பொறாமை கொள்ளுவார் தம்மை தள்ளுவார் வெந்நரகில் தான் - பொறாமை, தருமதீபிகை 625

நேரிசை வெண்பா

பிறனொருவன் ஆக்கம் பெறினதனை நோக்கி
உறமகிழ்வு கொள்ளா(து) உளத்தே – பொறாமைமேல்
கொள்ளுவார் அந்தோ குடிகேடர் தம்மையே
தள்ளுவார் வெந்நரகில் தான். 625

- பொறாமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறனுடைய ஆக்கத்தை நோக்கி மகிழ்ந்து கொள்ளாமல் உள்ளம் புழுங்கி உழல்வது பொல்லாத இழிவாம், அந்த மனப்புன்மையுடையார் குடிகேடராகி அடியோடழிந்து முடிவில் கொடிய நரகில் வீழ்ந்து வருந்துவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உள்ளம் அமைதியாய்ப் பழகிவரின் அந்த மனித வாழ்வு உயர் மகிமையாய் வளர்ந்து வருகிறது. அது அல்லல் உழந்து அலையும் பொழுது எல்லாம் துயரங்களாய் இடர் மிகுந்து படுகின்றன. சுகம் விளைவதைத் துக்கமாக்குவது மிக்க கேடாகின்றது.

மனஅமைதி இனிமை சுரந்து இன்பம் புரிகின்றது; அது கலங்க நேரின் கடுந் துன்பம் ஆகின்றது. கண்ணில் மண் விழுந்து கலங்கிய பொழுது பார்வை குன்றிப் படுதுயர் நேர்தல் போல் மனத்தில் பொறாமை புகுந்து கலங்கிய போது மதி மருண்டு அழிதுயர் மிகுகின்றது. தீய நினைவுகளால் தீங்கே வருதலால் அந்த மனித வாழ்வு எவ்வழியும் வீணான துன்பங்களாய் விரிந்து நிற்கின்றன. ’அகம் கெடச் சுகம் கெடும்’ என்பது பழமொழி.

எல்லாரும் நன்றாயிருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற மனம் புண்ணியமுடையதாய்ப் புகழ் இன்பங்கள் பெறுகின்றன. அல்லாத மனம் நல்ல பலன்களைக் காணாமல் நலிந்து படுகின்றது. நலிவும் மெலிவும் வாழ்வை நாசம் செய்கின்றன.

பிறர்க்கு இதம் கருதுகின்றவன் பெரியவனாய் உயர்கின்றான், அகிதம் எண்ணுகின்றவன் அற்பனாயிழிகின்றான். எண்ணம் புன்மையாயிழிந்த போது மனிதன் புல்லியனாய் அழிகின்றான்,

அயலவர் உயர்வை நோக்கி மகிழ்வது சிறந்த பெருந்தன்மையாம்; இகழ்வது அற்பரது இழிபுன்மையாம். செயல் இயல்களின் படியே உயர்வும் இழிவும் உளவாகின்றன.

நேரிசை வெண்பா

பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும்
சிறியோர் பொறாத திறமும் – அறிவுறீஇச்
செங்கமலம் மெய்மலர்ந்த தேங்குமுதம் மெய்அயர்ந்த
பொங்கொளியோன் வீறெய்தும் போது, - தண்டியலங்காரம்

சூரியன் எழுச்சி கண்டு தாமரை மலர்ந்தது; குமுதம் குவிந்தது; பிறர் உயர்வு கண்டால் பெரியார் மகிழ்வர், சிறியார் பொறாமல் இகழ்வர் என்பதை அவை முறையே உணர்த்தி நின்றன என்னும் இது சிந்திக்கத் தக்கது.

இயற்கை நிகழ்ச்சிகளை இதமாய் எடுத்துக் காட்டிப் பொறாமைப்படுவது அற்பர் செயல் எனக் கவி இவ்வாறு அறிவுறுத்தியிருக்கிறார், புத்தி போதனைகள் உய்த்துணர உரியன.

அழிதுயர் செய்யும் பழி, தீமை ஆகிய பொறாமை சிறிதும் புகாதபடி உன் உள்ளத்தைப் பேணி உறுதி சூழ்ந்து ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jul-20, 7:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே