மரணத்தின் பிடியில்

மோகன் ஒரு பெரிய பிசினஸ் புள்ளி. ஆனால் கொஞ்ச நாளாக பிசினெஸ் கொஞ்சம் டல்லாக போய்க் கொண்டிருக்கிறது. அவர் பணக்காரராக இருந்த வரை, அவரை சுற்றி எல்லோரும் கும்மி அடித்துக்கொண்டிருந்தனர். அவர் இப்போது பணத்தட்டுபாட்டில் வாடும் போது, அவரை சுற்றி இருந்த காக்கைகள் பறந்து போய் விட்டன.. அவரது எழுவது வயது முதிர்ச்சி, நோய் காரணமாக , இப்போது அவரால் முன் போல் அலையவும் முடியவில்லை .

அவரது மனைவியே அவரை உதாசீனப் படுத்தினாள். அவர் செல்வாக்குடன் இருந்த போது, அவரை கொஞ்சிக் கொண்டிருந்த மகனும், மகள்களும், எங்கே வந்து தங்களுடன் ஒட்டிக் கொள்வாரோ என்று பயந்து இப்போது காணாமல் போய்விட்டனர். இவரை திரும்பி கூட பார்ப்பதில்லை.

அவர் நல்ல நிலையில் இருந்த போது, “ என்னங்க ! இன்னும் இரண்டு இட்டிலி வெச்சிக்கோங்க ! இப்படி கோழி சாப்பிடறா மாதிரி, அறக்க பறக்க தின்னு விட்டு, வேலை வேலைன்னு அலைஞ்சால், உடம்பு என்னத்துக்கு ஆகும்? என்று கொஞ்சிய மனைவி, இன்று நாராய் , மரக் கட்டையாய் இருக்கும்போது கண்டு கொள்ளவே இல்லை. எப்போது மோகன் மண்டையை போடுவார்?, சொத்தை பிரித்துக் கொள்ளலாம் என்றே மனைவியும், மக்களும் காத்துக் கொண்டிருந்தனர்.

அவருக்கு இப்போது சிறுநீரக கோளாறு. சீரியஸ். இரண்டு கிட்னியும் வேலை செய்ய வில்லை. பிழைப்பது கடினம். எழுபது வயதை தாண்டினாலே, உடல் உபாதைகள்ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும், உறவுகள் வெட்டிக்கொள்ளும் தானே. !டாக்டர்களும் அவரை கை விட்டு விட்டனர். இருக்கும் வரை இருக்கட்டும் என அவரை வீட்டிற்கே அனுப்பி விட்டனர்.

மோகன் படுக்கையில் வலியால் துடித்தார். ‘நாராயணா’ என்று அரற்றினார். அது அவர் வழக்கம். ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். சிலர் குடிக்கு அடிமை. சிலர் சிகரெட்டுக்கு ! சிலர் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் . அதுபோல, மோகன் , சந்தோஷம் வந்தாலும், அவர் சொல்வது ‘நாராயணா’ தான். துக்கம் வந்தாலும் நாராயணா தான்! . நண்பர் கடி ஜோக் சொன்னாலும் , சிரித்துக்கொண்டே அவர் சொல்லும் வார்த்தை “நாராயணா நாராயணா” தான்.

இப்போது, தனியே அறையில், நோயின் வாட்டத்தில் படுத்துக் கொண்டிருக்கையிலே, அவரது நினைவு பழைய காலத்திற்கு சென்றது. தான் சிறியவனாக இருந்த போது, விளையாட்டு வேடிக்கையில் கவனம் இருந்தது. பின்னர் வாலிப பருவம் வந்த போது பெண்கள் பின்னால் அலைந்தார். பின்னர் கல்யாணமாகி குழந்தை குட்டிகள் என ஆன பிறகு, காசு, செல்வம் சேர்க்க ஓடினார். இன்றோ முதியவர் ஆனபிறகு ,நோய் நொடியினால், தன் இயலாமையை எண்ணி , நடந்ததை எண்ணி உருகுகிறார் !
என்றாவது , இது வரை எந்த கால கட்டத்திலாவது , இறைவனை நினைத்து பார்த்தோமா ? இன்று, அந்த கடந்த நாளை நினைத்து, வருந்தி என்ன பயன் ? இறந்த காலம் மீண்டும் வருமா என்ன?

மோகன் மனத்தில் தோன்றியது ““வலிமை இழந்த இந்த உடல் சக்கையானது. பற்களை இழந்த வாய் பொக்கையானது, இன்று முதியவர் ஆனேன் ! யாருமில்லை எனக்கு ! வாழ்க்கையின் முடிவில் நான் நிறைவேறா ஆசைகள் நெஞ்சத்தில் பிடித்து” என்ன செய்வேன்? “ நாராயணா நாராயணா“ என்று கதறினார். ஆனாலும் என்ன பயன் ? உடலில் வலு இருக்கும் போது, கையில் காசு இருக்கும் போது, நல்ல காரியங்களை செய்யாமல், இன்று வருந்தி என்ன பிரயோசனம் ? செல்வந்தனாய்நான் இருக்கும் வரைக்கும் சுற்றமும் நட்பும் அன்பால் என்னை அணைக்கும்! உயிரை உடலை மரணம் பிரிக்கும் உடனே பிணமென உறவுகள் எரிக்கும். இதுதானே நிஜம் (பஜகோவிந்தம்- ஆதி சங்கரர்)


இதை தெரிந்து தானே திருமங்கை ஆழ்வார் அன்றே சொன்னார்

: முற்ற மூத்து கோல் துணையா* முன் அடி நோக்கி வளைந்து*
இற்ற கால் போல் தள்ளி மெள்ள* இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்* வதரி வணங்குதுமே.-


‘‘ஏ, நெஞ்சே, உடலில் வலு இருக்கும்போதே வதரி (பத்ரி) க்ஷேத்திரம் நோக்கிப் புறப்பட்டுவிடு. இளவயதில் உடல்நலம் நன்றாயிருக்கும், வருமானமும் இருக்கும் ஏன், நேரம்கூட உன் வசமிருக்கும். ஆகவே அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வதரி சென்று எம்பெருமானைத் தரிசித்துவிடு. அப்படிச் செய்யாமல், தள்ளிப் போட்டுக்கொண்டே போய், ‘பின்னால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று இந்தப் பயணத்தை ஒத்தி வைத்தால், மிகவும் முதுமை அடையும் காலத்தில் இது சாத்தியமாகாது.

ஊன்றுகோல் ஆதாரத்துடன்தான் நடக்கவே முடியும் என்ற இயலாமையுடன், பார்வையும் மங்கிவிடுவதால், அடுத்து எடுத்து வைக்கவேண்டிய அடியை, முன்னால் குனிந்து, கூர்ந்து பார்த்து மிகவும் எச்சரிக்கையாக நடக்க முற்படும் தள்ளாமையுடன், கால் முறிந்து விட்டதோ என்று தோற்றுவிக்கும் மேற்கொண்டு நகர முடியாத அச்சத்துடன், பத்தடி நடப்பதற்குள் சோர்ந்துபோய், அமர்ந்து ஓய்வெடுக்கச் சொல்லும் களைப்புடன் ஆட்டிப் படைக்கும் முதுமையச் சந்திப்பதற்கு முன்னாலேயே வதரி சென்று எம்பெருமானை தரிசித்துவிடு. “ என்றார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு மாத நோயின் தாக்கத்திற்கு பிறகு , மோகனின் உயிர் அவர் உடலை விட்டு பிரிந்தது.
****************************************************

யம தூதர்கள் மோகனின் உயிரை யம லோகத்திற்கு எடுத்துசெல்ல வாசலில் வந்து நின்றனர். அதே சமயம் , விஷ்ணு தூதர்களும் , அங்கே வந்து, “ மோகன் உயிர் எங்களுடன் வைகுண்டம் தான் வர வேண்டும் என்று தர்க்கம் செய்தனர். வாக்குவாதம் இருவரிடையே ஆனது.

யம தூதர் : “மோகன் நிறைய பாபங்கள் செய்தவன். இவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் . இவன் எங்களுடன் தான் வரவேண்டும் “.
விஷ்ணு தூதர்: “இவன் நாராயணா நாராயணா என்று பல முறை சொன்னவன். எனவே இவன் நாராயண பக்தன். அதனால், எங்களுக்கு தான் அவன் உயிர் சொந்தம்.”

யம தூதர்: “அதெப்படி, இறக்கும் போது, அவன் நினைவே அவனுக்கு இல்லையே. அப்படி இருக்கையில் அவன் எப்படி உங்களுக்கு சொந்தம்?”
விஷ்ணு தூதர்: “அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இது நாராயணின் ஆணை. வேண்டுமெனில் , நீங்கள், யமனிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எப்போது மோகன் பகவான் நாமத்தைச் சொன்னானோ, அப்போதே அவன் பாவம் தொலைந்தது”

இறுதியில் வென்றனர் விஷ்ணு தூதர்கள். .சடுதியில் நற்கதி அடைந்தான் மோகன் !!.
யம தூதர், யமனிடம் புகார் கொடுக்க சென்றனர்..

யமன் சொன்னான் . “ கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் .யார் காதிலாவது விழப் போகிறது ! விண்ணப்பித்த கிங்கரரிடம் கூறினான் யமன், “ இனி விஷ்ணு பக்தரை எப்போதும் அணுக வேண்டாம். நெருப்பு, சருகுகளை எரிப்பது போலும்,மருந்து, நோய்களை அழிப்பது போலும், நாராயணனின் நாமம், நவின்றவர்களின் நூறாயிரம் பாவங்களை அழித்துவிடும்!”என்றான்.

****
கதையை சொல்லி முடித்தான் விஷ்வா. எனக்கு ஒன்று புரியவில்லை. “அதெப்படி விஷ்வா ? பழக்க தோஷத்தாலேமட்டும், , தினம் எதற்கும் “நாராயணா நாராயணா” என்று சொன்னான் மோகன். இறக்கும் போது அவன் நினைவே அவனுக்கில்லை. அப்படியிருக்கையில், நாராயணனை எப்படி நினைத்திருக்க முடியும் ? எப்படி அவன் பாவங்கள் தொலைந்து மோக்ஷம் போய் சேர்ந்தான்? இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லையே”

விஷ்வா சொன்னான். “ சரியாக கேட்டாய் கோபி ! இதைத்தான் , வைஷ்ண நெறியை மக்கள் நெறியாக்கிய ராமனுஜர், காஞ்சிபுரம் வரத பெருமாளிடம், திர்க்கச்சி நம்பிகள் மூலமாக கேட்டார் “ இறக்கும்போது, நாராயணா , உன் நினைவு தேவையா ?


அதற்கு வரத ராஜ பெருமாள் சொன்னது . ”அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம்”. அந்திம காலத்தில் ஸ்ம்ருதி (என் நினைவு ) இருக்க வேண்டியதில்லை. என்னிடம் , சரணமடைந்தவன் ஆக்கை முடிவில் நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை.”

இதையே திருமங்கையாழ்வார் , நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடி அருளியிருக்கிறார்.. “குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்* நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்* வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்* நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.”. மோகனுக்கு மோட்சம் தந்தது அவன் வாழ் நாள் முழுக்க நாராயண என்னும் நாமத்தை தெரிந்தோ , தெரியாமலோ சொன்னது தான்.


“எனக்கு இன்னும் புரியவில்லை விஷ்வா!” என்றான் கோபி.. :அதெப்படி, இறைவன் நாமத்தை சொல்வதால் மட்டும் ஒருவன் உயரிய நிலைக்கு போக முடியும் ?”

விஷ்வா சிரித்தான். உனக்கு ஒன்று தெரியுமா? ஒரு முறை இதே கேள்வியைத்தான் நாரதரும் விஷ்ணுவிடம் கேட்டார் .அதற்கு நாராயணன் சொன்ன பதில் என்ன தெரியமா?

நாரதர்: பிரபு! ஆனால், ஒரு சந்தேகம். பிரபுவின் நாமத்தைச் சொல்வதனால் என்ன பலன் கிடைக்கும்?

நாராயணர்: நீ நாமஸ்மரணம் செய்கிறாய்; ஆனால், அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வில்லையே. பலன் என்னவென்று அங்கு உட்கார்ந்திருக்கும் காகத்திடம் கேள்.
உடனடியாக, நாரதர் காகத்திடம், “நாராயணா என்னும் நாமத்தை ஜபிப்பதனால் என்ன பலன்?” என்று கேட்க, நாராயணா என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, காகம் இறந்து விட்டது. நாரதர் அதிர்ந்து போய் நாராயணரிடம் ஓடிச் சென்று, “பிரபு என்ன இது? நான் அந்த காகத்திடம் கேட்டேன். அது உடனே கீழே விழுந்து இறந்தது. இது தான் பலனா?” என்றார்.

நாராயணர்: நாரதா, உண்மையை அறிய வேண்டுமென்றால் ஒழுங்கான முறையில் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். அங்கு ஒரு ஏழை அந்தணரின் வீடு உள்ளது;

அங்கு கூண்டில், அழகான பச்சை நிறத்தில் சிவப்பு அலகுடன் ஒரு கிளி இருக்கும். அதனிடம் சென்று கேட்டுப் பார்.

உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் நாரதர் கிளியிடம், “நாராயணா என்னும் நாமத்தை ஜபிப்பதனால் என்ன பலன்?” என்று கேட்டார். உடனே கிளியும், கீழே விழுந்து உயிரை விட்டது. நாரதர், பதட்டத்தில் நாராயணரிடம் ஓடிச் சென்றார்.

நாரதர்: நான் அந்தக் கிளியிடம் கேட்டேன். அதுவும் கீழே விழுந்து இறந்தது. இது தான் கிடைக்கும் பலனா?
நாராயணர்: உண்மையை உணரும் வரை மன உறுதி வேண்டும். அதே அந்தணரின் வீட்டில் இப்பொழுதான் ஒரு பசுங்கன்று பிறந்துள்ளது. அதைப் போய் கேள்.

நாரதர் கன்றுக்குட்டியிடம் சென்று நாராயண மந்திரத்தின் மகிமையைக் கேட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த கன்றின் உயிர் உடனே பிரிந்தது. நாரதர் பதட்டத்துடன் நாராயணரிடம் ஓடி வந்தார்.

நாரதர்: உண்மை தெரியும் வரை நான் இந்த விஷயத்தை விடப் போவதில்லை. பிரபு! கன்றும் விழுந்து இறந்தது. இது தான் பலனா?

நாராயணர்: அவசரப்படாதே நாரதா. ”பதறிய காரியம் சிதறிப் போகும்”. அதுவே கவலைக்கு வழி வகுக்கும். அதனால் பொறுமையாக இரு. இந்த நாட்டை ஆளும் அரசனுக்கு நேற்று தான் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தையிடம் சென்று கேட்டுப் பார்.

நாரதர் பயத்துடன், “குழந்தை இறந்தால், அரண்மனையில் இருக்கும் காவலர்கள் என்னைக் கைது செய்வார்கள். நான் இறந்து போவேன். இது தான் பலனா” என்றார்.

நாராயணர்: அவசரப்படாதே. அந்தக் குழந்தையிடம் சென்று கேட்டுப் பார்.
நாரதர் அரசனிடம் சென்று குழந்தையைக் காண வேண்டும் என்று கேட்டார். ஒரு தங்கத் தட்டில் குழந்தையை எடுத்து வந்தார்கள். “அரசரே! குழந்தையிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என நாரதர் கேட்டார். அரசரும் சம்மதித்தார்.

நாரதர்: நாராயணரின் நாமம் ஜபிப்பதனால் என்ன பலன்?

இதைக் கேட்டவுடன் குழந்தை (இளவரசன்) பேச ஆரம்பித்தான்.

இளவரசன்: “நாரத முனிவரே! இதுதான் நீங்கள் இதுவரை கற்றதா? நாள் முழுவதும் நாராயண மந்திரத்தை உச்சரித்தும் அதன் சுவை அறியாமல் இருக்கிறீர்கள். முதலில் நான் ஒரு காகமாக இருந்தேன். நீங்கள் என்னிடம் வந்து நாராயண மந்திரத்தின் பலன் பற்றிக் கேட்டீர்கள். உடனே நான் பிறவிப்பயனை முழுமையாக அடைந்து, அந்தப் பிறவியை முடித்துக் கொண்டேன். பிறகு கிளியாகப் பிறந்தேன். காக்கையின் இடம் எங்கே? கிளியின் இடம் எங்கே? கிளி கூண்டில் வைத்து கவனத்துடன் பராமரிக்கப்பட்டது.

நீங்கள் மீண்டும் என்னிடம் வந்து அதே நாராயண நாமத்தைச் சொல்லி சந்தேகம் கேட்டீர்கள். உடனே நான் உயிர் துறந்து, கன்றுக் குட்டியாகப் பிறந்தேன். இது கிளியைவிட உயர்ந்த பிறப்பு. பரதகண்டத்தில் பசுவை தெய்வமாக வழிபடுகிறார்கள். மீண்டும் தங்கள் மூலம் நாராயணர் பெயரைக் கேட்டு, பிறவி முடிந்து, இப்பொழுது அரசகுமாரனாகப் பிறந்துள்ளேன். காகம், கிளி, கன்றுக்குட்டி எங்கே? அரசிளங்குமரன் எங்கே? கடவுள் நாமத்தைச் சொல்வதால் வாழ்வில் நம் நிலை மேலோங்கி இருக்கிறது. இப்பொழுது நான் அரசகுமாரன். இது என்னுடைய கொடுப்பினை.!
நாராயண நாமத்தின் பலன் இதுதான்” என்றான்.


எனவே கோபி, இன்று, இதை நீ மனதில் கொண்டு , உன்னுடைய தியானத்தில் நாராயணா என்னும் நாமத்தின் மகிமையில் மனதை செலுத்து. !! நாராயணா என்று சொல்." என்று முடித்தான் விஷ்வா. .


* முற்றும்

courtesy : Bhaja Govindam, Google, Upanishad, Nalayira Divya Prabandham

எழுதியவர் : முரளி (17-Jul-20, 8:58 am)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : maranthin pidiyil
பார்வை : 210

மேலே