம் வந்ததும், அவளை வழியனுப்பி விட்டு, காரை கிளப்பியவனின் செல்போன் சிணுங்கியது. அழைப்பில் அவன் அப்பா.

______

அப்பாவிடம் பேசிவிட்டு செல்போனை கட் செய்தான் கவின்.குளியலறையிலிருந்து குளித்துவிட்டு வெளியே வந்தாள் சித்ரா.உடைகளை மாட்டிக் கொண்டு அவனருகே கிடந்த தலையணையில் தலைசாய முயன்றாள்

"சித்ரா ஒரு முக்கியமான விஷயம்"

அவனை ஏறிட்டு பார்த்தாள் சித்ரா

"அப்பாகிட்ட நம்ம விஷயத்தை சொன்னேன் அவர் ரொம்ப ஃபீல் பண்ணார்"

"சரி இப்ப என்கிட்டயிருந்து என்ன எதிர்பாக்கறிங்க கவின்.டைரக்டாவே கேளுங்களேன். டிவர்ஸ் தானே வேணும்"

"ஏன் சித்ரா எப்ப பாரு எடுத்தோம், கவுத்தோம்னு பேசற. உன்னோட கருப்பை பலவீனமா இருக்கறதால தான் நம்மளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர் சொன்னாங்க.அதான், அப்பா தெரிஞ்ச ஃப்ரண்ட்கிட்ட சஜஷன் பண்ணி இருக்காரு.அவரு இதுக்கு ஒரு சொல்யுஷன் சொன்னாரு. அத சொல்லலாம்னு வந்தா, அதுக்குள்ள டிவர்ஸ் வேணுமானு கேக்குற"

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு, அவள்
தொண்டையை கரகரத்துக் கொண்டு

"சரி என்ன சொல்யுஷன் சொல்லுங்க"

"வாடகைத் தாய்"

"வாட்?"அதிர்ச்சியாக

"ஆமா சித்ரா. நம்ம குழந்தைய வேறொரு வயித்துல வளர்க்க போறோம். அவங்களுக்கு சன்மானமா எவ்வளவு வேணுமோ கொடுத்துக்கலாம். சென்னைல இதுக்காக ரெண்டு பேருகிட்ட பேசி இருக்காங்க, அதுல ஒரு பொண்ணு ஓகேனு சொல்லி இருக்கா. நீ என்ன சொல்ற"

சித்ரா மௌனமாக இருக்க

"சித்ரா உன் நிலைமை புரியுது. ஆனா நமக்கு இப்போதைக்கு வேற வழியில்லாம தான் நான் இதுக்கு சம்மதிச்சேன். நீயே கொஞ்சம் யோசி. உன்னை "மலடி மலடி" னு சொல்லி மத்தவங்க கிண்டல் பண்றத விட இது எவ்வளவோ மேல் இல்லையா.நம்ம குடும்பம் மானம் இப்ப உன் முடிவுல தான் சித்ரா இருக்கு.நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லு"

உறங்க சென்றவனை நிறுத்தி

"கவின்"

"என்ன சித்ரா"

"எனக்கு ஓகே தான்"

"தாங்ஸ் சித்ரா. நான் அப்பாகிட்ட பேசறேன். குட் நைட்"

அவன் அறைக்கதவை சாத்திவிட்டு வெளியேச் சென்றான்.

______

கதவைத் திறந்தவாறே உள்நுழைந்த கவிதாவை, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் டாக்டர். கவினுக்கு ஒரு கணம் அதிர்ச்சி பரவியது. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கவிதாவோ கவினிடமிருந்து பார்வையை அகற்றாமலே விழித்துக் கொண்டிருந்தாள். டாக்டர் சில தகவல்களை பேசியபடி இருந்தார். பின் கவிதாவிடம் ஏதோ கேட்க அவள் தனக்கு முழு சம்மதம் எனக் கூறினாள்.

கவின் டாக்டரிடம், "டாக்டர் நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா"

அவர் கவிதாவை பார்க்க, கவிதா அவனோடு வெளியே சென்றாள்

ஒரு சுவர் மறைவாக இருவரும் சென்றனர்.கொஞ்சம் மௌனத்திற்கு பிறகு கவிதாவே,

"எப்படி இருக்கிங்க கவின்"

கண்களில் முட்டிய கண்ணீரோடு "நீ ..நீ எப்படி இருக்க கவிதா"

"இருக்கேன் ஏதோ பேருக்கு வாழ்ந்திட்டு"

"எல்லாத்துக்கும் நான் தானே கவிதா காரணம். உன்கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதியில்லை"

"நீங்க ஊருக்கு போனதுக்கப்பறம் அம்மா உடம்பு முடியாம இறந்துட்டாங்க. அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல. கொஞ்ச நாள் பக்கத்தில கால்சென்டர் வேலைக்கு போயிட்டு இருந்தேன். அப்பா மருத்துவ செலவுக்கு காசு இல்லாம, அங்க இங்க கடன் வாங்கி டீரிட்மென்ட் பண்ணேன்.ஆனா என்ன பண்ணியும் அப்பாவ பொழைக்க வைக்க முடியல. சொந்த பந்தம் அப்பாவோட சாவுக்கு அப்பறம் அவங்க கடமையை முடிச்சிக்கிட்டாங்க. கடன் தொல்லை கழுத்த நெறிக்க, தெரிஞ்ச ஒருத்தர் மூலமா தான் இங்க வந்தேன். ஆனா அது நீங்க தானு எனக்கு தெரியாது கவின்"

"கவிதா, அன்னிக்கு அப்பா என்ன அவசரமா வர சொன்னாருனு கிளம்பினேல, அப்பா ரொம்ப உடம்பு முடியாம இருந்தார். எனக்கு தெரியாம அவர் ஃப்ரண்ட்டோட பொண்ணை எனக்கு சம்மதம் பேசியிருக்காரு. அவரோட உயிர ப்ளாக்மெயிலா வச்சி, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு. ஆனா அப்பறமா தான் தெரிஞ்சது, அவளால குழந்தைய சுமக்கற கருப்பை பலவீனமா இருக்குனு. விதி எங்க சுத்தியும் உன்கிட்ட தான் என்னை கொண்டு வந்து சேர்த்திருக்கு. நீ நல்லா வாழணும் கவிதா. உனக்கு வேண்டியதெல்லாம் நான் பண்ணுறேன். நீ கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தமா நான் அதையாவது உனக்கு பண்றேன்"

"நீங்க தெரிஞ்சே பாவம் பண்ணலையே கவின். சில நேரம் நம்மளையும் மீறி, சில விஷயம் வாழ்க்கையில எதிர்பாராதவிதமா நடந்திடுது. அதுல ஒன்னு தான் உங்க கல்யாணம்.நான் உங்கள கல்யாணம் பண்ணி, உங்க மனைவியா குழந்தைய சுமக்க நினைச்சேன். ஆனா கடவுள் வேறுவிதமாக முடிவு பண்ணி வச்சிட்டான்"

"நான் இப்பவும் சொல்றேன் கவிதா. நீ நல்லா வாழ வேண்டியவ.ஏற்கனவே உனக்கு பண்ண பாவத்துலயிருத்து நான் மீழ முடியாம இருக்கேன். இதுல என் குழந்தைக்கு வாடகை தாயா உன்ன  இருக்க சொல்றது, பாவத்துலேயும் பாவம் கவிதா"

"நான் முடிவு பண்ணிட்டேன் கவின். எனக்கு நீங்க எதாவது உதவி பண்ண நினைச்சா, இதுக்கு நீங்க சம்மதிங்க அதுவே போதும்"

"கவிதா நான் சொல்றதை கேளு"

"நாம போலாம் கவின், ரொம்ப நேரமாவது"

இருவரும் உள்ளே செல்ல, அங்கே டாக்டர் மட்டுமிருக்க, சித்ராவை காணவில்லை

"டாக்டர் சித்ரா எங்க"

"என்ன கவின் சொல்றிங்க, உங்க பின்னாடி தானே வந்தாங்க"

இருவரும் அதிர்ச்சியாக டாக்டரைப் பார்க்க, அப்போது கவினின் செல்போன் அதிர்ந்தது.

"எங்கயிருக்க சித்ரா"

"கவின் நீயும், கவிதாவும் பேசறத உங்களுக்கு தெரியாமலே நான் கேட்டுட்டேன். இனி உங்களுக்கு குறுக்கா இருக்க விருப்பமில்லாம நான் கிளம்பறேன். நீங்க கவிதாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு, நீங்க விரும்பினமாதிரியே சந்தோஷமா வாழுங்க. என்ன எங்கேயும் தேடாதிங்க. நான் நீங்க தேடியும் கிடைக்காத தூரத்த நோக்கி போயிட்டிருக்கேன்"

"சித்ரா.. சித்ரா.. நான் சொல்றத கேளு" பதட்டமாக

"பாய் கவின். உங்க மேரேஜ்க்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்" மொபைல் கட் ஆகியது

கார் விபத்தில் சித்ரா மரணமடைய, கவினுக்கு, கவிதாவுடன் மறுமணம் நடந்தது.

முற்றும்.

எழுதியவர் : S.Ra (10-Jul-20, 12:03 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : sulal
பார்வை : 126

மேலே