20 அவளுடன் பேசும்போது

_________======_______

திங்கள் 21, 2019 காலை 9.30.

ஹோட்டலில் டிஃபன் வாங்கிக்கொண்டு அவள் வீட்டுக்கு சென்றேன். அப்போது அவள் முழு சோர்வில் இருந்தாள்.

ஏதேனும் சாப்பிட்டாயா?

இல்லை.

இதை சாப்பிடு...

உங்களுக்கு?

ஹார்லிக்ஸ் போதும். அதுவும் பிறகு...

குட்டிகளை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குள் நுழைந்து அமர்ந்து கொண்டேன். சற்று நேரத்தில் அங்கு அவள் ஹார்லிக்ஸோடு வந்தாள்.

வாங்கி குடித்துக்கொண்டே பேசாது இருந்தேன்.

பேசுங்கள் ஸ்பரி...

நீதான் பேச வேண்டும்...

நான் விடிந்த காலையில் அனைத்தும் எழுதி விட்டேன் முழுக்கவும் உங்களுக்கு.

அது உன் வெற்றிகள் பற்றியது. உன் பயணத்தில் நீ கொண்ட வெற்றி... நான் கேட்பது உன் தோல்விகள் பற்றி.

"ஸ்பரி... நேற்றைய அவஸ்தைகள் எனது வெற்றியா?"

ஆம்.

பின் தோல்விகள் என்றால்?

"அது உன்னிடம் இருக்கும். அது நீ தேட வேண்டிய நிச்சயமான கருப்பொருள். பெண்களின் தோல்விகள் மீன்கள் போன்றது. அது விசித்திரமாய் தரையில் கூட வாழும். நீரிலும் நிலத்திலும் மரணமில்லாத மீன்கள் என்றால் அது பெண்களின் மனம்."

என் தோல்வியை நான் எப்படி காண்பது? நேற்றைய நிகழ்வுக்கும் இந்த கேள்விக்கும் என்ன தொடர்பு...

எந்த ஒன்றிலும் தொடர்பு இல்லாத முடிவுதான் தோல்வி... புரிகிறதா?

இல்லை.

வெற்றியை போல் நாம் தோல்வியை கொண்டாடுவது இல்லை. இந்த இல்லைகள் நம்மை அலைக்கழிக்கிறது. அதை நாம் அனாதை போல் நம்முள் மறைத்து வைத்து கொள்கிறோம். அறிவிக்கப்படாத அந்த குழந்தை ஒரு சமயத்தில் மூர்க்கம் கொள்கிறது.

ஆனால் நேற்று நான் சுயம் இழந்தேன் ஸ்பரி...

அது ஏன் உன்னை உணர்ந்ததாக கொள்ள முடியாது? உன்னைப்பற்றிய ஒரு நிஜமாக அது ஏன் இருக்க கூடாது?

நான் மிகவும் பயந்து விட்டேன். உங்களை கூட வெறுத்த பார்வையில் சந்தித்தேன்.

குட்டிகளை நினைத்தாயா? அவைகளை வெறுக்க முடிகிறதா?

என்னால் ஒருபோதும் என் குழந்தைகளை வெறுக்க முடியாது.

அதுதான் உன் தோல்வி.

புரியவில்லை ஸ்பரி..

உன் உலகத்தில் சிலர் உண்டு. அந்த சிலர் மட்டுமே உன்னை வெறுத்தாலும் உன்னால் அவர்களை நேசிக்க மட்டுமே முடியும்.

இப்படியே வாழ்வை கிழித்து இஷ்டம் போல ஒட்டிக்கொள்ள முடியுமா ஸ்பரி?

ஆனால் சம்பவங்களை நீ மனதளவில் திருத்திக்கொண்டே இருக்கிறாய். அதுவும் முடிந்து விட்ட சம்பவங்களை... அந்த காட்சிகள் எப்போதும் உன்னை நெருடுகின்றன. வாட்டுகின்றன.

"என் நிகழ்காலத்தில் இருப்பதும் தெரிவதும் வெறும் சம்பவமா? அது இயங்கி கொண்டிருக்கும் நிகழ்ச்சியோ அல்லது சவாலாகவோ மட்டும்தான் என்னால் உணர முடியும்"

"இந்த 'முடியும்' என்பதுதான் உனது மாயை."

நான் முடிந்த அளவு வாழ்க்கைக்கு வெளியில் இருக்கிறேன்..

உன் வாழ்க்கை இன்னும் உனக்குள் இருக்கிறது. உனக்கும் பசி தூக்கம் நோய் ஆரோக்கியம் எல்லாம் உண்டு. குளிரையும் உஷ்ணத்தையும் நிரம்ப புரிந்து கொள்ளும் பக்குவம் உண்டு.

அப்படியெனில் நேற்று போல் மீண்டும் நான் துவண்டு விடுவது அடிக்கடி வருமே ஸ்பரி? நான் இதனில் மீள வேண்டும்.

மீள்வது குறித்து நீ ஆய்வு செய்ய முடியாது. அது தேவையும் அற்றது. அதுவே காலப்போக்கில் உன்னிடமிருந்து விலகிவிடும்.

நீ சந்தோசமாய் தயாரித்து வண்ணங்கள், படங்கள் தைத்து விளையாடிய பட்டம் ஒன்று அறுந்து போய் உன் கண்ணெதிரிலேயே மறைந்தும் போயிற்று. உணர்ச்சியற்ற அந்த காகிதம் உன்னை முடிந்த அளவில் உணர்ச்சி பொங்க வைத்து விட்டது.
தொலைந்து போன பட்டம் உன் மனதில் சிதிலங்களை உண்டாக்கி விட்டது. அதை உன்னால் ஏற்க முடியாமல் முடிந்தளவு தடுமாறுகிறாய். ஏங்குகிறாய். பரிதவிப்பில் முயங்கி அலைபாய்கிறாய் என்கிறேன்.

இப்போது புரிகிறது ஸ்பரி...

பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டாள். கைகளை இறுக்க பிடித்துக்கொண்டாள்.

"ஸ்பரி... எனக்கு நான் என்ன செய்து கொள்ள வேண்டும். சொல்லுங்கள் செய்கிறேன்".

நீ இப்பொழுது செய்ய வேண்டியது ஒன்றுதான்.

சொல்லுங்கள்.

இந்தா...

என்னது இது?

ஆழப்புழை டூர் டிக்கெட்... உனக்கும் என் அம்மாவுக்கும்.மூன்று நாட்கள் போய் வாருங்கள். குட்டிகளை நான் பார்த்து கொள்கிறேன்.

அவள் கண்ணில் திரண்டிருந்த ண்ணீரை துடைத்தேன்.


______======_____=====

எழுதியவர் : ஸ்பரிசன் (13-Jul-20, 4:23 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 31

மேலே