பொறாமையெனும் புன்பேய்வாய்ப் பட்டவர் - பொறாமை, தருமதீபிகை 626

நேரிசை வெண்பா

பொல்லாப் பொறாமையெனும் புன்பேய்வாய்ப் பட்டவர்தாம்
சொல்லாத வன்சொலெலாம் சொல்லுவார் – கொல்ல
முடிந்தால் அதுவும் முடிப்பார்; முடிந்து
கெடுவார்பின் என்செய்யார் கேடு. 626

- பொறாமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொறாமை என்னும் கொடிய பேய்வாய்ப்பட்டவர் நெடிய பழிமொழிகளைப் பேசி அழிதுயரங்களையே செய்வர்; பழியான கொலையையும் துணிந்து புரிவர்; கேடே புரியும் அக்கொடியவர் அடியோடு கெட்டே ஒழிவர்; பின் என்னவிதமான கேடுகளெல்லாம் செய்யாமல் விடுவார்? என்கிறார் கவிராஜ பண்டிதர்.

புலைக் கேடுகளை எல்லாம் பொறாமை விளைக்கும் என இது உணர்த்தியுள்ளது. அதன் கொடுமை தெரிய கொலையைக் குறித்தது.

மனிதனிடமிருந்து வெளியே நிகழும் கொடிய செயல்களுக்கும், கடிய மொழிகளுக்கும் மூல காரணம் உள்ளத்தில் உறைந்துள்ளது. மனம் கேடாய்த் திரிந்தபொழுது அந்த மனிதன் கெட்டவனாய் இழிந்து நிற்கின்றான். சொல்லும் செயலும் உள்ளத்தின்படியே வருதலால் அவை மனிதனை அளந்து காணுதற்குத் தெளிந்த கருவிகளாய் அமைந்து நிற்கின்றன.

பொறாமை நெஞ்சில் ஊறிய பொழுது நஞ்சு தோய்ந்த குட்டம் போல் அந்த மனிதன் நீசமாய் நாசநிலையை அடைந்து, அவலங்கள் பெருகி ஆடல்கள் புரிகின்றன.

தன்னையுடையானை எல்லா வழிகளிலும் புல்லியன் ஆக்கிப் புலைப்படுத்தி வருதல் கருதி பொல்லாப் பொறாமை என்றது. புறங்கூறல், பழிமொழியாடல் முதலிய இழிவுகள் எல்லாம் பொறாமையிலிருந்தே விளைந்து வருகின்றன. அயலாருடைய உயர் நிலைகளைக் காணச் சகியாத அவலமுடையதாதலால் பொறாமை எப்பொழுதும் வெப்போடு வெய்ய துயரங்களையே விளைத்து வருகின்றது. பொறாமை யாளனுடைய முகமும் பேச்சும் இழிவுபடிந்து யாண்டும் ஈனமே புரிகின்றன.

நிலைமண்டில ஆசிரியப்பா

அழுக்கா றுடையோன் அவிநயம் உரைப்பின்
இழுக்கொடு புணர்ந்த இசைபொரு ளுடைமையும்
கூம்பிய வாயும் கோடிய உரையும்
ஒம்பாது விதிர்க்கும் கைவகை உடைமையும்
ஆரணங் காகிய வெகுளி உடைமையும்
காரணம் இன்றி மெலிந்தமுகம் உடைமையும்
மெலிவொடு புணர்ந்த இடும்பையும் மேவாப்
பொலியும் என்ப பொருந்துமொழிப் புலவரே - அவிநயம்

அவிநயம் என்பது கிபி 9 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கண நூல் ஆகும். இதனைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு நூல் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த நூல் அவிநாயனார் என்று அறியப்படும் புலவரால் எழுதப்பட்டது. இந்தப் புலவரின் பெயர் அவிநயம் என்னும் நூல் எழுதியதால் உருவாக்கப்பட்டதாக எண்ண இடம் தருகிறது.

தொல்காப்பியம், இறையனார் களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நன்னூல், களவியற் காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு பாட்டியல் என்னும் நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநூல் மேற்கோள்களிலிருந்து திரட்டப்பட்டவை. இதனை முதன்முதலில் திரட்டியவர் மயிலை சீனி வேங்கடசாமி.

இந்த நூலுக்கு இராச பவித்திரப் பல்லவதரையன் என்ற உரையாசிரியர் உரை எழுதி உள்ளார்.

அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல் எனவும் இதனைப் பகுத்துக் காட்டியுள்ளனர்.)

பொறாமையுடையவனது மெய்ப்பாடுகளைக் குறித்து இது விளக்கியுள்ளது. கூம்பியவாய், கோடிய உரை, மெலிந்தமுகம் என்றதனால் பொறாமையாளனது நிலை எவ்வளவு இழிகேடுடையது என்பது எளிதே தெளிவாய் நின்றது.

பிறர்வாழச் சகியாத நெஞ்சம் பெருந்தீமைகளையே கருதி வருதலால் அது பழிபாதகங்களாய் இழிந்து படுகின்றது.

தந்தம்நல் வினையால் செல்வம் சார்ந்தவர் தம்மைக் கண்டு
சிந்தனை பொறா(து)அழுங்கித் தீர்வினுள் மகிழ்வான். – பிரபுலிங்க லீலை

உள்ளத்தே பொறாமையுடையவனது நிலையை இவ்வாறு உலகமறிய விளக்கி இவன் பேரிழவுடையவனாய்த் தீநரகு அடைவான் எனச் சிவப்பிரகாசர் குறித்திருக்கிறார்.

அழுக்காறு இருமையும் கெடுக்கும் ஈனமுடையதாதலால் இனிமையான சுகவாழ்வை விரும்பும் மனிதன் அந்தத் துன்பத்தீயை யாதும் அணுகாமல் அஞ்சியொழுக வேண்டும். அவ்வொழுக்கம் உயர்ந்த விழுப்பத்தை விளைத்தருளும்.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்(து)
அழுக்கா(று) இலாத இயல்பு. 161 அழுக்காறாமை

உள்ளத்தில் அழுக்காறு கொள்ளாதவனே உண்மையான ஒழுக்கம் உள்ளவன் என வள்ளுவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார்.

அழுக்காறு இழுக்குகளில் தாழ்த்தி மனிதநை ஈனம் செய்து வருதலால் அஃது இல்லாதவனே மேன்மகனாய் விளங்குகிறான்.

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

ஒழுக்கா(று) ஒழிக்கும் பொருளனைத்தும்
ஒழிக்கும் இம்மை மறுமையினும்
வழுக்கா(று) அனைத்தும் உறுக்குவிக்கும்
மருங்கு ளார்க்கும் கேடுறுக்கும்
இழுக்கா(று) உடைய எரிநிரையத்(து)
ஏய்க்கும் இதனால் எமகண்டா!
அழுக்கா(று) ஆய பெரும்பகையை
அமரார் இடத்தும் புரியற்க. – விநாயக புராணம்

அழுக்காறு செல்வத்தைக் கெடுத்து சுற்றத்தைத் தொலைத்து இம்மை மறுமைகளை அழித்து எரிநரகத்திலும் கொண்டு போய்க் தள்ளிவிடுமாதலால் அந்தக் கொடிய புன்மையைப் பகைவர் பாலும் செய்யாதே எனத் தன் மகனுக்கு ஒர் அரசன் இவ்வாறு அறிவு போதித்திருக்கிறான். அமரார் - பகைவர். பொறாமையுறுவதால் தனக்கே பலவகையிலும் கேடுகள் உளவாகின்றன. அவ்வுண்மையை ஓர்ந்து கொள்ளாமையால் மனிதன் அதனை மருவி ஊனமாய் ஈனம் உ.றுகின்றான்.

அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கியபுன் மாக்கள்
இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே! 1

வஞ்சனையும் பொய்யும்.உள்ளேவைத்து அழுக்காறாயுளறும்
நெஞ்சனுக்கும் உண்டோ? நெறிதான் பராபரமே. 2

நெஞ்சில் பொறாமையுடையவர் உய்திபெறார்; நெறிகேடராய் நிலைகுலைந்தே போவர்; அப்புலை புகாமல் மக்கள் உய்ய வேண்டும் எனத் தாயுமானவர் இவ்வாறு பரிந்து இரங்கி யிருக்கிறார்.

செல்வம் முதலிய நலன்களைப் பெற்றுத்தான் சிறந்து வாழ வேண்டும் என்றே எந்த மனிதனும் எண்ணுகின்றான்; அந்த இயல்பினை உடையவன் அயலவனுடைய உயர்வுகளை நோக்கி உள்ளம் உவந்து அவன் போலவே தானும் உயர்ந்து கொள்ள விழைந்து முயன்று மேலே போக வேண்டும், அதற்கு மாறாகப் பொறாமை கொண்டு புன்மை மண்டிக் கீழே போவது பாழான வாழ்வாய்ப் பழிபடுகின்றது.

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 /மா தேமா)

அள்ளித்தெண் நீறணியும் தண்டலையார் வளநாட்டில்
ஆண்மை யுள்ளோர்
விள்ளுற்ற கல்வியுள்ளோர் செல்வமுள்ளோர் அழகுடையோர்
மேன்மை நோக்கி
உள்ளத்தில் அழன்றழன்று நமக்கில்லை எனவுரைத்திங்(கு)
உழல்வார் எல்லாம்
பிள்ளைப்பெற் றவர்தமைப்பார்த்(து) இருந்துபெரு மூச்செறியும்
பெற்றி யோரே. - தண்டலையார் சதகம்

உள்ளத்தில் பொறாமையுடையவரது நிலைகளை இது உணர்த்தியுள்ளது. பிள்ளைப் பேறுடையாரைப் பார்த்து மலடிகள் மனம் புழுங்கி ஏங்கிப் பெருமூச்சு விடுவதுபோல் அயலாருடைய உயர்நிலைகளைக் கண்டு பொறாமையாளர் இழிந்து உழல்கின்றார் என்றதனால் அவரது ஈன நிலை எளிதே தெரியலாகும்.

ஒத்த நிலையில் உள்ளவரிடம் உயர்வு காண நேர்ந்தபோதுதான் பெரும்பாலும் பொறாமை உருவாகி வருகிறது. அது உள்ளத்தில் புகுந்தவுடன் அல்லல் பல விளைந்து விடுகின்றது. நெஞ்சம் புழுங்கவே நிலை குலைந்து படுகின்றான்.

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

ஆற்றார் ஆகின், தம்மைக்கொண்(டு)
..அடங்கா ரோ?என் ஆருயிர்க்குக்
கூற்றாய் நின்ற குலச்சனகி
..குவளை மலர்ந்த தாமரைக்குத்
தோற்றாய்; அதனால், அகம்கரிந்தாய்;
..மெலிந்தாய்; வெதும்பத் தொடங்கினாய்,
மாற்றார் செல்வம் கண்டழிந்தால்,
..வெற்றி ஆக வற்றாமோ? 115 மாரீசன் வதைப்படலம், இராமாயணம்

விரக வேதனை அடைந்திருந்த இராவணன் சந்திரனை நோக்கி இவ்வாறு புலம்பியிருக்கிறான். சீதையின் முகத்தை நோக்கி அந்த அழகு தனக்கு இல்லேயே என்று அவன் அகம் கரிந்து மெலிந்து வெதும்பியிருப்பதாக இலங்கை வேந்தன் புலம்பியுள்ளதில் பொறாமையாளர் நிலைமை விளங்கியுள்ளமை வியந்து சிந்திக்கவுரியது.

பொறாமையுறுவதால் சிறுமையே அன்றி வேறு பயன் யாதும் இல்லை, அதனை மருவாமல் மகிமையுடன் வாழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-20, 1:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே