சினமெனுந்,தீ மூளின் உயர்நலன்கள் முன்னழியும் - கோபம், தருமதீபிகை 636
நேரிசை வெண்பா
வனத்தீ எழினோ வளர்மரங்கள் யாவும்
இனத்தோ(டு) எரிந்தே இழியும் – சினமெனுந்,தீ
மூளின் உயர்நலன்கள் முன்னழியும் நல்லுயிரும்
மாளும் படிசெய்யு மால். 636
- கோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
வனத்தில் தீ பற்றி எரிந்தால் நல்ல மரங்கள் பல நாசமாய் எரிந்து போகும்; உன் மனத்தில் சினத்தீ எழுந்தால் அரிய நன்மைகள் யாவும் அழிந்து உயிரும் அநியாயமாய் ஒழிந்து போகும்; இதனைத் தெளிந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர். காட்டுத்தீ எனச் சினத்தை இப்பாடல் காட்டியுள்ளது.
நெருப்பு அடுப்பின் அடியிலிருந்தால் பாலைக் காய்ச்சி இதமாய் ஊட்டும், அது கூரையில் ஏறினால், வீட்டை எரித்து வெந்துயர் விளைக்கும். சினமும் அந்த இனமாய்ச் சிந்திக்க வுரியது.
பஞ்ச பூதங்களின் கலப்பால் இந்த உடம்பு அமைந்துள்ளது. இதில் கோபம் தீயின் கூறாய் மருவியிருக்கிறது. கோபத்தை அறவே ஒழிக்க யாராலும் முடியாது. இயற்கைச் சூடாய் உள்ளே அது இணங்கியிருக்கிறது. உணர்ச்சியும், நேர்மையும் மிகுந்தவர்களிடத்தில் அது விரைந்து வெளிப்படுகிறது. ’கோபம் உள்ள இடத்தில் குணமிருக்கும்” என்பது பழமொழி. இது அரிய நுண்பொருளை மருவியுள்ளது.
நல்ல நீதிமான்கள் அநீதிகளைக் காண நேர்ந்தால் உள்ளம் கொதிக்கிறது; உரைகள் சினந்து வருகின்றன. இது தீய கோபத்தோடு சேராது; தூய திருத்தமாய்த் தோன்றி நிற்கிறது. பொய்யும் மெய்யாதல் போல் சினமும் குணம் ஆகிறது.
தவறு கண்டபொழுது தந்தை பிள்ளைகளைச் சினந்து கண்டிக்கிறான்; தலைவன் வேலையாட்களை வெகுண்டு திருத்துகிறான். இவ்வாறான கோபம் செவ்வி தோய்ந்து வருதலால் அது வெவ்விய தீமையாய் வெறுக்கப்படாது. நல்ல குறிக்கோளோடு வரும்பொழுது கோபம் ஒரு குணமாய் மாறுகிறது. வெகுளிச்சுவை என இனிமையான பேரால் அது குறிக்கப்படுகிறது.
ரெளத்திர ரசம் என்பது உருத்திர மூர்த்தியின் உக்கிர வீர கோபத்தை உணர்த்தியுள்ளது. தீமைகளைத் தொலைத்து நன்மைகளைப் பாதுகாக்க எழுகின்ற வெகுளி விழுமிய வீரமாய் விளங்கி மிளிர்கின்றது. தேவ கோபம் என்பது இங்கே சிந்திக்கத்தக்கது.
தரும நீதிகளின் பொருட்டுப் பெரியோர்களிடமிருந்து எழுகின்ற கோபம் போற்றப்படுதலால் அதன் ஏற்றம் தெரியலாகும். நன்மை தோய்ந்தது செம்மை வாய்ந்தது.
கரும சாதனமாய் உரிய இடத்தில் உறுகிற முனிவு இனிமையாய் அமைகின்றது. கோபத்தில் பாவம் கலவாதது ஆபத்திற்கு உதவிசெய்து வருகிறது. அதனை அனுபவத்தில் அறிந்து வருகிறோம். தன் கோபத்தால் பிறர்க்கு வீணே கொடிய துயரங்களை விளைக்கும்போதுதான் அவன் பாவத்தை அடைய நேர்கின்றான். பாபம் படியாத கோபம் பயன் படிந்து வருகிறது.
Be ye angry, and sin not. - Bible
'நீங்கள் கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்' என்னும் இது இங்கே அறியவுரியது. தீமையில்லாத கோபமும் உண்டு என்பதை இதனாலுணர்ந்து கொள்ளுகிறோம். இலகுவாக எதிலும் முனிவு செய்பவரைச் சுலப கோபர் என்பர்.
இவ்வாறு உல்லாச நிலையில் இல்லாமல் பொல்லாத புலையில் நிமிர்ந்து நீண்டால் அக்கோபம் கொடிய தீமையாய் மூண்டு முடிகிறது. ஆங்கார ஆணவங்களால் ஓங்கி எழுவது அவலக் கேடுகளை விரைந்து விளைத்து விடுகிறது. தெள்ளிய மதிமான்களையும் தேர்ந்த தவசிகளையும் கோபம் நிலை குலைத்துள்ளமையால் அதனை வெல்வது எவ்வளவு கடினம்! என்பது விளங்கி நின்றது.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
'ஒள்ளிய தவத்தால் கல்வியால் உணர்வால்
உண்மையால் உணர்ந்தவர் உயர்ந்தோர்
எள்ளிய குற்றம் இல்லவர் எய்தும்
வெகுளியால் இப்படிப் பட்டார்
தெள்ளிய வீரர் சிலையினாய்! புறத்துத்
திறப்பகை வெல்லலாம் சினமாம்
உள்ளுறு பகையை அறிந்தவர் உலகத்(து)
ஒருவரும் வென்றவர் இல்லை. 1
மூங்கிலில் பிறந்த முழங்குதீ மூங்கில்
முதலற முருக்குமா போல
தாங்கரும் சினத்தீ தன்னுளே பிறந்து
தன்னுறு கிளையெலாம் தகிக்கும்;
ஆங்கதன் வெம்மை அறிந்தவர் கமையால்
அதனையுள் அடக்கவும் அடங்கா(து)
ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும்
உட்பகை உலகில்வே(று) உண்டோ? 2 உத்தரகாண்டம், இராமாயணம்
அரிய பெரியோர்களும் வெகுளியால் சிறுமையடைந்துள்ளனர்; அது மூண்டபோது காட்டுத்தீ போல் கடுங்கேடுகளை விளைத்து விடும், அதனை வென்றவர் அரியர் என இலக்குவனை நோக்கி இராமன் இப்படி உரைத்திருக்கிறான்.
மகாவீரனான இராமன் கோபத்தின் நிலைமையை இவ்வாறு குறித்திருத்தலால் அதன் கொடுமை வன்மைகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்ளுகிறோம். கொடியது நீங்கின் இனியது ஓங்கும்.
சினத்தீயை மூள விடாமல் அடக்கி யாள்பவரே அதிசய நிலையினர்; எல்லா மகிமைகளையும் அவர் எய்தி மகிழ்கின்றார்.
பொல்லாச் சினத்தைப் புலையடக்கி வென்றவனே
வல்லான் எனநின்றான் வந்து.
வெகுளியை வென்று வீரனாய் விளங்குக என்கிறார் கவிராஜ பண்டிதர்.