ஏனோ தலையிறைஞ்சினீர்
திருவிரிஞ்சி நகருக்கு இறைவனான சிவபெருமானைப் போற்றியது இது. பெருமான் தலைகவிழ்ந்தவரா யிருப்பது பற்றிக் கவிஞர் அவரை இவ்வாறு வினவுகிறார். தலை கவிழ்வது அவமானத்தினாலேதான் என்பவர். அது எதனால் வந்துற்றது? எனவும் கேட்கிறார்.
நேரிசை வெண்பா
வேண்டிய சைவனார் விட்டதூ துக்கோமுன்
பாண்டியனார் கையிலடி பட்டதற்கோ - ஆண்டவரே
வானோர் புகழ்விரிஞ்சை மார்க்க சகாயரே
ஏனோ தலையிறைஞ்சி னீர். 159
- கவி காளமேகம்
பொருளுரை:
“எனை ஆண்டுகொண்ட பெருமானே! தேவர்களும் வந்து போற்றும் திருவிரிஞ்சை நகரிலே கோயில் கொண்டிருக்கும் மார்க்க சகாயனே! உமக்கு வேண்டிய சைவரான சுந்தரர் அனுப்பி வைத்த தூதுக்காகவோ? அன்றி முன்காலத்திலே பாண்டியனின் கைப்பிரம்பினால் அடி பட்டதற்காகவோ? அன்றி வேறு எதனாலோ நீர் இப்படித் தலை கவிழ்ந்து இருக்கின்றீர்!"