அவளின் விரதம்

அவள் -
தினந்தோறும்
தவறாமல் விரதமிருப்பாள் -
ஒரு நாளைக்கு
ஒருவேளை மட்டுமே
உணவினை
உண்பாள் - மற்ற
இருவேளையும்
இறைவனுக்கான விரதமென்பாள்-

திங்கள் கிழமை
சிவனுக்கான விரதமென்றும்
செவ்வாய் கிழமை
முருகப் பெருமானுக்கு விரதமென்றும்
புதன் கிழமை
பெருமாளுக்கான விரதமென்றும்
வியாழக் கிழமை
சாய் பாபா விரதமென்றும்
வெள்ளிக்கிழமை
சக்திக்கான விரதமென்றும்
சனிக்கிழமை
ஆஞ்சநேயருக்கான விரதமென்றும்
ஞாயிற்றுக் கிழமை
சூரிய பகவனுக்கான விரதமென்றும்
இப்படி - விரதங்களுக்கான
இறைவனை பட்டியலிட்டு -பின்
தன் மனதுக்குள்ளே
தான் வணங்கும் இறைவனிடத்தே -
மன்னிப்பையும் கேட்டு
மங்கையவள் கூறினாள் -

உலகத்தோரின் பழிச்சொல்லுக்கு
உள்ளத்தால் தினமும் அஞ்சினேன்-

அவள் ஏதுமற்றவள் என்றும் -
அவள் அநாதைப் பெண்ணென்றும் -
அனைவரும் ஏளனம் செய்து
அவமரியாதை செய்த காரணத்தால்....

அந்த அவமரியாதை நீங்க
அனைத்து நாளும் விரதமிருந்தேன்...

அனைத்தும் அறிந்த இறைவா -
அத்தனை விரதமும்
ஒன்றின் விரதமே யாகும் - அந்த
ஒன்றின் விரதம் யாதெனில் -
வறுமையின் விரதமாகும்...!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (24-Jul-20, 10:55 pm)
Tanglish : avalin viratham
பார்வை : 133

மேலே