குமரேச சதகம் – தெய்வச் செயல் - பாடல் 85

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சோடாய் மரத்திற் புறாரெண் டிருந்திடத்
துறவுகண் டேவேடுவன்
தோலாமல் அவையெய்ய வேண்டுமென் றொருகணை
தொடுத்துவில் வாங்கிநிற்க

ஊடாடி மேலே எழும்பிடின் அடிப்பதற்
குலவுரா சாளிகூட
உயரப் பறந்துகொண் டேதிரிய அப்போ
துதைத்தசிலை வேடன் அடியில்

சேடாக வல்விடம் தீண்டவே அவன்விழச்
சிலையில்தொ டுத்தவாளி
சென்றிரா சாளிமெய் தைத்துவிழ அவ்விரு
சிறைப்புறா வாழ்ந்த அன்றோ

வாடாமல் இவையெலாம் சிவன்செயல்கள் அல்லாது
மனச்செயலி னாலும்வருமோ
மயிலேறி விளைாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 85

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளைாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

ஒரு மரத்தில் இருபுறாக்கள் இணையாக இருக்க ஒரு வேடுவன் அவற்றின் வாய்ப்பான நிலையைக் கண்டு தவறாமல் அவற்றை ஓரம்பினாலேயே அடித்தல் வேண்டும் என நினைத்து வில்லை வளைத்து ஓர் அம்பு பூட்டிக்கொண்டு நிற்கும்போது,

மேலே எழுந்தால் தாக்கிப் பற்றுவதற்குத் திரியும் இராசாளிப் பறவையும் சுழன்று கொண்டு வானத்திற் பறந்து கொண்டிருக்க, அந்நிலையில் (தன்னை) மிதித்த வில் லேந்திய வேடனின் காலில்,

நன்றாகக் கொடிய நஞ்சையுடைய பாம்பு கடித்தலால் அவ்வேடன் (உயிர்நீங்கி) விழவும் வில்லில் பூட்டிய அம்பு போய் இராசாளியின் உடலில் தைத்ததனால் அதுவும் இறந்து விழவும் சிறகுகளையுடைய அந்த இரண்டு புறாக்காளும் உயிர் தப்பின அல்லவா?,

இவைகளெல்லாம் சிவபிரானுடைய செயல்களே அன்றி (ஒருவருடைய) உளவலிமையினாலும் தவறாமல் உண்டாகுமோ?

கருத்து:

திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-20, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே